Friday, August 01, 2008

ஜனநாயக நாடகம்.


விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், "இந்திய அமைதிப் படையினரால் ஈழத்தில் கொல்லப் பட்டதாக" தினமலர் நாளிதழ் வெளியிட்ட செய்தியை அவரே படித்தார். அவர் மரணமடைந்த செய்தியை அவரே படித்துக் கொண்டிருப்பதை நக்கீரன் இதழ் அட்டைப் படத்தில் வெளியிட்டிருந்தது நினைவிருக்கலாம்.

தம்மைக் "காவல் துறை வலைவீசித் தேடி" வருவதாக அன்று காலைச் செய்தி வெளியிட்ட தினமணி நாளிதழை அதே மாலையில் சென்னை மண்ணடியில் மாநகரக் காவல் துறை ஆணையரது அனுமதி பெற்று, நூற்றுக் கணக்கான காவலர்களின் பாதுகாப்போடு நடைபெற்ற ஒரு பொதுக் கூட்டத்தில் பழனி பாபா படித்துக் காட்டினார்.

இதைப் படித்துக் கொண்டிருக்கும் உங்களது பெயர், முகவரி, புகைப்படம் அனைத்தும் அச்சு ஊடகங்களிலும் தொலைக் காட்சியிலும், "தீவிரவாதி கைது!" என்ற தலைப்புச் செய்தியோடு வெளிவந்தால் நீங்கள் சிரிப்பீர்களா? அழுவீர்களா?

கேரள மாநிலம் பெரும்பாவூரைச் சேர்ந்த இஸ்மாயீலுக்கு அதுதான் நடந்தது.

கடந்த 29 ஜூலை 2008 செவ்வாய்க்கிழமை "பெங்களூர் குண்டு வெடிப்பில் தொடர்புடைய தீவிரவாதி காவல்துறையின் பிடியில்" என்ற கைரளி மக்கள் தொலைக் காட்சிச் செய்தியை அதே இஸ்மாயீல் தன் குடும்ப சகிதம் தன் வீட்டில் அமர்ந்து தன் வீட்டிலுள்ள தொலைக் காட்சியில் பார்த்திருக்கிறார்.

அவரது மனநிலை எப்படி இருந்திருக்கும்?

மறுநாள் 30 ஜூலை 2008 புதன்கிழமை அனைத்துப் பத்திரிகையாளர்களுக்கும் செய்தியனுப்பி, தன் மனைவி, குழந்தைகள் சகிதம், "நிம்மதியாக வாழ முடியவில்லை; வீட்டில் நிம்மதியாகத் தூங்கக்கூட முடியவில்லை. நிம்மதியான வாழ்க்கை வாழ அனுமதிக்க வேண்டும்" என்ற கோரிக்கையோடு பத்திரிக்கையாளர் சந்திப்பில் காட்சியளித்தார்.

இவ்வாறு அவர் அனைத்துப் பத்திரிகையாளர்களையும் கூட்டி அறிவித்ததற்கு அடிப்படைக் காரணம் உண்டு.

கைரளி மக்கள் தொலைக் காட்சியின் "கைது"ச் செய்தியை உண்மையா பொய்யா என்று விசாரிக்காமல் அச்செய்திக்குக் கண்ணும் காதும் வைத்துத் தன்னை தீவிரவாதியாகவே சித்தரித்து விட்ட, ஜனநாயகத்தின் நான்காவது தூண்களான நாளிதழ்கள் - கேரளத்தை ஆளும் மார்க்ஸிஸ்ட் கட்சியின் ஊதுகுழலான 'தேசாபிமானி' உட்பட அனைத்து நாளிதழ்கள் - மீதும் தன் உள்ளக் குமுறலை அவர் கொட்ட வேண்டியிருந்தது.

எர்ணாகுளம் பத்திரிகையாளர் மன்றத்தில், காவல்துறை தன்னைத் தீவிரவாதியாக்கியக் கதையையும் பத்திரிகைகள் பொய் செய்திகளைப் பரப்பித் தன்னை அவமானப் படுத்தியதையும் அவர் விவரித்தார்.

"கடந்த செவ்வாய்கிழமை இரவு வீட்டில் இருக்கும்போது கைரளி பீப்பிள்ஸ் தொலைக் காட்சியில் என்னை பெங்களூர் காவல்துறை கைது செய்து, கஸ்டடியில் எடுத்திருப்பதாகச் சொன்ன செய்தியினைப் பார்த்தேன். அதைத் தொடர்ந்து மறுநாள் புதன்கிழமை ஜென்மபூமி உட்பட பல முக்கிய பத்திரிகைகளும் நான் பெங்களூர் காவல்துறையில் பிடியில் உள்ளதாகச் செய்தி வெளியிட்டன. அவர்களைத் தொடர்பு கொண்டு, அச்செய்தி பொய் என நான் தெரிவித்த பின்னரும் எந்தப் பத்திரிகையும் என்னைப் பற்றிய அவதூறுச் செய்தியைத் திருத்தவோ வருத்தம் தெரிவிக்கவோ முன்வரவில்லை. எனவே உண்மையை வெளிப்படுத்துவதற்காகவே இந்தப் பத்திரிக்கையாளர் சந்திப்பைக் கூட்ட முயன்றேன்" எனக் கூறும் பொழுது இஸ்மாயீலின் முகத்தில் அநியாயமாகப் பாதிக்கப்பட்டவனின் வேதனை தெரிந்தது.

1990இல் கேரள மாநிலக் காவல்துறையில் இணைந்த பெரும்பாவூரைச் சேர்ந்த இஸ்மாயீல், காவல்துறையில் சிறப்புக் கமாண்டோ பயிற்சி பெற்றவர்.

அப்துல் நாசர் மஅதனியைக் கொலை செய்யும் நோக்கோடு அவர் மீது சங் பரிவாரத்தினரால் வீசப் பட்ட வெடி குண்டு வெடித்து, அவர் ஒரு காலை இழந்த பின்னர், 1992இல் மஅதனியின் சுய பாதுகாப்புக்காக அவர் உருவாக்கிய 'பூனப் படை'யினருக்கு இஸ்மாயீல் பயிற்சி அளித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்ததுதான் அவர் எதிர் கொள்ளும் தொல்லைகளின் தொடக்கம். தம் மீது தனிப்பட்ட முறையில் விரோதம் கொண்டிருந்த சகப்பணியாளர்களில் சிலரே இத்தகையப் பொய்க் குற்றச்சாட்டுகளைத் தொடங்கி வைத்தவர்கள் என அவர் கூறினார்.

அதனைத் தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் இவர் மீது விசாரணை நடத்திய பொழுது அக்குற்றச்சாட்டு பொய்யானது எனத் தெளிவானது.

அதன் பின்னரும் அவர் காவல்துறை பணியில் இருந்து கொண்டே தீவிரவாதிகளுக்கு ஆயுதப் பயிற்சி அளித்ததாகப் பல பொய்க் குற்றச்சாட்டுகள் எழும்பியிருந்தன. இதனால் எதிர்கொள்ள வேண்டி வந்த பல விசாரணைகளில் மனம் வெறுத்துப் பணிக்குத் தொடர்ச்சியாகச் செல்ல இயலாமல் இருந்தார். அதைக் காரணம் காட்டி, 1996இல் இஸ்மாயீல் காவல்துறை பணியிலிருந்து நீக்கம் செய்யப் பட்டார்.

"காவல்துறை பணியிலிருந்து மனரீதியாகத் என்னைக் கொடுமைப் படுத்தி வெளியேற்றியவர்கள்தான் இப்பொழுதும் எங்காவது எந்தக் குற்றச் செயல் நடந்தாலும் அதற்கும் எனக்கும் எந்தவித முகாந்திரமோ தொடர்பு ஆதாரமோ இல்லா விட்டாலும் அதனுடன் என்னைத் தொடர்பு படுத்தி, மேன்மேலும் கொடுமைப் படுத்த முயல்கின்றனர்" என்று காவல்துறையின் 'லின்க்' கொடுக்கும் தந்திரத்தை அம்பலப் படுத்தி குற்றம் சுமத்துகிறார் இஸ்மாயீல்.

காவல்துறை பணியிலிருந்து வெளியேறிய பின்னர் கேரளத்தில் என்ன சம்பவம் நடைபெற்றாலும் காவல்துறை தம்மைத் தேடி வருவது வழக்கமாகவே ஆகி இருந்தது என்று இஸ்மாயீல் நினைவு கூர்ந்தார். காலடி என்ற ஊரில் மக்கள் ஜனநாயக் கட்சி அணிவகுப்பில் நடைபெற்றத் தாக்குதலில் தம்மைக் காவல்துறை அநியாயமாக எதிரியாகச் சேர்த்து வழக்குத் தொடுத்து, தற்பொழுது அவ்வழக்கு நீதிமன்ற விசாரணையில் உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

புல்வெளி என்ற ஊரில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 14 பேருந்துகளைத் தீயிட்ட வழக்கிலும் இஸ்மாயீல் எதிரியாகச் சேர்க்கப்பட்டிருந்தார். வீட்டில் இருந்த தம்மை அநியாயமாகப் பிடித்துக் கொண்டு போய் இவ்வழக்கில் சேர்த்தக் காவல்துறை, வீட்டிற்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தமது மோட்டார் சைக்கிளை எடுத்துச் சென்று பஸ் எரிக்கப்பட்ட புல்வெளியில் கொண்டு போய் போட்டு, பொய் ஆதாரங்களை உருவாக்கியது என்றும் பின்னர் இவ்வழக்குப் புனையப் பட்டது என நீதிமன்றம் தீர்ப்பளித்துத் தம்மை விடுவித்ததையும் விளக்கினார்.

இதே போன்று களமச்சேரி என்ற ஊரிலும் தமிழ்நாட்டுப் பேருந்து ஒன்றைத் தீயிட்ட வழக்கிலும் ஈ.கே.நாயனாரைக் கொல்ல முயன்றதாகப் புனையப் பட்ட வழக்கிலும் தம்மைக் காவல்துறை இணைக்க முயன்றதாக அவர் மேலும் கூறினார்.

கடந்த நாட்களில், "பெங்களூர் குண்டுவெடிப்புடன் தொடர்புடையதாக ஊடகங்களில் செய்தி வந்த பின்னர் என்னைக் காவல்துறை தொடர்ந்து தொலைபேசியிலும் நேரிலும் தொந்தரவு செய்து வருகின்றது. பெங்களூரில் கைது செய்யப்பட்டதாக வெளிவந்த செய்தி பொய்ச் செய்தி; நான் வீட்டில்தான் இருக்கின்றேன் என்ற விவரத்தை அறிவித்தப் பின்னரும் எந்த ஊடகமும் அதனை வெளியிட்டு நடந்த தவறில் திருத்தம் வெளியிட முன்வரவில்லை. காவல்துறையும் ஊடகங்களில் சிலவும் என்னைக் குறி வைத்துத் தொடர்ந்து செய்யும் இத்தகைய தொந்தரவுகளால் குடும்பத்துடன் நிம்மதியாக வாழ இயலா நிலை ஏற்பட்டுள்ளது. தயவு செய்து என்னையும் என் குடும்பத்தையும் நிம்மதியாக வாழ அனுமதிக்க வேண்டும்" என அவர் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் வேதனையுடன் கோரிக்கை வைத்தார்.

ஜனநாயகத் தூண்கள் இரண்டும் சேர்ந்து இஸ்மாயீலுடைய வேதனையைப் போக்குமா?

அதிரடிப்படை வீரராகப் பணியாற்றிய கமாண்டோ இஸ்மாயீலுக்கே இந்த கதி என்றால், "தீவிரவாதிகள் உருவாகக் காரண கர்த்தாக்கள் காவல் துறையும் ஊடகங்களும்தாம்" என்ற பரவலான குற்றச் சாட்டில் உண்மை இருப்பதாகவே கருத வேண்டியதுள்ளது.

ஜனநாயகத் தூண்கள் இரண்டும் தம் மீது படிந்துள்ள கறைகளை நீக்குமா?

காத்திருப்போம்!

நன்றிங்க

2 comments:

Unknown said...

இவரைத் தேடித்தான் தமிழகக் காவல்துறை விரைந்துள்ளதோ?

முஸ்லிம் said...

சுல்தான் உங்க வரவுக்கு நன்றி.