Friday, August 22, 2008

காலத்தின் சுழற்ச்சி...

நாடகம் இனிதே முடிந்திருக்கிறது. சரியாக ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு தான் அணிந்து கொண்ட வேடத்தை அவரே கலைக்கத் தொடங்கினார். தற்போது முற்றிலுமாகக் கலைத்திருக்கிறார் பர்வேஸ் முஷரஃப். ஆம். கடந்த திங்கள்கிழமை தன்னுடைய அதிபர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்து பாகிஸ்தான் உள்ளிட்ட அத்தனை தேசங்களையும் தன்னை நோக்கித் திருப்பியிருக்கிறார்.

பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப்பை அதிரடியாக நகர்த்திவிட்டு ஆட்சிக்கு வந்த முஷரஃப், தற்போது திடீரென பதவி விலகியதற்கு என்ன காரணம் என்று தெரிந்துகொள்ள வேண்டுமானால் காலச் சக்கரத்தைக் கொஞ்சம் பின்னோக்கிச் சுழற்றவேண்டும். ஆகஸ்டு 11, 1943. பழைய டெல்லியில் ஒரு சாதாரண மத்தியதர முஸ்லிம் குடும்பத்தில் பிறந்தவர் முஷரஃப். பிரிவினையின்போது, பாகிஸ்தானுக்கு இடம்பெயர்ந்த பல்லாயிரக்கணக்கான குடும்பங்களுள் அவருடையதும் ஒன்று. சாதாரண ஜவானாகத் தன்னை பாகிஸ்தான் ராணுவத்தில் இணைத்துக்கொண்ட முஷரஃப் பிறகு கமாண்டராக, மேஜராக, மேஜர் ஜெனரலாக, லெஃப்டினண்ட் ஜெனரலாக என்று படிப்படியாக ராணுவப் பதவிப் படிக்கட்டுகளில் மேலேறி வந்து, ராணுவத் தளபதி ஆனார்.

உள்நாடு மற்றும் அக்கம்பக்கத்து நாடுகளில் மாத்திரமே பெயரளவில் அறிமுகம் ஆகியிருந்த முஷரஃப், அக்டோபர் 12, 1999 அன்று பாகிஸ்தானின் ஆட்சி அதிகாரத்தை அதிரடியாகக் கைப்பற்றிய நாளில்தான் உலகம் முழுவதும் பிரபலமானார். அனைத்து ஊடகங்களும் அவருடைய பெயரை உச்சரிக்கத் தொடங்கின.

மூன்று ராணுவ உயரதிகாரிகள் மற்றும் அவர்களுக்கு ஒத்தாசையாக சுமார் நூறு ஜவான்கள் கும்பலாக பிரதமர் நவாஸ் ஷெரீபின் அலுவலகத்துக்குள் ஒருநாள் நுழைந்தனர். `என்ன விஷயம்?' என்று கேட்டார் பிரதமர். `மன்னிக்க வேண்டும். உங்களைக் கைது செய்கிறோம்'. ராணுவப் புரட்சி நடந்திருப்பதை ஷெரீப்பால் உணர்ந்துகொள்ளமுடிந்தது. இப்படித்தான் அதிரடியாகத் தனது கணக்கைத் தொடங்கினார் முஷரஃப்.

இந்தியா தொடங்கி அத்தனை தேசங்களும் ராணுவப் புரட்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்தன. சிலர் மெல்லிய குரலில். வேறு சிலர் உரத்த குரலில். ஆனாலும் அடுத்த இரண்டாண்டுகளுக்கு பாகிஸ்தானில் ராணுவ ராஜாங்கம்தான் நடந்துகொண்டிருந்தது. சட்டாம்பிள்ளையான முஷரஃப் நினைத்ததுதான் சட்டம். போட்டதுதான் கையெழுத்து. சகலம் முஷரஃப் மயம். சாவகாசமாக இரண்டாண்டுகள் ஆட்சி செய்து முடித்தவர் 2001-ல் `பாகிஸ்தானுக்கு புதிய அதிபரை நியமித்திருக்கிறேன். பெயர், பர்வேஸ் முஷரஃப்' என்ற ரீதியில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். ஆம். அவரே அதிபராகவும் ஆனார்.

என்னதான் பாகிஸ்தானுக்கு அதிபர் என்றாலும்கூட அமெரிக்காவுக்கு செல்லப்பிள்ளையாக மாறுவது முக்கியம் என்பதால் அதற்கான வாய்ப்புகள் எப்போது வரும் என்று காத்துக் கொண்டிருந்தார். அந்த சமயம் பார்த்து, `அல்காயிதாவை அழிக்கிறேன், பின்லேடனைப் பிடிக்கிறேன்' என்று ஆப்கனுக்குள் அமெரிக்கப் படைகள் நுழைய, இதுதான் சமயம் என்று தீவிரவாதத்துக்கு எதிரான யுத்தத்துக்கு என்னுடைய பரிபூரண ஆதரவு என்று அறிவித்தார். பாகிஸ்தான் அதிபரா இப்படிப் பேசுகிறார் என்று எல்லோருமே வாய் பிளந்தனர். இதன்மூலம் அமெரிக்காவிடம் அவருக்கு நல்ல பிள்ளை என்ற அந்தஸ்து கிடைத்தது.

கிடைத்த இமேஜைப் பயன்படுத்தி அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு தன்னுடைய அதிபர் பதவியை நீட்டிக்கொள்வதற்கான மசோதாவை நாடாளுமன்றத்தில் கொண்டுவர முயற்சி செய்தார் முஷரஃப். எதிர்க்கட்சிகள் கொந்தளித்துவிட்டன. இது கடைந்தெடுத்த மோசடி என்று சீறின. ஆனாலும் சாம, பேத, தான, தண்ட முறைகளைப் பயன்படுத்தி மசோதாவை நிறைவேற்றிவிட்டார் முஷரஃப்.

இது பலத்த சர்ச்சைகளைக் கிளப்பவே, `முறைகேடுகள் நடந்தது வாஸ்தவம்தான். அதற்காக பகிரங்க மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்' என்றார் முஷரஃப். இதன்மூலம், தான் எத்தனை தேர்ந்த அரசியல்வாதி என்பதை எல்லோருக்கும் நிரூபித்தார்.

அதிபராக இருந்துவிட்டுப் போங்கள். ஆனால் நாடாளுமன்றத்துக்குத் தேர்தல் நடத்துங்கள் என்று உத்தரவிட்டிருந்தது உச்சநீதிமன்றம். அதற்கேற்ப 2002-ல் தேர்தல் நடந்தது. அவருடைய பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (காயிதே அஜம்) கட்சி களத்தில் இறங்கியது. ஆனால் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இருந்தபோதும் தன்னுடைய அதிபர் பதவியைத் தக்கவைக்க முடிந்தது. அந்த சமயத்தில் தான் விரைவில் ராணுவப் பொறுப்பில் இருந்து விலக இருப்பதாக அறிவித்தார். வெறும் வாய் வார்த்தையாக மட்டுமே அதை நினைத்தாரே தவிர அதை அந்த நிமிடமே மறந்துவிட்டார்.
இடையிடையே முஷரஃப் மீது இரண்டு கொலை முயற்சிகள் நடத்தப்பட்டன.

தப்பித்துவிட்டார். ஆண்டுகள் கடந்தன. 2007-ல் மீண்டும் ஒரு அதிரடி ஆட்டத்தை ஆடத் தயாரானார் முஷரஃப். திடுதிப்பென உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி இஃப்திகார் முகமது சௌத்ரி தன்னுடைய அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்துவிட்டார் என்றுகூறி அவருக்கு சஸ்பென்ஷன் உத்தரவைப் பிறப்பித்தார் முஷரஃப். இது எதற்கான முயற்சி என்ற சந்தேகம் பாகிஸ்தான் முழுக்கப் பரவியது.

இதற்கிடையே லால் மசூதியில் மறைந்திருந்த தீவிரவாதிகள் மீது பாதுகாப்புப்படை தாக்குதல் நடத்தியது. இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகினர். இது மிகப்பெரிய கலவரமாக உருமாறி பாகிஸ்தானைத் திக்குமுக்காடச் செய்தது. இந்த வெப்பம் அடங்குவதற்குள் முஷரஃப் கொடுத்த சஸ்பென்ஷனை உச்சநீதிமன்றம் ரத்து செய்ய, எப்போது வேண்டுமானாலும் மீண்டும் எமர்ஜென்ஸி அமலாகலாம் என்று வதந்தி பரவத் தொடங்கியது. ஆனால் அப்படியொரு விபரீத முடிவை முஷரஃப் எடுக்கவில்லை.

இதன்பிறகு நடந்த அதிபர் தேர்தலில் முஷரஃப் வெற்றி பெற்றார். ஆனால் அந்தத் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் நிறுத்திவைக்க, ஆத்திரமடைந்த முஷரஃப் மீண்டும் எமர்ஜென்ஸியை அமல்படுத்தினார். நாடு முழுக்க அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். பிறகு தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக்கொண்ட முஷரஃப், தான் இத்தனை நாளும் வகித்துவந்த ராணுவப் பொறுப்பை ஜெனரல் கயானியிடம் ஒப்படைத்துவிட்டு நாடாளுமன்றத் தேர்தலை அறிவித்தார்.

அந்தத் தேர்தலில் போட்டியிடுவதற்கு வெளிநாடுகளில் இருந்த பெனாசிர் பூட்டோவுக்கும் நவாஸ் ஷெரீப்புக்கும் அனுமதி வழங்கப்பட்டன. அவர்களும் களத்தில் குதித்தனர். ஜனநாயகம் மலரப்போகிறது என்ற நம்பிக்கையுடன் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட பெனாசிர் பூட்டோ ராவல்பிண்டியில் படுகொலை செய்யப்படவே, பாகிஸ்தான் அரசியலில் மீண்டும் மிகப்பெரிய குழப்பம் ஏற்பட்டது.

எல்லாவற்றையும் கடந்து ஒருவழியாக பிப்ரவரி 2008-ல் தேர்தல் நடந்தது. தேர்தலில் முஷரஃப் கட்சி தோல்வியைச் சந்தித்தது. பெனாசிர் கட்சியைச் சேர்ந்த யூசுஃப் ராஸா கிலானி என்பவர் பிரதமரானார். அவருக்குப் பல கட்சிகளும் ஆதரவளித்து வருகின்றன. இந்நிலையில் அதிபர் முஷரஃப் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்படும் என்ற சூழல் உருவானது. இதன்மூலம் அவருடைய பதவிக்கு ஆபத்து ஏற்படவே, தர்மசங்கடத்தைத் தவிர்க்கும் விதமாக தன்னுடைய பதவியை ராஜினாமா செய்திருக்கிறார், அதுவும் உருக்கமான உரையோடு.

`நான் எந்தத் தவறும் செய்யவில்லை. பாகிஸ்தானுக்கு தேவைகள் ஏற்பட்டபோதெல்லாம் உதவி செய்து இருக்கிறேன். என் மீது எந்த குற்றச்சாட் டும் கூற முடியாது. என் மீது ஒரு குற்றச்சாட்டைக் கூட அவர்களால் நிரூபிக்க முடியாது. ஜனாதிபதி மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவது சரியான நடைமுறைதானா? ஈகோ காரணமாக இதைச் செய்கிறார்கள். ஜனாதிபதி பதவியை விட பாகிஸ்தான்தான் எனக்குப் பெரிது.
நம்பிக்கையில்லாத் தீர்மானம் மூலம் நான் நீக்கப்பட்டால் அது பாகிஸ்தானுக்கு பெரிய இழப்பாக இருக்கும். நான் யாரிடமும் இருந்து எதையும் எதிர்பார்க்கவில்லை. எனவே ஜனாதிபதி பதவியில் இருந்து விலகிக் கொள்கிறேன். இந்த முடிவை எனது ஆதரவாளர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும். ராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடம் ஒப்படைப்பேன். அடுத்து என்ன முடிவு எடுக்க வேண்டும் என்பதை மக்களிடமே விட்டு விடுகிறேன்.

நன்றிங்க

காலச் சக்கரம் என்ன வேகமாக சுழல்கிறது!

நவாப் ஷெரிஃபை நாடு கடத்திய முஷ்ரப்பு நாடு கடத்தப்படுவரா...?

அமெரிக்கவுக்கா? சவூதிக்கா? பொறுத்திருங்கள், விரைவில்...

Friday, August 01, 2008

பெண்மைக்குப் பெண்ணே எதிரி!

சென்னை. பரபரப்பான நந்தனம் சிக்னல். பச்சை விளக்குக்காகக் காத்திருக்கிறேன். விர்ர்ரூம்ம்ம் விர்ர்ரூம்ம்ம் சத்தத்துடன் என் காரை உரசிவிடுவது மாதிரி பக்கத்தில் வந்து நின்றது அந்த பைக். ஓட்டி வந்த இளைஞனின் பின் இருக்கையில் ஒரு பெண். இரண்டு பக்கமும் கால் போட்டு உட்கார்ந்திருந்தாள். காற்றைக் கிழிக்கும் கூந்தல். ஸ்லீவ்லெஸ் லோகட் டாப்ஸ் - ஜீன்ஸில் இருந்தாள். முதுகுப்பக்கம் டாப்சுக்கும் ஜீன்சுக்கும் இடைவெளியில் பளீர் எனத் தேகம் தெரிய, கூடவே அவள் அணிந்திருந்த பேன்ட்டீஸின் லேபிளும் எட்டிப் பார்த்தது. தோள்பட்டையிலும் இடுப்பிலும் டாட்டூஸ் மின்னல்கள். சிக்னலில் நின்ற வாகனங்களின் கண்கள் அந்தப் பெண்ணையே மொய்த்தன. பச்சை சிக்னல் விழுந்து சில விநாடிகள் கழித்துத்தான் சக்கரங்கள் சுழலவே ஆரம்பித்தன. இது போன்ற நிகழ்வுகள் தொடர்வது வாடிக்கையாகிவிட்டது.
 
இன்னொரு சம்பவம். 'தனது அப்பா மீது ரொம்பப் பாசமுடையவன் சதீஷ். அவனின் திருமணத்துக்குப் பிறகு அப்பா ஏனோ மகனிடம் அதிகம் பேசுவதில்லை. மருமகளை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. வீட்டைவிட வெளியில் இருப்பதையே விரும்பினார். சதீசுக்கு அப்பாவின் மனநிலை குறித்து சந்தேகம். தனியாக விசாரித்தபோது, அப்பா சொன்னார்: ''எப்படிச் சொல்றதுன்னு தெரியலைப்பா. உன் அம்மா செத்து இருபது வருஷமாச்சுப்பா. நான் ரொம்ப யோக்கியமாவே வாழ்ந்துட்டேன். உன் வொய்ஃப் எப்பப் பார்த்தாலும் நைட்டியிலயே திரியுது. அது ரொம்ப ஸ்டைலா வளர்ந்த பொண்ணு போல. எனக்குத்தான் மனசுக்கு ரொம்பக் கூச்சமா இருக்குப்பா!'' என்றார். அப்பா இப்போது இருப்பது முதியோர் இல்லத்தில்.

'இந்தியா சுதந்திர நாடு. நாங்கள் சுதந்திரப் பிரஜைகள். நாங்கள் எப்படி வேண்டுமானாலும் உடுத்துவோம்' என்பது சரிதான். ஆனால், அதற்கு ஓர் எல்லை உண்டு. எங்களுக்கு இது வசதியாக இருக்கிறது என்று உடுத்துவது எதையும் யாரும் மறுக்க மாட்டார்கள். கட்டுப்பாடு, கலாசாரம் என்றிருந்த நம் வீடுகளுக்குள் நம் வீட்டுப் பெண்களின் விருப்ப உடைகளான சுடி தார், நைட்டி, ஜீன்ஸ் என எல்லாம் உள்ளே அனுமதித்தோமே... அதுதான் மனப் பக்குவம்.
ஆனால், நாகரிகம் என்ற பெயரில் ஒரு சிலர் இப்படி அரைகுறையாக ஆபாசமாக ஆடை உடுத்துவது, மற்றவர்களின் கவனம் ஈர்ப்பதற்காக. இந்த மனநிலைக்கு 'attention drawing behaviour'என்று பெயர். பத்து பேரின் கவனத்தை ஈர்த்தேன் என்று கர்வம்கொள்ளும் அதே நேரத்தில், பத்து பேரின் தவறான அபிப்ராயத்தையும் சம்பாதிக்கிறோம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
 
நீங்கள் எப்படி நடக்கிறீர்களோ அப்படித்தான் மற்றவர்கள் உங்களிடம் நடந்துகொள்வார்கள். எதைக் கொடுக்கிறோமோ,அது தான் திரும்பக் கிடைக்கும். யாரும் அரை குறை உடையுடன் கோயிலுக்குப் போவது இல்லையே. நேர்முகத் தேர்வு என்றால், ஃபார்மல் டிரெஸ். திருமணம் என்றால் பட்டுப்புடவை என எல்லாவற்றுக்கும் முறை ஒன்று இருக்கிறது. பொது இடங்களுக்கு வரும்போது மட்டும் ஏன் அரைகுறையாக உடுத்த வேண்டும்?
நாகரிகம் என்கிற பெயரில் இப்படியெல்லாம் பெண்கள் ஆடை உடுத்துவதற்கு மனப் பக்குவம் இல்லாததே காரணம். மனப் பக்குவம் இருக்கிற எவரும் இப்படி உடுத்த மாட்டார்கள்!

நன்றிங்க - இந்தவார ஆனந்த விகடனில் டாக்டர் டி. நாராயண ரெட்டி

முன்னேற்றம் என்ற போர்வையில் பண்பாட்டுக் கலாச்சாரத்துக்கு வேட்டு வைத்து, முன்னோர்கள் பின்பற்றியொழுகிய நற்பண்புகளும் நடமுறைப் பழக்கவழக்கங்களும் பின்பற்றத் தகுதியற்றவையாக புறக்கணிப்பட்டு ''சுதந்திரம்'' எனும் பெயரில் மறைக்கப்பட வேண்டிய பெண்கள் எதற்கெடுத்தாலும் சமநிலை முழக்கத்தோடு உடை சுதந்திரத்தைக் கையிலெடுத்துள்ளனர். புதியவை நல்லவையென்றும் பழையவை காலங்கடந்தவையென்றும் நிர்வாண நாகரீகத்திற்கு மாறிக்கொண்டிருக்கின்றனர் பெண்கள்.

முன்னேற்றம் எல்லாக் காலங்களிலும் ஏற்படுவது தான். அதில் நடுநிலையைக் கைவிடும் போதுதான் குழப்பங்களும் சர்ச்சைகளும் ஏற்படுகின்றன. சதீஷின் அப்பா ஒழுக்கமுள்ளவர் அதனால் அரை குறை உடையில் காட்சி தரும் மருமகளிடமிருந்து ஒதுங்கிக்கொண்டார். ஒழுக்கமுடன் இருந்தாலும் அரை குறை ஆபாச உடையால் கவனத்தை ஈர்த்து சபலத்தை ஏற்படுத்துவதால் சில குடும்பங்களில் மருமகள் மாமனாரால் பலவந்தப்படுத்தும் அவலமும் அங்காங்கே நிகழ்கிறது.

நம்மைச் சுற்றி எல்லாரும் நம்மையே கவனிக்க வேண்டும் என்று மற்றவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக கவர்ச்சியாக உடை உடுத்தும் பெண்கள் - நீங்கள் எப்படி நடக்கிறீர்களோ அப்படித்தான் மற்றவர்கள் உங்களிடம் நடந்துகொள்வார்கள். அரை குறை ஆபாச உடைகளால் அபாயம் பெண்களுக்குத்தான். பெண்மைக்கு பெண்களே எதிரியாக இருக்கின்றனர் இதை கவனத்தில் வைத்து உங்கள் ஆடை சுதந்திரத்தைப் பேணிக்கொள்ளுங்கள்!

ஜனநாயக நாடகம்.


விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், "இந்திய அமைதிப் படையினரால் ஈழத்தில் கொல்லப் பட்டதாக" தினமலர் நாளிதழ் வெளியிட்ட செய்தியை அவரே படித்தார். அவர் மரணமடைந்த செய்தியை அவரே படித்துக் கொண்டிருப்பதை நக்கீரன் இதழ் அட்டைப் படத்தில் வெளியிட்டிருந்தது நினைவிருக்கலாம்.

தம்மைக் "காவல் துறை வலைவீசித் தேடி" வருவதாக அன்று காலைச் செய்தி வெளியிட்ட தினமணி நாளிதழை அதே மாலையில் சென்னை மண்ணடியில் மாநகரக் காவல் துறை ஆணையரது அனுமதி பெற்று, நூற்றுக் கணக்கான காவலர்களின் பாதுகாப்போடு நடைபெற்ற ஒரு பொதுக் கூட்டத்தில் பழனி பாபா படித்துக் காட்டினார்.

இதைப் படித்துக் கொண்டிருக்கும் உங்களது பெயர், முகவரி, புகைப்படம் அனைத்தும் அச்சு ஊடகங்களிலும் தொலைக் காட்சியிலும், "தீவிரவாதி கைது!" என்ற தலைப்புச் செய்தியோடு வெளிவந்தால் நீங்கள் சிரிப்பீர்களா? அழுவீர்களா?

கேரள மாநிலம் பெரும்பாவூரைச் சேர்ந்த இஸ்மாயீலுக்கு அதுதான் நடந்தது.

கடந்த 29 ஜூலை 2008 செவ்வாய்க்கிழமை "பெங்களூர் குண்டு வெடிப்பில் தொடர்புடைய தீவிரவாதி காவல்துறையின் பிடியில்" என்ற கைரளி மக்கள் தொலைக் காட்சிச் செய்தியை அதே இஸ்மாயீல் தன் குடும்ப சகிதம் தன் வீட்டில் அமர்ந்து தன் வீட்டிலுள்ள தொலைக் காட்சியில் பார்த்திருக்கிறார்.

அவரது மனநிலை எப்படி இருந்திருக்கும்?

மறுநாள் 30 ஜூலை 2008 புதன்கிழமை அனைத்துப் பத்திரிகையாளர்களுக்கும் செய்தியனுப்பி, தன் மனைவி, குழந்தைகள் சகிதம், "நிம்மதியாக வாழ முடியவில்லை; வீட்டில் நிம்மதியாகத் தூங்கக்கூட முடியவில்லை. நிம்மதியான வாழ்க்கை வாழ அனுமதிக்க வேண்டும்" என்ற கோரிக்கையோடு பத்திரிக்கையாளர் சந்திப்பில் காட்சியளித்தார்.

இவ்வாறு அவர் அனைத்துப் பத்திரிகையாளர்களையும் கூட்டி அறிவித்ததற்கு அடிப்படைக் காரணம் உண்டு.

கைரளி மக்கள் தொலைக் காட்சியின் "கைது"ச் செய்தியை உண்மையா பொய்யா என்று விசாரிக்காமல் அச்செய்திக்குக் கண்ணும் காதும் வைத்துத் தன்னை தீவிரவாதியாகவே சித்தரித்து விட்ட, ஜனநாயகத்தின் நான்காவது தூண்களான நாளிதழ்கள் - கேரளத்தை ஆளும் மார்க்ஸிஸ்ட் கட்சியின் ஊதுகுழலான 'தேசாபிமானி' உட்பட அனைத்து நாளிதழ்கள் - மீதும் தன் உள்ளக் குமுறலை அவர் கொட்ட வேண்டியிருந்தது.

எர்ணாகுளம் பத்திரிகையாளர் மன்றத்தில், காவல்துறை தன்னைத் தீவிரவாதியாக்கியக் கதையையும் பத்திரிகைகள் பொய் செய்திகளைப் பரப்பித் தன்னை அவமானப் படுத்தியதையும் அவர் விவரித்தார்.

"கடந்த செவ்வாய்கிழமை இரவு வீட்டில் இருக்கும்போது கைரளி பீப்பிள்ஸ் தொலைக் காட்சியில் என்னை பெங்களூர் காவல்துறை கைது செய்து, கஸ்டடியில் எடுத்திருப்பதாகச் சொன்ன செய்தியினைப் பார்த்தேன். அதைத் தொடர்ந்து மறுநாள் புதன்கிழமை ஜென்மபூமி உட்பட பல முக்கிய பத்திரிகைகளும் நான் பெங்களூர் காவல்துறையில் பிடியில் உள்ளதாகச் செய்தி வெளியிட்டன. அவர்களைத் தொடர்பு கொண்டு, அச்செய்தி பொய் என நான் தெரிவித்த பின்னரும் எந்தப் பத்திரிகையும் என்னைப் பற்றிய அவதூறுச் செய்தியைத் திருத்தவோ வருத்தம் தெரிவிக்கவோ முன்வரவில்லை. எனவே உண்மையை வெளிப்படுத்துவதற்காகவே இந்தப் பத்திரிக்கையாளர் சந்திப்பைக் கூட்ட முயன்றேன்" எனக் கூறும் பொழுது இஸ்மாயீலின் முகத்தில் அநியாயமாகப் பாதிக்கப்பட்டவனின் வேதனை தெரிந்தது.

1990இல் கேரள மாநிலக் காவல்துறையில் இணைந்த பெரும்பாவூரைச் சேர்ந்த இஸ்மாயீல், காவல்துறையில் சிறப்புக் கமாண்டோ பயிற்சி பெற்றவர்.

அப்துல் நாசர் மஅதனியைக் கொலை செய்யும் நோக்கோடு அவர் மீது சங் பரிவாரத்தினரால் வீசப் பட்ட வெடி குண்டு வெடித்து, அவர் ஒரு காலை இழந்த பின்னர், 1992இல் மஅதனியின் சுய பாதுகாப்புக்காக அவர் உருவாக்கிய 'பூனப் படை'யினருக்கு இஸ்மாயீல் பயிற்சி அளித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்ததுதான் அவர் எதிர் கொள்ளும் தொல்லைகளின் தொடக்கம். தம் மீது தனிப்பட்ட முறையில் விரோதம் கொண்டிருந்த சகப்பணியாளர்களில் சிலரே இத்தகையப் பொய்க் குற்றச்சாட்டுகளைத் தொடங்கி வைத்தவர்கள் என அவர் கூறினார்.

அதனைத் தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் இவர் மீது விசாரணை நடத்திய பொழுது அக்குற்றச்சாட்டு பொய்யானது எனத் தெளிவானது.

அதன் பின்னரும் அவர் காவல்துறை பணியில் இருந்து கொண்டே தீவிரவாதிகளுக்கு ஆயுதப் பயிற்சி அளித்ததாகப் பல பொய்க் குற்றச்சாட்டுகள் எழும்பியிருந்தன. இதனால் எதிர்கொள்ள வேண்டி வந்த பல விசாரணைகளில் மனம் வெறுத்துப் பணிக்குத் தொடர்ச்சியாகச் செல்ல இயலாமல் இருந்தார். அதைக் காரணம் காட்டி, 1996இல் இஸ்மாயீல் காவல்துறை பணியிலிருந்து நீக்கம் செய்யப் பட்டார்.

"காவல்துறை பணியிலிருந்து மனரீதியாகத் என்னைக் கொடுமைப் படுத்தி வெளியேற்றியவர்கள்தான் இப்பொழுதும் எங்காவது எந்தக் குற்றச் செயல் நடந்தாலும் அதற்கும் எனக்கும் எந்தவித முகாந்திரமோ தொடர்பு ஆதாரமோ இல்லா விட்டாலும் அதனுடன் என்னைத் தொடர்பு படுத்தி, மேன்மேலும் கொடுமைப் படுத்த முயல்கின்றனர்" என்று காவல்துறையின் 'லின்க்' கொடுக்கும் தந்திரத்தை அம்பலப் படுத்தி குற்றம் சுமத்துகிறார் இஸ்மாயீல்.

காவல்துறை பணியிலிருந்து வெளியேறிய பின்னர் கேரளத்தில் என்ன சம்பவம் நடைபெற்றாலும் காவல்துறை தம்மைத் தேடி வருவது வழக்கமாகவே ஆகி இருந்தது என்று இஸ்மாயீல் நினைவு கூர்ந்தார். காலடி என்ற ஊரில் மக்கள் ஜனநாயக் கட்சி அணிவகுப்பில் நடைபெற்றத் தாக்குதலில் தம்மைக் காவல்துறை அநியாயமாக எதிரியாகச் சேர்த்து வழக்குத் தொடுத்து, தற்பொழுது அவ்வழக்கு நீதிமன்ற விசாரணையில் உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

புல்வெளி என்ற ஊரில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 14 பேருந்துகளைத் தீயிட்ட வழக்கிலும் இஸ்மாயீல் எதிரியாகச் சேர்க்கப்பட்டிருந்தார். வீட்டில் இருந்த தம்மை அநியாயமாகப் பிடித்துக் கொண்டு போய் இவ்வழக்கில் சேர்த்தக் காவல்துறை, வீட்டிற்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தமது மோட்டார் சைக்கிளை எடுத்துச் சென்று பஸ் எரிக்கப்பட்ட புல்வெளியில் கொண்டு போய் போட்டு, பொய் ஆதாரங்களை உருவாக்கியது என்றும் பின்னர் இவ்வழக்குப் புனையப் பட்டது என நீதிமன்றம் தீர்ப்பளித்துத் தம்மை விடுவித்ததையும் விளக்கினார்.

இதே போன்று களமச்சேரி என்ற ஊரிலும் தமிழ்நாட்டுப் பேருந்து ஒன்றைத் தீயிட்ட வழக்கிலும் ஈ.கே.நாயனாரைக் கொல்ல முயன்றதாகப் புனையப் பட்ட வழக்கிலும் தம்மைக் காவல்துறை இணைக்க முயன்றதாக அவர் மேலும் கூறினார்.

கடந்த நாட்களில், "பெங்களூர் குண்டுவெடிப்புடன் தொடர்புடையதாக ஊடகங்களில் செய்தி வந்த பின்னர் என்னைக் காவல்துறை தொடர்ந்து தொலைபேசியிலும் நேரிலும் தொந்தரவு செய்து வருகின்றது. பெங்களூரில் கைது செய்யப்பட்டதாக வெளிவந்த செய்தி பொய்ச் செய்தி; நான் வீட்டில்தான் இருக்கின்றேன் என்ற விவரத்தை அறிவித்தப் பின்னரும் எந்த ஊடகமும் அதனை வெளியிட்டு நடந்த தவறில் திருத்தம் வெளியிட முன்வரவில்லை. காவல்துறையும் ஊடகங்களில் சிலவும் என்னைக் குறி வைத்துத் தொடர்ந்து செய்யும் இத்தகைய தொந்தரவுகளால் குடும்பத்துடன் நிம்மதியாக வாழ இயலா நிலை ஏற்பட்டுள்ளது. தயவு செய்து என்னையும் என் குடும்பத்தையும் நிம்மதியாக வாழ அனுமதிக்க வேண்டும்" என அவர் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் வேதனையுடன் கோரிக்கை வைத்தார்.

ஜனநாயகத் தூண்கள் இரண்டும் சேர்ந்து இஸ்மாயீலுடைய வேதனையைப் போக்குமா?

அதிரடிப்படை வீரராகப் பணியாற்றிய கமாண்டோ இஸ்மாயீலுக்கே இந்த கதி என்றால், "தீவிரவாதிகள் உருவாகக் காரண கர்த்தாக்கள் காவல் துறையும் ஊடகங்களும்தாம்" என்ற பரவலான குற்றச் சாட்டில் உண்மை இருப்பதாகவே கருத வேண்டியதுள்ளது.

ஜனநாயகத் தூண்கள் இரண்டும் தம் மீது படிந்துள்ள கறைகளை நீக்குமா?

காத்திருப்போம்!

நன்றிங்க