கொட நாடு: சட்டசபையில் காங்-அதிமுக கடும் மோதல், கைகலப்பு தவிர்ப்பு!
வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 25, 2008
சென்னை: சட்டசபையில் இன்று அதிமுக-காங்கிரஸ் உறுப்பினர்களிடையே பயங்கர வாக்குவாதம் ஏற்பட்டது. இரு தரப்பினரும் அடித்துக் கொள்ளும் நிலை உருவானது. நல்லவேளையாக கைகலப்பு ஏதும் நடக்கவில்லை.
தொழிலாளர் நலத்துறை மானியக் கோரிக்கைகள் மீது பேசிய காங்கிரஸ் உறுப்பினர் கோவை தங்கம், வால்பாறை டீ எஸ்டேட் தொழிலாளர்களின நிலைமை குறித்துப் பேசினார். அப்போது ஜெயலலிதா-சசிகலாவுக்கு சொந்தமாகக் கூறப்படும் எஸ்டேட் அமைந்துள்ள கொட நாடு குறித்தும் பேசினார்.
அவர் கூறுகையில், வால்பாறை டீ எஸ்டேட் தொழிலாளர்களுக்கு தினக்கூலியாக குறைந்தது ரூ. 100 கோரி அதிமுக போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளது. இது நல்ல அறிவிப்பு. அதை நான் வரவேற்கிறேன்.
அதே நேரத்தில் கொட நாட்டில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கும் இதே அளவுக்கு ஊதியம் கோருவீர்களா என்றார்.
இதற்கு அதிமுக எம்எல்ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டனர். தங்கம் பேசியவை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என கத்தினர்.
பதிலுக்கு காங்கிரஸ் உறுப்பினர்களும் திமுகவினரும் குரல் தந்தனர். இதனால் யார் என்ன பேசுகிறார்களே என்பது புரியாத அளவுக்கு குழப்பம் நிலவியது.
இரு தரப்பினரையும் அமைதியாக இருக்குமாறு சபாநாயகர் ஆவுடையப்பன் விடுத்த வேண்டுகோள்கள் பலனளிக்கவில்லை.
அதிமுகவினரும்-காங்கிரஸ் உறுப்பினர்களும் ஒருவரை நோக்கி ஒருவர் விரல்களை நீட்டியடி கோபத்துடன் பேசினர். இரு தரப்பினரையும் பாமக எம்எல்ஏக்கள் அமைதிப்படுத்த முயன்றனர்.
அதே போல காங்கிரஸ் மூத்த எம்எல்ஏக்களான பீட்டர் அல்போன்ஸ், சுந்தரம் ஆகியோர் தங்கள் தரப்பினரை அமைதிப்படுத்தினர்.
அப்போது பின் வரிசையில் அமர்ந்திருந்த அதிமுகவைச் சேர்ந்த பொள்ளாச்சி ஜெயராமனும், சேகர் பாபுவும் காங்கிரஸ் எம்எல்ஏக்களை நோக்கி அடிக்கப் பாய்வது போல வேகமாக வந்தனர். பதிலுக்கு காங்கிரஸ் எம்எல்ஏக்களும் அவர்களை நோக்கி முன்னேற நிலைமை மோசமானது.
இந் நிலையில் எழுந்த அமைச்சர் ஆற்காடு வீராசாமி, காங்கிரஸ் உறுப்பினர் என்ன சொன்னார். கொட நாடு எஸ்டேட் தொழிலாளர்களுக்கும் ரூ. 100 ஊதியம் தரப்படுமா என்று தானே கேட்டார் என்றார்.
இதற்கு பதிலளித்த அதிமுக எம்எல்ஏ செங்கோட்டையன், கொட நாடு என்ற வார்த்தையை வேண்டுமென்றே அவர் பயன்படுத்தியுள்ளார். அதன் பி்ன்னணியில் வேறு அர்த்தம் உள்ளது. எனவே அந்த வார்த்தையை நீக்க வேண்டும் என்றார்.
அப்போது இடைமறித்த சபாநாயகர் ஆவுடையப்பன், கொட நாடு என்று சொல்வது மரபு தவறிய வார்த்தை அல்ல. இதனால் அதை நீக்க முடியாது என்றார்.
இதையடுத்து மீண்டும் கூச்சலிட்ட அதிமுகவினர் சிறிது நேரத்தில் அமைதியாயினர். இதைத் தொடர்ந்து கோவைத் தங்கம் தொடர்ந்து பேசிவிட்டே அமர்ந்தார்.
நன்றிங்க
//அதே நேரத்தில் கொட நாட்டில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கும் இதே அளவுக்கு ஊதியம் கோருவீர்களா என்றார்.//
ஒரு வாசகம் என்றாலும் திரு வாசகம் அல்லவா!
ஜெயாக்காவிடம் தங்கம் கேட்டது நியாயந்தானே, என்ன நாஞ்சொல்றது?
No comments:
Post a Comment