Thursday, February 21, 2008

அணு சக்தி ஒப்பந்தம்

அணு சக்தி ஒப்பந்தம் - யு.எஸ். எம்பிக்கள் திடீர் கெடு

வியாழக்கிழமை, பிப்ரவரி 21, 2008

டெல்லி: மே மாதத்திற்குள் அணு சக்தி ஒப்பந்தத்தை இறுதி செய்து அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். அப்போதுதான் ஜூலைக்குள் அதை அமல்படுத்த முடியும். இல்லாவிட்டால் அடுத்து வரும் புதிய அரசு, ஒப்பந்தத்தை முழுமையாக மறு பரிசீலனை செய்யும். அது இந்தியாவுக்கு சாதகமாக இருக்காது என்று அமெரிக்க எம்.பிக்கள் இந்தியாவுக்கு மிரட்டல் விடுத்துள்ளனர்.

அமெரிக்க எம்.பிக்களான ஜனநாயகக் கட்சியின் ஜான் கெர்ரி, ஜோசப் பிடேன், குடியரசுக் கட்சியின் சச் ஹேகல் ஆகியோர் டெல்லி வந்துள்ளனர்.

டெல்லியில், செய்தியாளர்களிடம் அவர்கள் பேசுகையில், மே மாதத்திற்குள் ஒப்பந்தத்தை இந்திய அரசு அமெரிக்க காங்கிரஸ் சபைக்கு அனுப்பி வைக்க வேண்டும். அப்போதுதான் அதை ஜூலை மாதத்திற்குள், புதிய அரசு அமைவதற்குள் ஒப்புதல் பெறப்படும். அதைத் தாண்டி விட்டால், புதிய அரசு வந்து விடும். புதிய அரசு இதே நிலையில் ஒப்பந்தத்தை ஏற்கும் எனக் கூற முடியாது.

ஒப்பந்தம் முழுமையாக மறு பரிசீலனைக்கு உட்படுத்தப்படும். பல புதிய கெடுபிடிகளும், கட்டுப்பாடுகளும் வருவதற்கு வாய்ப்புள்ளது. மேலும், புதிய நிபந்தனைகளும் விதிக்கப்படலாம்.

மேலும், அணு ஆயுதத் தடை ஒப்பந்தம் உள்ளிட்ட பிற விவகாரங்களையும் புதிய அரசு கிளப்பக் கூடும்.

நேரம் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த அரசு முடிவதற்குள் ஒப்பந்தம் நிறைவேற்றப்படுவது இந்தியாவுக்கு நல்லது. இல்லாவிட்டால் இந்தியாவுக்கு சிக்கலாகி விடும்.

இந்தியா ஜனநாயக நாடு. இங்குள்ள சில கட்டாயங்கள், நிர்பந்தங்கள் அமெரிக்காவுக்குப புரிகிறது. ஆனால் ஒப்பந்தம் நிறைவேறியாக வேண்டும் என்பதில் அமெரிக்கா தீவிரமாக இருக்கிறது. இது தோல்வி அடைந்தால், அமெரிக்கா மீது இந்தியாவில் தவறான எண்ணங்கள் பரவி விடும் என்றார் அவர்.

பாகிஸ்தான் தேர்தலில் பார்வையாளர்களாக செயல்பட்ட ஜான் கெர்ரி உள்ளிட்ட 3 எம்.பிக்களும் நேற்று பிரதமர் மன்மோகன் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், பல்வேறு எம்.பிக்கள் உள்ளிட்டோரையும் சந்தித்துப் பேசினர்.

இடதுசாரிகள் கண்டனம்:

அமெரிக்க எம்.பிக்கள் விதித்துள்ள மே மாத கெடுவுக்கு இடதுசாரிக் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் கூறுகையில், இந்தியாவுக்கு நெருக்கடி கொடுக்க அமெரிக்காவுக்கு எந்த உரிமையும் இல்லை.

இந்த ஒப்பந்தத்தால் அமெரிக்க நிறுவனங்களுக்கு பெரும் பலன்கள் கிடைக்கும் என்பதாலேயே இதை அமல்படுத்த அமெரிக்கா நெருக்குதல் கொடுக்கிறது. ஆனால் அதற்கு இந்தியா அடி பணியாது என்று கூறினார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் ராஜா கூறுகையில், உலக அளவில் சக்தி வாய்ந்த நாடாக உருவாகி வருகிறது. எனவே அதைத் தடுக்கத்தான் இவ்வாறு நெருக்கடி கொடுக்கிறது அமெரிக்கா என்று கூறியுள்ளார்.

நன்றிங்க

தூண்டில் காரன் மிதப்பு மேலேதான் கண்ணாயிருப்பான்!

No comments: