Saturday, September 01, 2007

நீங்க அள்ளாட்டி நாங்க அள்ளுவோம்.

நீங்க அள்ளாட்டி நாங்க அள்ளுவோம்: ஜெ. வார்னிங்!

செப்டம்பர் 01, 2007

சென்னை: சென்னை நகரில் குப்பைகளை அள்ளும் பணியை அரசாலும், மாநகராட்சியாலும் மேற்கொள்ள இயலாவிட்டால் அதிமுக தொண்டர்கள் குப்பை அள்ளும் பணியில் ஈடுபடுவார்கள் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா எச்சரித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மாநகரம் முழுவதும் கடந்த 2 வார காலமாக குப்பைகள் அள்ளப்படாமல் மாநகரம் முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது.

கடந்த 7 வருடங்களாக குப்பை அள்ளும் பணியில் ஈடுபட்டு வந்த ஓனிக்ஸ் நிறுவனத்தின் ஒப்பந்தம் முடிந்து விட்டது என்றும், தற்போது இப்பணி நீல்மெட்டல் பெனல்கா என்ற நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளாகவும் இதற்குக் காரணம் கூறப்படுகிறது.

தன்னுடைய ஒப்பந்தக்காலம் முடியப் போகிறது என்பதால், கடந்த சில நாட்களாகவே சென்னையில் உள்ள சில வார்டுகளில் ஓனிக்ஸ் நிறுவனம் சரியாக குப்பை அள்ளவில்ல என்று மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் அழுகிப் போன காய்கறிகளும், பழங்களும், ஆடு, கோழி போன்றவற்றின் இறைச்சிக் கழிவுகளும் மருத்துவமனை கழிவுகளும் குப்பைகளாக தெருக்களில் குவிந்து கிடக்கின்றன.

கடந்த 3 நாட்களாக சென்னையில் மழை பெய்ததால் அனைத்துத் தெருக்களிலும் கழிவு நீர் குட்டைகளாக காட்சியளிக்கின்றன. இதனால் நிலத்தடி நீர் மாசுபடுவதோடு, தொற்று நோய்களும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஓனிக்ஸ் நிறுவனம் வைத்திருந்த குப்பைத் தொட்டிகளும் எடுத்துப் போகப்பட்டு விட்டதால் குப்பைகளை எங்கு போய் கொட்டுவது என்று தெரியாமல் மக்கள் திகைத்து நிற்கின்றனர்.

நீல்மெட்டல் பனல்கா நிறுவனம் மிகப் பெரிய நிறுவனம் கிடையாது. டெல்லியில் ஒரு சிறிய இடத்தைத்தான் அவர்கள் பராமரித்து வருகிறார்கள் என்று கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில் மிகச் சிறிய குப்பைத் தொட்டிகள் மற்றும் வண்டிகளை வைத்துக் கொண்டு அவர்கள் மலை போல குவிந்து கிடக்கும் குப்பைகளை அள்ளி வருவதைப் பார்த்து மக்கள் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர்.

குப்பை அள்ளும் பணியில் அரசால் செயல்பட முடியாவிட்டால், பதவி விலகிக் கொள்ளட்டும். அதிமுக உடன்பிறப்புகள் குப்பைகளை அள்ளும் பணியில் ஈடுபடுவார்கள் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

ஏற்கனவே விஜயகாந்த்தும், அரசும், மாநகராட்சியும் விரைந்து செயல்படாவிட்டால் தேமுதிக தொண்டர்கள் குப்பை அள்ளுவார்கள் என அரசை எச்சரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

குன்னூரில் செப் 3ல் போராட்டம்:

இந் நிலையில் ஜெயலலிதா வெளியிட்டுள்ள இன்னொரு அறிக்கையில்,

பசும் தேயிலைக்கு உயர்நீதிமன்றம் குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்ய உத்தரவிட்டும் இதுவரை திமுக அரசு செயல்படுத்தாமல் தேயிலை தோட்ட விவசாயிகளை வஞ்சித்து வருகிறது. தேயிலை தோட்டங்களில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் கொத்தடிமைகள் போல் நடத்தப்படுகிறார்கள்.

கோத்தகிரியில் உள்ள மேகநாடு எஸ்டேட்டிற்கு செல்வதற்காக காடுகளை அழித்து சாலைகளை போடும் திமுக அரசு, கோவையில் இருந்து கொலக்கொம்பை, மானார் வழியாக உதகமண்டலம் செல்லும் 3வது மாற்றுப் பாதையை அமைக்காமல் வனத்துறையை காரணம் காட்டி கிடப்பில் போட்டுள்ளது.

இதனால் அனைத்துக் கோரிக்கைகளையும் நிறைவேற்ற வலியுறுத்தி வரும் செப்டம்பர் 3ம் தேதி (திங்கட்கிழமை) காலை 11 மணிக்கு குன்னூர் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு, அதிமுக தேர்தல் பிரிவுச் செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்பாட்டமும், அதனைத் தொடர்ந்து பொதுக்கூட்டமும் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

நன்றிங்க

//குப்பை அள்ளும் பணியில் அரசால் செயல்பட முடியாவிட்டால், பதவி விலகிக் கொள்ளட்டும். அதிமுக உடன்பிறப்புகள் குப்பைகளை அள்ளும் பணியில் ஈடுபடுவார்கள் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.//

நகரத்தை சுத்தம் செய்ய கிளம்பியிருக்கும் ஜெயாக்கா வாழ்க!

7 comments:

முஸ்லிம் said...

சென்னையில் குப்பை அள்ளிய எம்.எல்.ஏ, அதிமுகவினர் கைது

செப்டம்பர் 01, 2007

சென்னை: சென்னையில் தேங்கிக் கிடக்கும் குப்பைகளை அள்ள முயன்ற அதிமுக எம்.எல்.ஏ. வி.பி.கலைராஜன் உள்ளிட்ட ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை நகரில் தேங்கிக் கிடக்கும் குப்பையால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்தக் குப்பைகளை அகற்ற அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் அதிமுக தொண்டர்கள் குப்பைகளை அகற்றுவார்கள் என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா எச்சரித்திருந்தார்.

அதன்படி இன்று காலை வடபழனி, மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, சைதாப்பேட்டை ஆகிய இடங்களில் இன்று அதிமுக தொண்டர்கள் திரண்டு குப்பைகளை அள்ளும் நடவடிக்கையில் இறங்கினர்.

தி.நகர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ வி.பி.கலைராஜனும் இதில் கலந்து கொண்டார். ஆனால் அவர்களைத் தடுத்து நிறுத்திய போலீஸார் அனைவரையும் கைது செய்து சம்பந்தப்பட்ட பகுதி காவல் நிலையங்களுக்குக் கொண்டு சென்றனர்.

ஜெ. கண்டனம்:

குப்பை அள்ளிய அதிமுகவினரை காவல்துறையினர் கைது செய்திருப்பதற்கு ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நல்லெண்ணத்தோடு குப்பை அள்ளியவர்களை கைது செய்வது எந்த வகையில் நியாயம். உடனடியாக கைது செய்யப்பட்ட அதிமுகவினரை விடுதலை செய்ய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

நன்றிங்க, thatstamil> 01.09.2007

Tharuthalai said...

அள்ளுங்கடா... அறிக்கை விடாதீங்க.
விஜயகாண்டு அறிக்கை, ஜெயலலிதா அறிக்கை....
இப்படி அறிக்கைவிட்டே அரசியல் நட்த்துறதுனாலதான் பதவிக்கு வந்தவுடன் கை அரிக்குதோ?

----------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள்-'07)
என் வாழ்க்கை இணையம் முழுவதும் கழிந்து கிடக்கிறது

Moulasha said...

குப்பை அள்ளிய ரத்தத்தின் ரத்தங்களை- காவல்துறை கைது செய்ததை வன்மையாக கண்டிக்கிறேன்.

எம்.எல்.ஏ.க்களோடு சேர்ந்து செல்வி ஜெயலலிதாவும், சோர்ந்து போகும் வரை குப்பை அள்ளி - தனது ஆட்சியின்போது சட்டமன்றத்தில் குப்பைகொட்டி காலம் கழித்ததற்கு பரிகாரம் தேடிக்கொள்ளட்டுமே.

முஸ்லிம் said...

Tharuthalai, Moulasha உங்கள் வரவுக்கு நன்றி.

பிறைநதிபுரத்தான் said...

தோழர்களே! அப்படியே இரத்தத்தின் இரத்தங்களை எங்க ஊர் பக்கம் வரச்சொல்லுங்களேன்..கடந்த இரண்டு வாரமா 'குப்பை'
அல்லாம அப்படியே கிடந்து நாறுது..

முஸ்லிம் said...

பிறைநதிபுரத்தான் உங்கள் வரவுக்கு நன்றி.

சென்னையில் மட்டும் Free சேவை.
உங்க ஊருக்கு வந்தால் சம்பளம் என்ன தருவீங்க?

பிறைநதிபுரத்தான் said...

சம்பளமெல்லாம் கிடையாது. ஆட்சியில் இருக்கும்போது எவ்வளவு வேண்டுமானாலும் சம்பாதித்துக்கொள்ளட்டும் என்றுதான் 'கண்டுக்காம' விட்டோமே..அப்போது சம்பாதித்ததுதான் இன்னும் ஐந்தாறு தலைமுறைகளுக்கு வீட்டிலே 'நின்றுகொண்டு' 'உட்கார்ந்துக்கொண்டு'மற்றும் 'படுத்துக்கொண்டு'திங்கும் அளவிற்கு சேர்ந்திருக்கிறதே!.

ஒழுங்காக எங்க ஊருக்கு வந்து குப்பை அள்ளினால், அடுத்த சட்டமன்ற தேர்தலில் - வாக்களித்து ஆட்சிக்கட்டிலில் அமரச்செய்வோம்..படுத்து நிம்மதியாக 'கொட்டாவி' விட்டு தூங்கிக்கொண்டே முழுசா ஐந்து ஆண்டுகள் 'சம்பாதிக்க' வாய்ப்புத் தருவோம்!!!!