Wednesday, September 26, 2007

மலேசியா போய் பிச்சை எடுத்த தமிழர்!

மலேசியாவில் வேலைக்குப் போய் பிச்சை எடுத்த நெல்லை தமிழர்!

புதன்கிழமை, செப்டம்பர் 26, 2007

சுரண்டை:

அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு, வெளிநாட்டு வேலைதான் வேண்டும் என்று மலேசியாவுக்கு சென்று, கடைசியில் பிச்சை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்ட நெல்லை மாவட்டம் சுரண்டையைச் சேர்ந்த இளைஞர் ஒரு வழியாக சொந்த ஊர் திரும்பியுள்ளார்.

சுரண்டை சந்தைபஜார் செண்பகக் கால்வாய் ஓடைப் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரன். கட்டிட தொழிலாளியான இவர் வீட்டுக்கு கடந்த ஆண்டு கடையநல்லூர் சொக்கம்பட்டி பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த முத்துபாண்டியன் என்பவர் வந்தார்.

மலேசியாவுக்கு கட்டிட தொழிலாளர்கள் தேவைப்படுகிறார்கள் என்றும் மாதம் ரூ.10 ஆயிரத்திற்கு மேல் சம்பளம் என்றும் கூறியுள்ளார். மேலும் மலேசியாவிற்கு செல்லவும், வேலை செய்யும் நிறுவனத்திற்கு கொடுக்கவும் ரூ.85 ஆயிரம் செலவாகும் என்றார்.

இதை உண்மை என்று நம்பிய சந்திரன் குடும்பத்தினர், அவரை மலேசியாவிற்கு வேலைக்கு அனுப்ப சம்மதித்தனர். இதற்காக சிரமப்பட்டு பலரிடம் கடன் வாங்கி பணத்தை தயார் செய்தனர்.

பின்னர் கடந்த 10-03-2006ல் ரூ.22 ஆயிரமும், 05-06-2006ல் ரூ.60 ஆயிரமும் என மொத்தம் ரூ.82 ஆயிரத்தை சந்திரன் வீட்டார் முத்துபாண்டியனிடம் கொடுத்தனர். பணத்தை பெற்றுக் கொண்ட முத்துப்பாண்டியன் பாஸ்போர்ட், விசா தயார் செய்து சென்னைக்கு வர செய்தார்.

சென்னையில் ஒரு லாட்ஜில் அறை எடுத்து அங்கு சந்திரனை தங்க வைத்தார். அப்போது சுரண்டையை சேர்ந்த கோமுச்சாமி, காந்தி ஆகியோரும் மலேசியா செல்ல வந்திருந்தனர். சில நாட்களில் அவர்கள் 2 பேரையும் முத்துப்பாண்டியன் மலேசியாவுக்கு அனுப்பி வைத்தார்.

சில நாட்களுக்கு பிறகு சந்திரனிடம் மதுரையை சேர்ந்த அருணகிரி என்பவர் முலம் பாஸ்போர்ட், விசா கொடுக்கப்டடது. அதை பெற்றுக் கொண்ட சந்திரன், விமானம் முலம் மலேசியா சென்றார்.

அங்கு சென்ற பின் அது மலேசியாவில் தங்கி வேலை செய்யக்கூடிய விசா இல்லை எனவும், போலி விசா என்றும் சந்திரன் அறிந்தார். இது பற்றி முத்துப்பாண்டியனிடம் கேட்டபோது அருணகிரி அங்கு வருவார், அவரிடம் கேளுங்கள் என சொல்லியதோடு அவரை தொடர்பு கொள்ள முடியாதபடி போன் நம்பரையும் மாற்றி விட்டாராம்.

இதனிடையே மலேசியா சென்ற அருணகிரி சந்திரனின் பாஸ்போர்ட்டை நைசாக பேசி வாங்கி அதை ரூ.10 ஆயிரத்திற்கு விற்றுள்ளார். பாஸ்போர்ட், விசா பறிபோனதை எண்ணி கலங்கிய சந்திரன் மலேசியாவில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்துள்ளார்.

பல நாட்கள் பட்டினி கிடந்தும், பிச்சை எடுத்தும் வயிற்று பாட்டை கவனித்துள்ளார். பின்னர் ஒரு வழியாக ஊருக்கு திரும்பிய சந்திரன் முத்துப்பாண்டியனை சந்தித்து தான் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டுள்ளார். அதற்கு முத்துப்பாண்டியன் மறுத்துள்ளார்.

இதனால் முத்துப்பாண்டியன் பற்றி கடையநல்லூர் போலீசில் சந்திரன் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லையாம். இதையடுத்து நெல்லை கலெக்டரிடம் அவர் புகார் கொடுத்துள்ளார்.

சந்திரன் போன்று ஏராளமானோர் போலி விசா மூலம் மலேசியா அனுப்பப்பட்டுள்ளதாகவும், அங்கு அவர்கள் தலைமறைவு வாழ்க்கை வாழ்வதாகவும் சந்திரன் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் இம்மாவட்டத்தில் வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்ப பல்வேறு நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுவனங்களை அரசும், காவல்துறையும் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டியது மிக..மிக..அவசியம்.

மேலும் இதே போன்று செங்கோட்டையிலிருந்து வெளிநாடுக்கு கட்டிட வேலைக்கு சென்ற 2 இளைஞர்கள் கண் பார்வை பறிபோனதை நாம் ஏற்கனவே எழுதியிருந்தது குறிப்பிடதக்கது.

நன்றிங்க

அவலம்.

4 comments:

புலமாடன் said...

"தமிழனைத் தமிழன் சாப்பிடுறாண்டா தம்பிப்பயலே

இது மாறுவதெப்போ தீருவதெப்போ தம்பிப்பயலே"

என்று பட்டுக்கோட்டையார் மாதிரிப் புலம்ப வேண்டியதுதான்.

இதில்,
"தமிழன் என்றோர் இனமுண்டு

தனியே அவர்க்கோர் குணமுண்டு"

என்று பெருமை வேறு.

இதுதானோ அக்குணம்..?

முஸ்லிம் said...

புலமாடன் உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

விசா தொடர்பாக எவ்வளவோ ஏமாற்றும், ஏமாற்றங்களும் நடந்து மோசடிகள் அம்பலப்பட்டுக் கொண்டிருந்தாலும் இன்னும் எச்சரிக்கை அடையாமல் ஏமாந்து கொண்டிருப்பது தான் அவலம்!

பிறைநதிபுரத்தான் said...

பராசக்தியில் சிவாஜி பேசிய கலைஞரின் வசனம்தான் நிணைவுக்கு வந்தது 'பிறக்க ஒரு நாடு -பிழைக்க ஒரு நாடு தமிழ்நாட்டின் தலையெழுத்துக்கு நான் என்ன விதிவிலக்கா?'. அந்தக்காலம் போய் தமிழர்கள் பிறக்க ஒரு நாடும் - பிச்சையெடுக்க ஒரு நாடாகவும் ஆகிவிட்டது.

முஸ்லிம் said...

பிறைநதிபுரத்தான் உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

பிச்சையெடுக்கும் நிலை ஏற்பட்டால் அதற்கு ஊரு, நாடு என்ற பேதமில்லை.

82 ஆயிரம் ரூபாயை எவனிடமோ அள்ளிக்கொடுத்து ஏமாந்ததைவிட அந்த தொகையை முதலீடு செய்து உள்ளூரிலேயே உழைத்தால் நல்ல முன்னேற்றம் அடையலாம். இதுக்கு மலேசியா போக வேண்டிய அவசியமில்லை.