நாடகம் இனிதே முடிந்திருக்கிறது. சரியாக ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு தான் அணிந்து கொண்ட வேடத்தை அவரே கலைக்கத் தொடங்கினார். தற்போது முற்றிலுமாகக் கலைத்திருக்கிறார் பர்வேஸ் முஷரஃப். ஆம். கடந்த திங்கள்கிழமை தன்னுடைய அதிபர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்து பாகிஸ்தான் உள்ளிட்ட அத்தனை தேசங்களையும் தன்னை நோக்கித் திருப்பியிருக்கிறார்.
பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப்பை அதிரடியாக நகர்த்திவிட்டு ஆட்சிக்கு வந்த முஷரஃப், தற்போது திடீரென பதவி விலகியதற்கு என்ன காரணம் என்று தெரிந்துகொள்ள வேண்டுமானால் காலச் சக்கரத்தைக் கொஞ்சம் பின்னோக்கிச் சுழற்றவேண்டும். ஆகஸ்டு 11, 1943. பழைய டெல்லியில் ஒரு சாதாரண மத்தியதர முஸ்லிம் குடும்பத்தில் பிறந்தவர் முஷரஃப். பிரிவினையின்போது, பாகிஸ்தானுக்கு இடம்பெயர்ந்த பல்லாயிரக்கணக்கான குடும்பங்களுள் அவருடையதும் ஒன்று. சாதாரண ஜவானாகத் தன்னை பாகிஸ்தான் ராணுவத்தில் இணைத்துக்கொண்ட முஷரஃப் பிறகு கமாண்டராக, மேஜராக, மேஜர் ஜெனரலாக, லெஃப்டினண்ட் ஜெனரலாக என்று படிப்படியாக ராணுவப் பதவிப் படிக்கட்டுகளில் மேலேறி வந்து, ராணுவத் தளபதி ஆனார்.
உள்நாடு மற்றும் அக்கம்பக்கத்து நாடுகளில் மாத்திரமே பெயரளவில் அறிமுகம் ஆகியிருந்த முஷரஃப், அக்டோபர் 12, 1999 அன்று பாகிஸ்தானின் ஆட்சி அதிகாரத்தை அதிரடியாகக் கைப்பற்றிய நாளில்தான் உலகம் முழுவதும் பிரபலமானார். அனைத்து ஊடகங்களும் அவருடைய பெயரை உச்சரிக்கத் தொடங்கின.
மூன்று ராணுவ உயரதிகாரிகள் மற்றும் அவர்களுக்கு ஒத்தாசையாக சுமார் நூறு ஜவான்கள் கும்பலாக பிரதமர் நவாஸ் ஷெரீபின் அலுவலகத்துக்குள் ஒருநாள் நுழைந்தனர். `என்ன விஷயம்?' என்று கேட்டார் பிரதமர். `மன்னிக்க வேண்டும். உங்களைக் கைது செய்கிறோம்'. ராணுவப் புரட்சி நடந்திருப்பதை ஷெரீப்பால் உணர்ந்துகொள்ளமுடிந்தது. இப்படித்தான் அதிரடியாகத் தனது கணக்கைத் தொடங்கினார் முஷரஃப்.
இந்தியா தொடங்கி அத்தனை தேசங்களும் ராணுவப் புரட்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்தன. சிலர் மெல்லிய குரலில். வேறு சிலர் உரத்த குரலில். ஆனாலும் அடுத்த இரண்டாண்டுகளுக்கு பாகிஸ்தானில் ராணுவ ராஜாங்கம்தான் நடந்துகொண்டிருந்தது. சட்டாம்பிள்ளையான முஷரஃப் நினைத்ததுதான் சட்டம். போட்டதுதான் கையெழுத்து. சகலம் முஷரஃப் மயம். சாவகாசமாக இரண்டாண்டுகள் ஆட்சி செய்து முடித்தவர் 2001-ல் `பாகிஸ்தானுக்கு புதிய அதிபரை நியமித்திருக்கிறேன். பெயர், பர்வேஸ் முஷரஃப்' என்ற ரீதியில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். ஆம். அவரே அதிபராகவும் ஆனார்.
என்னதான் பாகிஸ்தானுக்கு அதிபர் என்றாலும்கூட அமெரிக்காவுக்கு செல்லப்பிள்ளையாக மாறுவது முக்கியம் என்பதால் அதற்கான வாய்ப்புகள் எப்போது வரும் என்று காத்துக் கொண்டிருந்தார். அந்த சமயம் பார்த்து, `அல்காயிதாவை அழிக்கிறேன், பின்லேடனைப் பிடிக்கிறேன்' என்று ஆப்கனுக்குள் அமெரிக்கப் படைகள் நுழைய, இதுதான் சமயம் என்று தீவிரவாதத்துக்கு எதிரான யுத்தத்துக்கு என்னுடைய பரிபூரண ஆதரவு என்று அறிவித்தார். பாகிஸ்தான் அதிபரா இப்படிப் பேசுகிறார் என்று எல்லோருமே வாய் பிளந்தனர். இதன்மூலம் அமெரிக்காவிடம் அவருக்கு நல்ல பிள்ளை என்ற அந்தஸ்து கிடைத்தது.
கிடைத்த இமேஜைப் பயன்படுத்தி அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு தன்னுடைய அதிபர் பதவியை நீட்டிக்கொள்வதற்கான மசோதாவை நாடாளுமன்றத்தில் கொண்டுவர முயற்சி செய்தார் முஷரஃப். எதிர்க்கட்சிகள் கொந்தளித்துவிட்டன. இது கடைந்தெடுத்த மோசடி என்று சீறின. ஆனாலும் சாம, பேத, தான, தண்ட முறைகளைப் பயன்படுத்தி மசோதாவை நிறைவேற்றிவிட்டார் முஷரஃப்.
இது பலத்த சர்ச்சைகளைக் கிளப்பவே, `முறைகேடுகள் நடந்தது வாஸ்தவம்தான். அதற்காக பகிரங்க மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்' என்றார் முஷரஃப். இதன்மூலம், தான் எத்தனை தேர்ந்த அரசியல்வாதி என்பதை எல்லோருக்கும் நிரூபித்தார்.
அதிபராக இருந்துவிட்டுப் போங்கள். ஆனால் நாடாளுமன்றத்துக்குத் தேர்தல் நடத்துங்கள் என்று உத்தரவிட்டிருந்தது உச்சநீதிமன்றம். அதற்கேற்ப 2002-ல் தேர்தல் நடந்தது. அவருடைய பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (காயிதே அஜம்) கட்சி களத்தில் இறங்கியது. ஆனால் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இருந்தபோதும் தன்னுடைய அதிபர் பதவியைத் தக்கவைக்க முடிந்தது. அந்த சமயத்தில் தான் விரைவில் ராணுவப் பொறுப்பில் இருந்து விலக இருப்பதாக அறிவித்தார். வெறும் வாய் வார்த்தையாக மட்டுமே அதை நினைத்தாரே தவிர அதை அந்த நிமிடமே மறந்துவிட்டார்.
இடையிடையே முஷரஃப் மீது இரண்டு கொலை முயற்சிகள் நடத்தப்பட்டன.
தப்பித்துவிட்டார். ஆண்டுகள் கடந்தன. 2007-ல் மீண்டும் ஒரு அதிரடி ஆட்டத்தை ஆடத் தயாரானார் முஷரஃப். திடுதிப்பென உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி இஃப்திகார் முகமது சௌத்ரி தன்னுடைய அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்துவிட்டார் என்றுகூறி அவருக்கு சஸ்பென்ஷன் உத்தரவைப் பிறப்பித்தார் முஷரஃப். இது எதற்கான முயற்சி என்ற சந்தேகம் பாகிஸ்தான் முழுக்கப் பரவியது.
இதற்கிடையே லால் மசூதியில் மறைந்திருந்த தீவிரவாதிகள் மீது பாதுகாப்புப்படை தாக்குதல் நடத்தியது. இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகினர். இது மிகப்பெரிய கலவரமாக உருமாறி பாகிஸ்தானைத் திக்குமுக்காடச் செய்தது. இந்த வெப்பம் அடங்குவதற்குள் முஷரஃப் கொடுத்த சஸ்பென்ஷனை உச்சநீதிமன்றம் ரத்து செய்ய, எப்போது வேண்டுமானாலும் மீண்டும் எமர்ஜென்ஸி அமலாகலாம் என்று வதந்தி பரவத் தொடங்கியது. ஆனால் அப்படியொரு விபரீத முடிவை முஷரஃப் எடுக்கவில்லை.
இதன்பிறகு நடந்த அதிபர் தேர்தலில் முஷரஃப் வெற்றி பெற்றார். ஆனால் அந்தத் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் நிறுத்திவைக்க, ஆத்திரமடைந்த முஷரஃப் மீண்டும் எமர்ஜென்ஸியை அமல்படுத்தினார். நாடு முழுக்க அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். பிறகு தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக்கொண்ட முஷரஃப், தான் இத்தனை நாளும் வகித்துவந்த ராணுவப் பொறுப்பை ஜெனரல் கயானியிடம் ஒப்படைத்துவிட்டு நாடாளுமன்றத் தேர்தலை அறிவித்தார்.
அந்தத் தேர்தலில் போட்டியிடுவதற்கு வெளிநாடுகளில் இருந்த பெனாசிர் பூட்டோவுக்கும் நவாஸ் ஷெரீப்புக்கும் அனுமதி வழங்கப்பட்டன. அவர்களும் களத்தில் குதித்தனர். ஜனநாயகம் மலரப்போகிறது என்ற நம்பிக்கையுடன் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட பெனாசிர் பூட்டோ ராவல்பிண்டியில் படுகொலை செய்யப்படவே, பாகிஸ்தான் அரசியலில் மீண்டும் மிகப்பெரிய குழப்பம் ஏற்பட்டது.
எல்லாவற்றையும் கடந்து ஒருவழியாக பிப்ரவரி 2008-ல் தேர்தல் நடந்தது. தேர்தலில் முஷரஃப் கட்சி தோல்வியைச் சந்தித்தது. பெனாசிர் கட்சியைச் சேர்ந்த யூசுஃப் ராஸா கிலானி என்பவர் பிரதமரானார். அவருக்குப் பல கட்சிகளும் ஆதரவளித்து வருகின்றன. இந்நிலையில் அதிபர் முஷரஃப் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்படும் என்ற சூழல் உருவானது. இதன்மூலம் அவருடைய பதவிக்கு ஆபத்து ஏற்படவே, தர்மசங்கடத்தைத் தவிர்க்கும் விதமாக தன்னுடைய பதவியை ராஜினாமா செய்திருக்கிறார், அதுவும் உருக்கமான உரையோடு.
`நான் எந்தத் தவறும் செய்யவில்லை. பாகிஸ்தானுக்கு தேவைகள் ஏற்பட்டபோதெல்லாம் உதவி செய்து இருக்கிறேன். என் மீது எந்த குற்றச்சாட் டும் கூற முடியாது. என் மீது ஒரு குற்றச்சாட்டைக் கூட அவர்களால் நிரூபிக்க முடியாது. ஜனாதிபதி மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவது சரியான நடைமுறைதானா? ஈகோ காரணமாக இதைச் செய்கிறார்கள். ஜனாதிபதி பதவியை விட பாகிஸ்தான்தான் எனக்குப் பெரிது.
நம்பிக்கையில்லாத் தீர்மானம் மூலம் நான் நீக்கப்பட்டால் அது பாகிஸ்தானுக்கு பெரிய இழப்பாக இருக்கும். நான் யாரிடமும் இருந்து எதையும் எதிர்பார்க்கவில்லை. எனவே ஜனாதிபதி பதவியில் இருந்து விலகிக் கொள்கிறேன். இந்த முடிவை எனது ஆதரவாளர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும். ராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடம் ஒப்படைப்பேன். அடுத்து என்ன முடிவு எடுக்க வேண்டும் என்பதை மக்களிடமே விட்டு விடுகிறேன்.
நன்றிங்க
காலச் சக்கரம் என்ன வேகமாக சுழல்கிறது!
நவாப் ஷெரிஃபை நாடு கடத்திய முஷ்ரப்பு நாடு கடத்தப்படுவரா...?
அமெரிக்கவுக்கா? சவூதிக்கா? பொறுத்திருங்கள், விரைவில்...
No comments:
Post a Comment