குப்பை தொட்டியில் ஆண் குழந்தையை வீசிய தாய் கைது
சென்னை : குப்பை தொட்டியில் வீசப்பட்ட ஆண் குழந்தையின் தாய் கைது செய்யப்பட்டார். "திருமணம் நிச்சயிக்கப்பட்டவருடன் நெருங்கி பழகியதால் கர்ப்பமடைந்து குழந்தை பெற்றேன்' என அப்பெண், போலீசாரிடம் கூறினார். தாயுக்கும், குழந்தைக்கும் மருத்துவச் சோதனை நடைபெற உள்ளது.
சென்னை சைதாப்பேட்டை, ஜோன்ஸ் லேன் சடையப்பன் தெருவைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி; "கேட்டரிங்' தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி சாந்தி(38) சமையல் வேலை செய்கிறார். இவர்களது மகள் சிந்துஜா(20); பிளஸ் 2 படித்தவர்.கும்பகோணத்தைச் சேர்ந்தவர் பழனி(27). சென்னையில் டிரைவாக வேலை செய்து வருகிறார். இவருக்கும், சிந்துஜாவுக்கும் பழக்கம் ஏற்பட்டதால் காதலித்து வந்தனர். காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த பின்பும், காதலர்கள் உறுதியாக இருந்தனர்.பின்னர், இரு வீட்டாரும் சேர்ந்து அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். சென்னையில் வரும் ஞாயிற்றுக் கிழமை திருமணம் நடக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
வருங்கால கணவருடன் "நெருங்கி' பழகிய சிந்துஜா கர்ப்பம் அடைந்தார். இவ்விவரத்தை பழனியிடம் தெரிவிக்கவில்லை. தாயிடம் கூட விஷயத்தை சொல்லாமல் சிந்துஜா மறைத்தார்.
வயிறு பெரிதாக இருந்ததை வெளியில் காட்டிக் கொள்ளாமல் உடை அணிந்து வந்தார். நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்த சிந்துஜாவுக்கு வயிற்று வலி ஏற்பட்டது. தன்னந்தனியாக போராடி, சுகப்பிரசவத்தில் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். இவ்விவரம் வெளியில் தெரிந்தால் உறவினர்கள் அசிங்கமாக பேசுவர் என சிந்துஜா பயந்தார்.குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்தில் கேரி பேக்கில் வைத்து, வீட்டின் சமையல் அறையில் வைத்து விட்டார். வீடு திரும்பிய அவரது தாய் சாந்தியிடம், "கேரி பேக்கில் பூனைக் குட்டி உள்ளது. அதனை மெதுவாக வெளியில் விட்டு விடுங்கள்; தூக்கி போட்டு விடாதீர்கள். பாவம் அடிபட்டு விடும்' என கூறினார்.
கூலி வேலை செய்து வரும் பக்கத்து வீட்டுக்காரர் சாலியா(55) என்பவரிடம் கேரி பேக்கை சாந்தி கொடுத்தார். அவர், குப்பை தொட்டி அருகே கேரி பேக்கை வைத்துவிட்டு சென்று விட்டார். அதில் இருந்து குழந்தையின் அழுகுரல் கேட்டது.குப்பை தொட்டி அருகேயுள்ள வீட்டில் இருந்த கஸ்துõரி, குழந்தையை தூக்கினார். சுத்தம் செய்து, சட்டை அணிவித்து புட்டிப் பால் கொடுத்தார். இத்தகவல் குமரன் போலீசாருக்கு சென்றது. செனாய் நகரில் உள்ள "புரபஷனல் சைல்டு வெல்பேர்' என்ற தொண்டு நிறுவனத்தில் போலீசார் குழந்தையை ஒப்படைத்தனர்.
போலீசாரின் விசாரணையில் சாந்தியும், அவரது மகள் சிந்துஜாவும் சிக்கினர். "குப்பை தொட்டியில் வீசிய குழந்தை தன்னுடையது தான்' என போலீசாரிடம் சிந்துஜா ஒப்புக் கொண்டார்.சிந்துஜா அளித்த வாக்குமூலத்தின் விவரம்: எனக்கும், எனது காதலர் பழனிக்கும் வரும் 16ம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டது. பெற்றோர் இருவரும் சமையல் வேலைக்கு சென்று விடுவதால், பழனி அடிக்கடி வீட்டிற்கு வந்து சென்றார். வருங்கால கணவர் என்பதால் அவரை அனுமதித்தேன்.கர்ப்பமடைந்த நான், வீட்டில் ஆண் குழந்தையை பெற்றெடுத்தேன். குழந்தை பிறந்த விவரம் வெளியில் தெரிந்தால், எனது பெற்றோர் தற்கொலை செய்து கொள்வர் என பயந்தேன்.
அதனால், குழந்தையை கேரி பேக்கில் வைத்து நாடகமாடினேன்.இந்த விவரம், எனது கணவர் மற்றும் அவரது குடும்பத்திற்கு தெரிந்து விட்டது. என்னையும், எனது குழந்தையையும் பழனியும் அவரது குடும்பத்தினரும் ஏற்றுக்கொள்ள சம்மதித்து விட்டனர். எனது கணவர் கும்பகோணத்தில் இருந்து நாளை(இன்று) சென்னை வருகிறார். எங்களது திருமணம் விரைவில் நடைபெற உள்ளது.இவ்வாறு சிந்துஜா போலீசாரிடம் கூறினார். சிந்துஜா, குழந்தைக்கு மருத்துவ பரிசோதனை:
தி.நகர் துணை கமிஷனர் லட்சுமி உத்தரவின் பேரில், அசோக் நகர் உதவி கமிஷனர் சுப்புலட்சுமி இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தினார். குழந்தையை பெற்றெடுத்ததாக சிந்துஜா ஒப்புக் கொண்டார். அவர் மீது 317(குழந்தையை பெற்றெடுத்து அனாதையாக தெருவில் விடுதல்) பிரிவின் கீழ் சப்இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் வழக்கு பதிவு செய்தார். கைது செய்யப்பட்ட சிந்துஜா, இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். சிந்துஜாவுக்கும், குழந்தைக்கும் மருத்துவச் சோதனை நடைபெற உள்ளது. அதன் பின், தொண்டு நிறுவனத்தில் உள்ள குழந்தை சிந்துஜாவிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட உள்ளது.
நன்றிங்க, தினமலர் 12/09/2007
''மலடி மலடியென்று வையகத்தார் ஏசாமல்
தாயென்ற பெருமையினை மனங்குளிரத் தந்தவனே
கொடிக்குக் காய் பாரமா..?
பெற்றெடுத்த குழந்தை தாய்க்குப் பாரமா..?''
No comments:
Post a Comment