Tuesday, April 29, 2008

நல்ல முன்னேற்றம் (!?)

தினமும் ஒரு கற்பழிப்பு: தலைகுனியும் தலைநகரம்

புதுடெல்லி (ஏஜென்சி), 29 ஏப்ரல் 2008 ( 16:29 IST )

நாளொன்றுக்கு ஒரு கற்பழிப்பு சம்பவம் நிகழ்வது, தலைநகர் புதுடெல்லியை தலைகுனியச் செய்ய வைத்துள்ளது.

இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் மட்டும், டெல்லி நகரின் பல்வேறு பகுதிகளிலும் மொத்தம் 330 கற்பழிப்பு மற்றும் பாலியல் கொடுமைகள் தொடர்பான வழக்குகள் பதிவாகியுள்ளன.

மொத்தம் 121 கற்பழிப்பு வழக்குகள் பதிவாகியுள்ள நிலையில், பாலியல் கொடுமைகள் தொடர்பான 210 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏப்ரல் மாதத்தில் மட்டும் 8 சிறுமிகள் உள்பட 14 பெண்கள் கற்பழிக்கப்பட்டுள்ளனர். இது, டெல்லி போலீஸ் கமிஷ்னர் ஒய்.எஸ்.தத்வாலுக்கு, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுக்கான பாராளுமன்றக் குழு நோட்டீஸ் அனுப்புவதற்கு தூண்டுகோலாய் அமைந்துள்ளது.

அதில், அண்மைக்காலமாக பதிவாகிவரும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று டெல்லி போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுபோன்ற கற்பழிப்பு சம்பவங்கள் தொடர்பாக டெல்லியின் மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், '90 சதவிகித கற்பழிப்பு வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர்களை கைது செய்துள்ளோம். அவர்களில் பெரும்பாலானோர், பாதிக்கப்பட்டோருக்கு முன்கூட்டியே தெரிந்த நபர்களாகவே இருக்கிறார்கள்' என்றார்.

கடந்த ஆண்டு பதிவாகியுள்ள 581 கற்பழிப்பு வழக்குகளில், பாதிக்கப்பட்டோருக்குத் தெரிந்த, அவர்களுடன் நன்றாக பழகியிருந்தவர்கள் 98.28 சதவிகிதத்தினராவர்.

டெல்லி நகரில் கடந்த 2005-ல் 658 கற்பழிப்பு வழக்குகள் பதிவாயின; அதே ஆண்டில் 762 பாலியல் கொடுமை தொடர்பான வழக்குகள் பதிவாயின. 2006-ல் 713 பாலியல் கொடுமை தொடர்பான வழக்குகள் பதிவாயின. மீண்டும் இக்குற்றங்கள் அதிகரித்து, கடந்த ஆண்டில் இவ்வழக்குகள் 835 என்ற அளவில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கடந்த 2007-ல் பதிவான கற்பழிப்பு வழக்குகளில், குற்றவாளிகளில் 68 சதவிகிதத்தினர் கல்வியறிவில்லாதவர்கள் என்பதும், 24 சதவிகிதத்தினர் பத்தாம் வகுப்பு வரை கற்றவர்கள் என்பதும் தெரியவருகிறது.

மேலும், 80 சதவிகிதத்தினர் பொருளாதாரத்தில் ஏழ்மை நிலையில் இருப்பவர்கள் என்பதும் போலீசாரின் ஆய்வறிக்கை மூலம் தெரியவருகிறது.

நன்றிங்க

நல்ல முன்னேற்றம் :(((

Sunday, April 27, 2008

மீள் பதிவு

அன்னிய நாடுகளில் அயல்நாட்டினரின் நிலை!

வாழ்வதற்காகவும், வாழ்வின் மேம்பாட்டுக்காவும் தாயகத்தை விட்டு அன்னிய நாட்டில் உழைத்துப் பிழைப்பதற்காக வரும் அயல் நாட்டினர் பலரின் நிலை மிகவும் பரிதாபத்துக்குரியதாக ஆகிவிடுகின்றது.

இது போன்ற துன்பங்களில் சிக்கித் தவிக்கும் மக்களின் நிலையறிந்து மற்ற நாட்டின் தூதரகங்கள் ஓரளவுத் தட்டிக்கேட்கும். ஆனால், உழைக்க வரும் இந்தியர்களை நீ என்ன கொடுமையும் படுத்திக்கொள், சம்பளம் கொடுக்காமல் கஷ்டப்படுத்து, அவர்களுக்கு தங்கும் விடுதிகள் வழங்காதே என்றெல்லாம் ஏற்கெனவே இந்திய அரசு ரகசிய ஒப்பந்தம் ஏதேனும் செய்துள்ளதோ என்று சந்தேகிக்கும் அளவுக்கு இந்தியத் தூதரகம் மக்கள் குறைகளைக் கண்டுக்கொள்வதில்லை!

இந்தியர்களுக்கு என்ன அநீதிகள் இழைக்கப்பட்டும் அது பற்றியச் சான்றுகளுடன் புகார் கொடுத்தாலும் இந்தியத் தூதரகம் அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. ஏனிந்த முதுகெலும்பற்ற நிலை?

தூதரகம் என்பது அந்நாட்டின் அரசுக்கு ஒப்பானது. உழைத்துப் பிழைக்க வரும் மக்கள் அநியாயமாக நசுக்கப்படுகிறார்கள் என்று நன்கு தெரிந்திருந்தும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டாத அயல் நாட்டில் அமைக்கப்பட்டிருக்கும் இந்தியத் தூதரகம் தேவைதானா?

(துன்பப்படுத்தும் மின்னஞ்சல் செய்தி, பகிர்ந்து கொள்கிறேன்)

அன்புடன்,
அபூ முஹை


*****

அனுப்புனர்:
சவூதி அரேபியாவில் பணிபுரியும் இந்திய பணியாளர்கள்.
ரியாத் சவூதி அரேபியா

பெறுநர்:
மாண்புமிகு தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள்
தலைமைச் செயலகம்
சென்னை

மாண்புமிகு முதல்வர் ஐயா அவர்களுக்கு!
உங்கள் மீது கடவுளின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக!!

நாங்கள் சவூதி அரேபியா ரியாத்தில் தனியார் நிறுவனத்தில் கடந்த சில ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறோம். இந்த நிறுவனத்தில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள் குறிப்பாக பல நூறு இந்தியர்கள் அதில் 100க்கும் மேற்பட்ட தமிழர்கள். AL-Wagaiah co, Ltd., AL-Omerini co, and AL-Faiq என்ற மூன்று பெயர்களில் செயல்படும் இந்த நிறுவனம் ஒவ்வொரு நிறுவனத்தின் பெயரில் மோசடிகளை செய்து விட்டு வெவ்வேறு பெயர்களில் உருவாக்கிக்கொண்டதுதான் இந்த 3 நிறுவனங்களும்.

நாங்கள் பணியாற்றிய நிறுவனத்தில் கடந்த 8 மாதங்களாக வேலை செய்யும் பணியாளர்களுக்கு சம்பளம் கொடுக்கவில்லை. நிறுவனம் மூடப்படும் மற்றும் சம்பளம் கொடுக்க முடியாத நிலையில் எங்களுக்கு கொடுக்க வேண்டிய சம்பள பாக்கிகளை கொடுத்து எங்களது தாய் நாடடிற்கு அனுப்பி வையுங்கள் என்று பல முறை கேட்டு வந்தோம் நிர்வாகம் எங்களது எந்த கோரிக்கையையும் ஏற்றுக் கொள்ளவில்லை.

பல மாதங்களாக உண்ண உணவின்றி இருக்க இடமின்றி சொல்லிலடங்கா துயரங்களை சந்தித்து வருகிறோம். இந் நிலையில் பாதிக்கப்பபட்டுள்ள இந்தியாவைச் சேர்ந்த 28 பேர் கொண்ட குழுவாக கடந்த 24/01/2008 அன்று இந்திய தூதரகத்தில் எங்களது நிலைமையை விளக்கி மனுக் கொடுத்தோம் அதன் கோப்பு எண்: File No: riy/cw/235/6/2007(18)

அதற்கிடையில் நாங்கள் பல முறை நிறுவன நிர்வாகத்திடம் எங்களுக்கு சேரவேண்டிய எங்களது சம்பளத்தை கொடுத்து எங்களை தாயக்திற்கு அனுப்பி வைக்கும்படி கெஞ்சி மன்றாடி வந்தோம் கடந்த வாரம் 27ம் தேதி நிர்வாகத்தின் பதிலை கேட்கச் சென்றோம். எங்கள் குழுவில் நிறுவன நிர்வாகத்திடம் நீதி கேட்டு எங்களை வழி நடத்தி வந்த 5 பேரை சவுதி குடியுரிமை காவலாளிகளை வைத்து கைது செய்து சிறைக் கொட்டடியில் அடைத்து விட்டார்கள்.

மீதி உள்ள எங்களை மிரட்டி உங்களுக்கும் இதே கதி தான் என்று உங்களது பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை சவுதி குடியுரிமை அமைச்சகத்தில் ஒப்படைத்து விட்டோம் என்று மிரட்டி அனுப்பி விட்டார்கள் வேறு வழியின்றி மீண்டும் நேற்று 30 03 2008 அன்று இந்தியத் தூதரகம் சென்று எங்களுக்கு உதவிட கையேந்தினோம். தூதரகத்தில் எங்களுக்கு 6மாதம் செல்லத்தக்க அனுமதி பேப்பர் மட்டும் வழங்கி இதை வைத்து நீங்கள் நடமாடிக் கொள்ளுங்கள் என்று அனுப்பி விட்டார்கள்.

எந்தக் குற்றமும் செய்யாத நீதி கேட்ட ஒரே காரணத்திற்காக சிறைவாசம் அனுபவித்து வரும் எங்கள் நண்பர்களை விடுவிக்கவும் உண்ண உணவின்றி வேறு வழி தெரியாமல் பரிதவிக்கும் எங்களுக்கு உதவிடவும் மாண்புமிகு முதல்வர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் தலையிட்டு எங்களுக்கு வரவேண்டிய சம்பள பாக்கிகள் கிடைத்து தாயகம் திரும்பி வர இந்தியத் தூதரகக்தின் மூலம் துரித ஏற்பாடு செய்ய ஆவண செய்யும் படி உங்களை பணிவன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

Company Name & Address
AL-WAGAIAH CO, LTD.,
Sponsor Name: Osman Abdul Aziz Al-Omairini
CR No: - 66210, Post Box 91681, Riyadh 11643
Phone : +966 1 2415202, Fax +966 1 2422201
Sponsor Cell no: Mr. Ali Abdul Aziz 00966 504429661, Mr. Ashraf al jindi 00966 505848277

சிறைச்சாலையில் உள்ள நண்பர்களின் விபரம்.

காதர் மைதீன் பாஸ்போர்ட் நம்பர்: A 7844359
முஹம்மது ரைஸ் பாஸ்போர்ட் நம்பர்: E 5084212
அப்துல் ரஹ்மான் பாஸ்போர்ட் நம்பர்: B 3105343
சதீஸ் மலையில் பாஸ்போர்ட் நம்பர்: B 6853774
இக்பால் அஹ்மத் பாஸ்போர்ட் நம்பர்: F 2044105

எங்களை தொடர்பு கொள்ள:
கந்தசாமி +966 556282148, முகைதீன் +966 508623067, முஹம்மது மீரா 00966 557048978

இப்படிக்கு
உங்கள் உதவியை நாடி நிற்கும் பாதிக்கப்பட்ட இந்தியர்கள்.

Copy to: TMMK Head Quarters and all political parties' offices.
Kalainger Tv, Sun tv, Makkal tv, Wintv, and All Printed and Internet medias.
*Enclosed some of Prof Documents

குறிப்பு: இந்த நகல் பெறும் செய்தி ஊடகங்கள் தயவு செய்து பாதிக்கப்பட்டவர்களின் பிரச்சனைக்கு தீர்வு காண உதவிடும்படி கேட்டுக் கொள்கிறோம்.

நன்றிங்க

அவலம் :(

Friday, April 25, 2008

குடியால் சீரழிந்த குடும்பம்.

குடும்பம் நடத்த மனைவி மறுப்பு: 'குடிகார' கணவர் தற்கொலை

வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 25, 2008

தூத்துக்குடி: குடிப்பழக்கத்துக்கு அடிமையானவருடன் குடும்பம் நடத்த முடியாது என்று மனைவி மறுத்ததால் விரக்தி அடைந்த கூலித் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

வல்லநாட்டை சேர்ந்த பரமசிவன் மகன் தம்புராஜ். கூலி தொழிலாளி. இவரது மனைவி முல்லை மலர். இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். தம்புராஜ் குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர். ஒழுங்காக வேலைக்குச் செல்லாமல் தினசரி குடித்து விட்டு மனைவியை அடித்து துன்புறுத்துவாராம்.

இதில் வெறுத்துப் போன முல்லை மலர் சில நாட்களுக்கு முன்பு கோபித்துக் கொண்டு நெல்லையில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.

இந்த நிலையில் தன் மாமனார் வீட்டுக்கு நேற்று சென்ற தம்புராஜ், தன்னுடன் வந்து குடும்பம் நடத்துமாறு மனைவியிடம் கெஞ்சினார். ஆனால் அவரது குடிப்பழக்கத்துக்கு பயந்துகொண்டு முல்லை மலர் தம்புராஜுடன் செல்ல மறுத்துவிட்டார்.

இதனால் அவமானத்துடன் சொந்த ஊருக்குத் திரும்பி வந்த தம்புராஜ் விரக்தியில் விஷம் குடித்து விட்டார். அவரை பாளை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலையில் தம்புராஜ் இறந்தார்.
இதுபற்றி பாளை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

நன்றிங்க

என்னத்த சொல்ல... :(

இது என்ன புதுசா?

கொட நாடு: சட்டசபையில் காங்-அதிமுக கடும் மோதல், கைகலப்பு தவிர்ப்பு!

வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 25, 2008

சென்னை: சட்டசபையில் இன்று அதிமுக-காங்கிரஸ் உறுப்பினர்களிடையே பயங்கர வாக்குவாதம் ஏற்பட்டது. இரு தரப்பினரும் அடித்துக் கொள்ளும் நிலை உருவானது. நல்லவேளையாக கைகலப்பு ஏதும் நடக்கவில்லை.

தொழிலாளர் நலத்துறை மானியக் கோரிக்கைகள் மீது பேசிய காங்கிரஸ் உறுப்பினர் கோவை தங்கம், வால்பாறை டீ எஸ்டேட் தொழிலாளர்களின நிலைமை குறித்துப் பேசினார். அப்போது ஜெயலலிதா-சசிகலாவுக்கு சொந்தமாகக் கூறப்படும் எஸ்டேட் அமைந்துள்ள கொட நாடு குறித்தும் பேசினார்.

அவர் கூறுகையில், வால்பாறை டீ எஸ்டேட் தொழிலாளர்களுக்கு தினக்கூலியாக குறைந்தது ரூ. 100 கோரி அதிமுக போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளது. இது நல்ல அறிவிப்பு. அதை நான் வரவேற்கிறேன்.

அதே நேரத்தில் கொட நாட்டில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கும் இதே அளவுக்கு ஊதியம் கோருவீர்களா என்றார்.

இதற்கு அதிமுக எம்எல்ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டனர். தங்கம் பேசியவை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என கத்தினர்.

பதிலுக்கு காங்கிரஸ் உறுப்பினர்களும் திமுகவினரும் குரல் தந்தனர். இதனால் யார் என்ன பேசுகிறார்களே என்பது புரியாத அளவுக்கு குழப்பம் நிலவியது.

இரு தரப்பினரையும் அமைதியாக இருக்குமாறு சபாநாயகர் ஆவுடையப்பன் விடுத்த வேண்டுகோள்கள் பலனளிக்கவில்லை.

அதிமுகவினரும்-காங்கிரஸ் உறுப்பினர்களும் ஒருவரை நோக்கி ஒருவர் விரல்களை நீட்டியடி கோபத்துடன் பேசினர். இரு தரப்பினரையும் பாமக எம்எல்ஏக்கள் அமைதிப்படுத்த முயன்றனர்.

அதே போல காங்கிரஸ் மூத்த எம்எல்ஏக்களான பீட்டர் அல்போன்ஸ், சுந்தரம் ஆகியோர் தங்கள் தரப்பினரை அமைதிப்படுத்தினர்.

அப்போது பின் வரிசையில் அமர்ந்திருந்த அதிமுகவைச் சேர்ந்த பொள்ளாச்சி ஜெயராமனும், சேகர் பாபுவும் காங்கிரஸ் எம்எல்ஏக்களை நோக்கி அடிக்கப் பாய்வது போல வேகமாக வந்தனர். பதிலுக்கு காங்கிரஸ் எம்எல்ஏக்களும் அவர்களை நோக்கி முன்னேற நிலைமை மோசமானது.

இந் நிலையில் எழுந்த அமைச்சர் ஆற்காடு வீராசாமி, காங்கிரஸ் உறுப்பினர் என்ன சொன்னார். கொட நாடு எஸ்டேட் தொழிலாளர்களுக்கும் ரூ. 100 ஊதியம் தரப்படுமா என்று தானே கேட்டார் என்றார்.

இதற்கு பதிலளித்த அதிமுக எம்எல்ஏ செங்கோட்டையன், கொட நாடு என்ற வார்த்தையை வேண்டுமென்றே அவர் பயன்படுத்தியுள்ளார். அதன் பி்ன்னணியில் வேறு அர்த்தம் உள்ளது. எனவே அந்த வார்த்தையை நீக்க வேண்டும் என்றார்.

அப்போது இடைமறித்த சபாநாயகர் ஆவுடையப்பன், கொட நாடு என்று சொல்வது மரபு தவறிய வார்த்தை அல்ல. இதனால் அதை நீக்க முடியாது என்றார்.

இதையடுத்து மீண்டும் கூச்சலிட்ட அதிமுகவினர் சிறிது நேரத்தில் அமைதியாயினர். இதைத் தொடர்ந்து கோவைத் தங்கம் தொடர்ந்து பேசிவிட்டே அமர்ந்தார்.

நன்றிங்க

//அதே நேரத்தில் கொட நாட்டில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கும் இதே அளவுக்கு ஊதியம் கோருவீர்களா என்றார்.//

ஒரு வாசகம் என்றாலும் திரு வாசகம் அல்லவா!

ஜெயாக்காவிடம் தங்கம் கேட்டது நியாயந்தானே, என்ன நாஞ்சொல்றது?

Tuesday, April 08, 2008

வந்தார்! சென்றார்!!

சட்டசபைக்கு வந்தார் ஜெ.-வெளிநடப்பு

செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 8, 2008

சென்னை: நீண்ட இடைவெளிக்குப் பிறகு இன்று சட்டசபைக்கு வந்த எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா, சிறப்பு கவன ஈர்ப்புதீர்மானம் ஒன்றை விவாதிக்க அனுமதி கோரினார். அனுமதி மறுக்கப்பட்டதால் வெளிநடப்பு செய்து வெளியேறினார்.

இன்று காலை சட்டசபை கூடியதும் சட்டசபைக்கு ஜெயலலிதா வருகை தந்தார். அவரை ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட அதிமுக எம்.எல்.ஏக்கள் திரளாக கூடி வரவேற்று அழைத்துச் சென்றனர்.

உள்ளே சென்றும் ஜெயலலிதா ஒரு சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்தை எழுப்பினார். அதுகுறித்து விவாதிக்க வேண்டும் என்று கோரினார். ஆனால் அதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்தார்.

இதையடுத்து அதிமுக வெளிநடப்பு செய்வதாக தெரிவித்து வெளியேறினார். அவரைத் தொடர்ந்து அதிமுகவினரும் வெளிநடப்பு செய்தனர்.

பின்னர் சட்டசபைக்கு வெளியே செய்தியாளர்களிடம் ஜெயலலிதா பேசினார். அப்போது கூறுகையில், ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம் தமிழக மக்களின் 40 ஆண்டு கால கனவுத் திட்டமாகும். காமராஜர் ஆட்சிக்காலத்திலும், பின்னர் எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்திலும், பிறகு எனது ஆட்சிக்காலத்திலும் இந்தத் திட்டத்தை அமல்படுத்த முயற்சி எடுக்கப்பட்டது.

கடந்த 27ம் தேதி சட்டசபையில் இதுதொடர்பாக உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு தீர்மானம் கொண்டு வந்தார். பின்னர் ஏப்ரல் 1ம் தேதி முதல்வர் கருணாநிதி ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தார்.

இந்த நிலையில் அமைச்சரவையைக் கூட்டாமலேயே, அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தையும் கூட்டாமல், தன்னிச்சையாக இத்திட்டத்தை நிறுத்தி வைப்பதாக முதல்வர் அறிவித்துள்ளார். இது கண்டனத்துக்குரியது.

கர்நாடக தேர்தலுக்கும், ஓகனேக்கலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எனவே இப்படிப்பட்ட முடிவை எடுத்ததற்காக முதல்வர் கருணாநிதி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றார் ஜெயலலிதா.

அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்து மதிமுக எம்.எல்.ஏக்களும் வெளிநடப்பு செய்தனர்.

நன்றிங்க

//ஒகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம் தமிழக மக்களின் 40 ஆண்டு கால கனவுத் திட்டமாகும். காமராஜர் ஆட்சிக்காலத்திலும், பின்னர் எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்திலும், பிறகு எனது ஆட்சிக்காலத்திலும் இந்தத் திட்டத்தை அமல்படுத்த முயற்சி எடுக்கப்பட்டது.//

எல்லாருடைய ஆட்சிக்காலத்திலும் ''முயற்சி'' மட்டுந்தாங்க எடுக்கப்படும்.

ஜெயாக்காவே மறுபடியும் ஆட்சிக்கு வந்தாலும் ''முயற்சி'' தான் எடுப்பாங்க...!

அமல்படுத்துவது... ம்ஹும்,

Saturday, April 05, 2008

என்ன ஒரு தைரியம்...!

திமுகவுக்கு அதிமுக எம்எல்ஏ பாராட்டு!-'ஆப்பு' எப்போது?

சனிக்கிழமை, ஏப்ரல் 5, 2008

மானாமதுரை: திமுக அரசை அதிமுக எம்எல்ஏ புகழ்ந்து பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை (தனி) அதிமுக எம்எல்ஏவாக இருப்பவர் குணசேகரன். இவர் ஒன்றிய செயலாளராகவும் உள்ளார்.

சில தினங்களுக்கு முன்பு ஒரு பள்ளி விழாவில் கலந்து கொண்டார். அப்போது திமுகவை சேர்ந்த நிர்வாகிகள் சிலரும் அந்த விழாவிற்கு வந்திருந்தனர்.

விழாவில் குணசேகரன் பேசுகையில் இன்றைய அரசு மாணவர்களின் நலனில் மிகுந்த அக்கறையோடு செயல்படுகிறது. மாணவர்களை உயர் கல்விக்கு அனுப்பும் செயலில் வேகமாக உள்ளது.

மாணவர்கள் பள்ளிக்கு குறித்த நேரத்தில் வர வேண்டும் என்பதற்காக சைக்கிள் வழங்கியுள்ளது. அதே போன்று இன்றைய முதல்வர் மாணவ மாணவிகளுக்கு இலவச பஸ் பாஸ் திட்டத்தை கொண்டு வந்துள்ளார்.

காமராஜர், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் கல்விக்கு ஒரு அமைச்சரை தான் நியமித்தனர். ஆனால் இன்றைய தமிழக முதலவர் கல்வி துறையை இரண்டாக பிரித்து இரு அமைச்சரை நியமித்துள்ளார்.

இதன் மூலம் நமது முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் கனவை நினைவாக்கியுள்ளார் தமிழக முதல்வர் என்று பேசினார்.

இந்த பேச்சை கேட்ட அதிமுக வினர் அதிர்ச்சி அடைந்து எம்எல்ஏவின் இந்த பேச்சு குறித்து தங்களது தலைமைக்கு புகார் அனுப்பியுள்ளனர். விரைவில் அவர் அதிமுகவில் கட்டம் கட்டப்படுவார் என்று தெரிகிறது.

இப்படித்தான் மறைந்த மதுரை மேற்குத் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ எஸ்.வி.சண்முகம் உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலினைப் புகழ்ந்து பேசினார். பின்னர் கட்சியை விட்டு அவர் ஓரம் கட்டப்பட்டார் என்பது நினைவிருக்கலாம்.

நன்றிங்க

அதிமுகவில் யாருக்கும் அட்டாக் வரலயா...?

கருகிய தளிர்!

பள்ளியில் திருட்டுப் பட்டம் சுமத்தியதால் 4ம் வகுப்பு மாணவி தற்கொலை

சனிக்கிழமை, ஏப்ரல் 5, 2008

சென்னை: பள்ளியில் திருட்டுப் பட்டம் சுமத்தப்பட்டதால் மனமுடைந்த 4ம் வகுப்பு மாணவி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சென்னை கொடுங்கையூர் சின்னாண்டி மடம் பகுதியை சேர்ந்த சக்கரவர்த்தி-பரமேஸ்வரி தம்பதியின் மகள்கள் புவனேஸ்வரி (வயது 9), கீதா (8), லட்சுமி (5).

புவனேஸ்வரியும், கீதாவும் சின்னாண்டி மடத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர்.

நேற்று முன்தினம் இந்தப் பள்ளியில் ஒரு மாணவியின் நோட் புக், பென்சில் காணாமல் போய் விட்டது. இதை தொடர்ந்து பள்ளி ஆசிரியைகள் 4 பேர் புவனேஸ்வரியிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது அவர்கள் மற்ற மாணவிகள் முன் புவனேஸ்வரிக்கு திருட்டு பட்டம் சுமத்தி அடித்ததாக கூறப்படுகிறது. இதனால் அவமானமடைந்த புவனேஸ்வரி மாலையில் வீடு திரும்பியதும் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொண்டார்.

இதில் உடல் கருகிய புவனேஸ்வரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டும் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தாள்.

இதுகுறித்து கொடுங்கையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து மாணவியின் தாயார் பரமேஸ்வரி கூறுகையில்,

எனது மகள் மீது அநியாயமாக திருட்டு பட்டம் சுமத்தி அவளை அடித்து துன்புறுத்தியுள்ளனர். எனது 2வது மகள் கீதாவையும் ஆசிரியைகள் அடித்துள்ளனர். எனவே அந்த 4 ஆசிரியைகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இச் சம்பவத்தால் அப் பகுதியில் பதற்றம் நிலவுவதால் சின்னாண்டி மடம் பள்ளிக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நன்றிங்க

மாணவ, மாணவிகளிடம் கண்ணியமாக நடந்து கொள்ள ஆசிரியர்கள், ஆசிரியைகள் பாடம்பெற வேண்டும்.

ஓர் உயிர் அநியாயமாக கருகி விட்டது. நெருப்பில் எப்படியெல்லாம் துடித்திருக்கும்...! பிள்ளையை இழந்த குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.