Thursday, February 21, 2008

அணு சக்தி ஒப்பந்தம்

அணு சக்தி ஒப்பந்தம் - யு.எஸ். எம்பிக்கள் திடீர் கெடு

வியாழக்கிழமை, பிப்ரவரி 21, 2008

டெல்லி: மே மாதத்திற்குள் அணு சக்தி ஒப்பந்தத்தை இறுதி செய்து அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். அப்போதுதான் ஜூலைக்குள் அதை அமல்படுத்த முடியும். இல்லாவிட்டால் அடுத்து வரும் புதிய அரசு, ஒப்பந்தத்தை முழுமையாக மறு பரிசீலனை செய்யும். அது இந்தியாவுக்கு சாதகமாக இருக்காது என்று அமெரிக்க எம்.பிக்கள் இந்தியாவுக்கு மிரட்டல் விடுத்துள்ளனர்.

அமெரிக்க எம்.பிக்களான ஜனநாயகக் கட்சியின் ஜான் கெர்ரி, ஜோசப் பிடேன், குடியரசுக் கட்சியின் சச் ஹேகல் ஆகியோர் டெல்லி வந்துள்ளனர்.

டெல்லியில், செய்தியாளர்களிடம் அவர்கள் பேசுகையில், மே மாதத்திற்குள் ஒப்பந்தத்தை இந்திய அரசு அமெரிக்க காங்கிரஸ் சபைக்கு அனுப்பி வைக்க வேண்டும். அப்போதுதான் அதை ஜூலை மாதத்திற்குள், புதிய அரசு அமைவதற்குள் ஒப்புதல் பெறப்படும். அதைத் தாண்டி விட்டால், புதிய அரசு வந்து விடும். புதிய அரசு இதே நிலையில் ஒப்பந்தத்தை ஏற்கும் எனக் கூற முடியாது.

ஒப்பந்தம் முழுமையாக மறு பரிசீலனைக்கு உட்படுத்தப்படும். பல புதிய கெடுபிடிகளும், கட்டுப்பாடுகளும் வருவதற்கு வாய்ப்புள்ளது. மேலும், புதிய நிபந்தனைகளும் விதிக்கப்படலாம்.

மேலும், அணு ஆயுதத் தடை ஒப்பந்தம் உள்ளிட்ட பிற விவகாரங்களையும் புதிய அரசு கிளப்பக் கூடும்.

நேரம் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த அரசு முடிவதற்குள் ஒப்பந்தம் நிறைவேற்றப்படுவது இந்தியாவுக்கு நல்லது. இல்லாவிட்டால் இந்தியாவுக்கு சிக்கலாகி விடும்.

இந்தியா ஜனநாயக நாடு. இங்குள்ள சில கட்டாயங்கள், நிர்பந்தங்கள் அமெரிக்காவுக்குப புரிகிறது. ஆனால் ஒப்பந்தம் நிறைவேறியாக வேண்டும் என்பதில் அமெரிக்கா தீவிரமாக இருக்கிறது. இது தோல்வி அடைந்தால், அமெரிக்கா மீது இந்தியாவில் தவறான எண்ணங்கள் பரவி விடும் என்றார் அவர்.

பாகிஸ்தான் தேர்தலில் பார்வையாளர்களாக செயல்பட்ட ஜான் கெர்ரி உள்ளிட்ட 3 எம்.பிக்களும் நேற்று பிரதமர் மன்மோகன் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், பல்வேறு எம்.பிக்கள் உள்ளிட்டோரையும் சந்தித்துப் பேசினர்.

இடதுசாரிகள் கண்டனம்:

அமெரிக்க எம்.பிக்கள் விதித்துள்ள மே மாத கெடுவுக்கு இடதுசாரிக் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் கூறுகையில், இந்தியாவுக்கு நெருக்கடி கொடுக்க அமெரிக்காவுக்கு எந்த உரிமையும் இல்லை.

இந்த ஒப்பந்தத்தால் அமெரிக்க நிறுவனங்களுக்கு பெரும் பலன்கள் கிடைக்கும் என்பதாலேயே இதை அமல்படுத்த அமெரிக்கா நெருக்குதல் கொடுக்கிறது. ஆனால் அதற்கு இந்தியா அடி பணியாது என்று கூறினார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் ராஜா கூறுகையில், உலக அளவில் சக்தி வாய்ந்த நாடாக உருவாகி வருகிறது. எனவே அதைத் தடுக்கத்தான் இவ்வாறு நெருக்கடி கொடுக்கிறது அமெரிக்கா என்று கூறியுள்ளார்.

நன்றிங்க

தூண்டில் காரன் மிதப்பு மேலேதான் கண்ணாயிருப்பான்!

Sunday, February 17, 2008

அடப் பாவிங்களா!

பெண்ணை ஆண் பயணியுடன் தூங்க சொன்ன பஸ் டிரைவர்

ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 17, 2008

ஹைதராபாத்: ஹைதாராபாத்திலிருந்து நாக்பூருக்குச் சென்ற தனியார் ஆம்னி பேருந்தில், ஆண் பயனியுடன் படுத்துக் கொண்டு பயணிக்குமாறு பெண் பயணியை வற்புறுத்திய டிரைவரை போலீஸார் கைது செய்து, பஸ்சையும் பறிமுதல் செய்தனர்.

ஹைதராபாத்தில் இருந்து நாக்பூருக்கு ஒரு தனியார் ஆம்னி பஸ் புறப்பட்டு சென்றது. இது படுக்கை வசதி கொண்ட பஸ் ஆகும்.

இந்த பஸ்சில் 20 பேர்தான் பயணிக்க முடியும். ஆனால் பணத்துக்கு ஆசைப்பட்டு 40 பேருக்கு டிக்கெட் கொடுத்திருந்தனர். அதாவது ஒரு இருக்கைக்கு இரு பயணிகள் என டிக்கெட் கொடுத்திருந்தனர்.

பஸ் கிளம்பிவிட்ட நிலையில், ஹைதராபாத்தைச் சேர்ந்த மகிமா என்ற பெண்ணுக்கு ஒதுக்கப்பட்ட சீட்டில், ஆண் பயணி இருந்தார். அவருடன் எப்படி பயணிக்க முடியும் என்று மகிமா கேட்டபோது, அவருடன் படுத்துக் கொண்டு பயணிக்குமாறு கூறியுள்ளார் டிரைவர்.

அதிர்ச்சி அடைந்த மகிமா செல்போன் மூலம் தனது உறவினர்களுக்கு தகவல் தந்தார். அவர்கள் போக்குவரத்துத் துறை அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து போலீஸாருடன் விரைந்த போக்குவரத்துத் துறை அதிகாரிகள், துஸ்ரான் என்ற இடத்தில் பேருந்தை மடக்கினர்.

அராஜகமாக நடந்து கொண்ட டிரைவரைக் கைது செய்த அவர்கள், பேருந்தையும் பறிமுதல் செய்தனர்.

நன்றிங்க

காலத்தின் கோலமய்யா!

Friday, February 15, 2008

அமீத்குமார் தப்ப உதவிய எஸ்.ஐ. கைது!

கிட்னி' அமீத்குமார் தப்ப உதவிய எஸ்.ஐ. கைது!

வெள்ளிக்கிழமை, பிப்ரவரி 15, 2008

டெல்லி: குர்கான் சிறுநீரக மோசடி குற்றவாளி டாக்டர் அமீத்குமார் நேபாளத்திற்கு தப்ப உதவிய, குர்கான் உதவி சப் இன்ஸ்பெக்டர் இன்று கைது செய்யப்பட்டார். மேலும் 6 போலீஸாருக்கு வலை விரிக்கப்பட்டுள்ளது.

நாட்டையே உலுக்கிய குர்கான் சிறுநீரக மோசடி வழக்கில் முக்கியக் குற்றவாளியாக கருதப்படும் டாக்டர் அமீத்குமார், சமீபத்தில் நேபாளத்தில் கைது செய்யப்பட்டார். டாக்டர் உபேந்திரா உள்ளிட்ட பலரும் இந்த வழக்கில் கைதாகியுள்ளனர்.

அமீத் குமார் நாட்டை விட்டுத் தப்ப 7 போலீஸார் உதவியது தெரிய வந்துள்ளது. இதில் இந்த வழக்கை தற்போது விசாரித்துக் கொண்டிருக்கும் போலீஸ் குழுவில் இடம் பெற்றுள்ள உதவி சப் இன்ஸ்பெக்டர் ரவீந்தர் குமார் சிங் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் 6 போலீஸாருக்கு வலை வீசப்பட்டுள்ளது. அவர்கள் தலைமறைவாகி விட்டனர்.

டாக்டர் அமீத்குமார், நேபாளம் தப்ப ரவீந்தர் சிங் தலைமையில் இந்தப் போலீஸ் குழுவினர் உதவியுள்ளனர். இதற்காக அமீத்குமாரிடமிருந்து ரூ. 20 லட்சம் பணத்தை லஞ்சமாக பெற்றுள்ளனர்.

சிறுநீரக மோசடி குறித்து முன்பே குர்கான் போலீஸுக்குத் தெரியுமாம். அமீத்குமாரை கைதும் செய்துள்ளனர். ஆனால் அவரிடமிருந்து பெரும் பணம் லஞ்சமாக கிடைத்ததால் அவரைத் தப்பிக்க விட்டுள்ளனர்.

நன்றிங்க

அமீத்குமார் கிட்னி வித்த காசெல்லாம் லஞ்சமாய் மாறிச்சிப்பா

Thursday, February 14, 2008

சத்தியம் இது சத்தியம் (!?)

எம்ஜிஆர் என்னிடம் சத்தியம் வாங்கினார்-ஜெ திடீர் தகவல்

வியாழக்கிழமை, பிப்ரவரி 14, 2008

சென்னை:எம்.ஜி.ஆர். மறைவதற்கு முன் தன்னிடம் அதிமுகவையும் தொண்டர்களையும் நீ காப்பாற்ற வேண்டும் என்றும், எந்த சோதனை வந்தாலும், அவர்களுக்கு நீ துணையாக இருக்க வேண்டும் என்றும் சத்தியம் வாங்கியதாக அக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

அதிமுக பொதுக்குழுவில் ஜெயலலிதா பேசியதாவது:

அதிமுகவின் செல்வாக்கு இம்மியளவு கூட குறையவில்லை. இன்று நிதர்சனமான உண்மை என்னவென்றால், தமிழ்நாட்டில் அதிமுக என்ற பெயரைச் சொல்லாமல், ஜெயலலிதா என்ற பெயரைச் சொல்லாமல் யாராலும் அரசியல் நடத்த முடியாது. அது பழைய கட்சியாக இருந்தாலும் சரி, காளான்கள் போல் முளைக்கும் சிறிய புதிய கட்சிகளாக இருந்தாலும் சரி, ஜெயலலிதா என்ற பெயரைச் சொல்லாமல் அரசியல் நடத்தச் சொல்லுங்கள் பார்ப்போம்.

அண்மையில் நடந்த திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் 9 தீர்மானங்கள் என்னை பற்றிதான். அவர்கள் ஆட்சியில் இருக்கலாம். நாம் ஆட்சியில் இல்லாத நம்மை கண்டு அவர்கள் மிரண்டு போயிருக்கிறார்கள்.

எதிர்காலம் உள்ள ஒரே அரசியல் கட்சி அதிமுக தான். மகத்தான ஒளிமயமான எதிர்காலம் உள்ள ஒரே கட்சி அதிமுக தான். இன்னும் சில காலத்தில் பழைய கட்சிகள் எல்லாம் சுக்கு நூறாகி விடும். காளான் போன்று முளைத்த புதிய கட்சிகள் இருந்த இடம் தெரியாமல் போய் விடும்.

ஒவ்வொரு கலாசாரத்துக்கும் ஒரு புராணம் உண்டு. கதைகள் வேறாக இருந்தாலும் அடிப்படை கருத்து ஒன்று தான். நன்மையும், தீமையும் மோதும்போது நன்மை வெற்றி பெறும் என்ற கருத்து சொல்லப்பட்டிருக்கும். ராமாயணத்தில் ராமபிரான், ராவணன் என்ற ராட்சதனை வென்றதாக சொல்லப்பட்டிருக்கிறது.

ராமனும்.. ராவணனும்..:

வால்மீகி எழுதிய ராமாயணத்தில் ராமன் 14 ஆண்டுகள் காட்டில் இருந்தான். ஆனால் புதிய ராமாயணத்தில் எம்.ஜி.ஆர். என்ற ராமன், ராவணனை (கருணாநிதி) 13 ஆண்டுகள் வனவாசம் அனுப்பினார்.

ஏதோ விதியின் விளையாட்டு என்றும் சொல்லலாம். அரசியல் விபத்து என்றும் சொல்லலாம். நம்முடைய ராமர் பிரான் சென்ற பிறகு எப்படியோ அதே ராவணன் மீண்டும் வந்து சிம்மாசனத்தில் அமர்ந்து விட்டார்.

ராமபிரானின் சீடர்களாகிய நாம் தொடர்ந்து அதே ராவணனை எதிர்த்து போராடிக்கொண்டு இருக்கிறோம். மிக விரைவில் நமக்கு வெற்றி கிடைக்கும். தீய சக்திகள் வீழ்த்தப்படும். 3 முறை முதலமைச்சர் ஆகி இருக்கிறேன். 3 முறை எனது தலைமையில் பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள். இதுவெல்லாம் மகத்தான சாதனை.

நான் ஆடம்பரங்களை விரும்புவதில்லை!!!!:

நமது வரலாறு முடியவில்லை. நீண்ட அற்புதமான எதிர்காலம் காத்திருக்கிறது. பிரம்மாண்டமான வெற்றி பெறப் போகிறோம். சுய நலம் இல்லாமல் அதிமுக மட்டும் தான் மக்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கிறது.

எனது 60வது பிறந்த நாளுக்கு வாழ்த்து சொன்னார்கள். இதற்கு நன்றி கூறுகிறேன். எனது பிறந்த நாளை எப்போதுமே நான் கொண்டாட விரும்புவதில்லை. தொண்டர்களின் மகிழ்ச்சிக்காக கொண்டாடுகிறார்கள். எனது பிறந்த நாளை எந்தவித ஆடம்பரமும் இல்லாமல் மக்களுக்கு பயனளிக்கும் வகையில் கொண்டாட வேண்டும். வீண் ஆடம்பரம் கூடாது.

சமீபத்தில் முதல்வர் கருணாநிதிக்கு ஒரு விழா கொண்டாடப்பட்டது. அதற்கு ஆடம்பரமாக மின் விளக்கு போட்டு மின்சாரத்தை வீணாக செலவு செய்தார்கள். இதைப் பற்றி நான் அறிக்கை வெளியிட்டவுடன் கருணாநிதி ஆடம்பரம் வேண்டாம் என்று அறிக்கை விடுகிறார்.

இது காலம் கடந்த ஞானோதயம், எல்லா ஆடம்பரங்களையும் செய்து விட்டு இப்போது ஆடம்பரம் வேண்டாம் என்று சொல்வதை கண்டு மக்கள் ஏமாற மாட்டார்கள். இந்த ஆட்சியை கண்டு மக்கள் வெறுத்து விட்டார்கள். தேர்தல் எப்போது வந்தாலும் அதிமுகவுக்கு சாதகமாக ஓட்டுப் போட தயாராகி விட்டார்கள்.

எம்ஜிஆர் வாங்கிய சத்தியம்!!!:

புரட்சித் தலைவர் மறையும் முன்பு என்னிடம் கூறினார். எனக்கு நீ ஒரு சத்தியம் செய்து கொடுக்க வேண்டும் என்று கூறினார். என்ன என்று கேட்டேன். என் மறைவுக்கு பிறகு எந்தக் காரணத்தைக் கொண்டும் எந்த காரணத்தை முன்னிட்டும் எவ்வளவு சோதனை வந்தாலும் எவ்வளவு துன்பம் வந்தாலும் எவ்வளவு எதிர்ப்பு வந்தாலும், நீ என்னுடைய கழக தொண்டர்களை விட்டு போகக்கூடாது. எனது கழகத் தொண்டர்களுக்கு நீ துணையாக இருக்க வேண்டும். அவர்கள் உனக்குத் துணையாக இருப்பார்கள் என்று கூறினார்.

இன்று வரை புரட்சித் தலைவருக்கு நான் செய்து கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றுவதற்காகத்தான் இங்கே நின்று கொண்டு இருக்கிறேன். உங்களுடைய பொதுச் செயலாளராக நான் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறேன்.

அவருக்கு செய்த சத்தியத்தின்படி தான் நான் இந்த கழகத்தை காத்து வருகிறேன்.

எனக்கு சுய நல நோக்கம் கிடையாது. ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் சரி மக்களுக்கு என்னென்ன நன்மை செய்ய முடியுமோ அவற்றை செய்துவிட்டுப் போகலாம் என்ற சிந்தனையோடு செயல்பட்டுக்கொண்டு இருக்கின்ற ஒரே தலைவர் நான்தான். மக்கள் அதை மறக்கவில்லை. மறக்கவும் மாட்டார்கள்.

தாயைப் போல....:

அதிமுக ஆட்சி நடந்தபோது ஒரு தாயைப் போல் இந்த மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று திட்டமிட்டு அவற்றை நிறைவேற்றினேன். ஏதோ ஒரு விபத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விட்டது. மக்களுக்கு இப்போது உண்மை புரிந்து விட்டது. மக்கள் நம்மை ஆதரிக்க தயாராகி விட்டார்கள்.

இந்தியாவை ஆள்வோம்..:

எனவே நிச்சயம் மீண்டும் மக்கள் ஆதரவுடன் ஆட்சிக்கு வருவோம். தமிழ்நாட்டை ஆளுவோம். அதுமட்டும் அல்ல இந்தியாவையும் ஆளுவோம்.

தமிழுக்காக பாடுபட்ட ஜெயலலிதா!!

பொதுக் குழுவில் அன்னை தமிழ் காக்க ஜெயலலிதா பல முயற்சிகளை எடுத்துள்ளார் என்றும் அதற்காக அவருக்கு நன்றி தெரிவித்தும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பொதுக் குழுவில் பங்கேற்க வந்த ஜெயலலிதாவை அலங்கரிக்கப்பட்ட குதிரைகள்,யானைகளில் தொண்டர்கள் அதிமுக கொடியேந்தி அணிவகுத்து வரவேற்றனர். தாரை தப்பட்டை, பொய்க்கால் குதிரை, கிராமிய நடனங்களுடன் வானகரம் மெயின் ரோட்டில் இருந்து மண்டபம் வரை ஜெயலலிதாவுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

போயஸ் தோட்டத்தில் ஆரம்பித்து வழியெங்கும் அதிமுக கொடி, தோரணங்கள், வரவேற்பு பேனர்கள் கட்டப்பட்டிருந்தன.

ஆனால், ஜெயலலிதா ஆடம்பரங்களை சுத்தமாகவே விரும்புவதில்லை!

நன்றிங்க

//எம்ஜிஆர் வாங்கிய சத்தியம்!!!://

மரணித்தவர் மீது என்ன வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளலாம். ஏன்னா செத்தவர் எழுந்து வந்து மறுக்கவா போகிறார்!

//போயஸ் தோட்டத்தில் ஆரம்பித்து வழியெங்கும் அதிமுக கொடி, தோரணங்கள், வரவேற்பு பேனர்கள் கட்டப்பட்டிருந்தன.//

//ஆனால், ஜெயலலிதா ஆடம்பரங்களை சுத்தமாகவே விரும்புவதில்லை!//

அடடா....!

Wednesday, February 13, 2008

காதலர் தினம் பிப்ரவரி, 14

காதல் சந்தையில்

கன்னியரின் கற்பு

கறை படியும்

கள்ளக் காதலர் தினம்

பிப்ரவரி 14