குண்டுவெடிப்பு: 41 பேருக்கு 9 ஆண்டுகள் சிறை; மதானி உள்ளிட்ட 8 பேர் விடுதலை!
வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 28, 2007
கோவை:
கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் கேரள மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் அப்துல் நாசர் மதானி உள்ளிட்ட 8 பேர் விடுதலை செய்யப்படுவதாக தனி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், 41 பேருக்கு 5 முதல் 9 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
கடந்த 1998ம் ஆண்டு கோவையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு தொடர்பான வழக்கு கோவை தனி நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதில் கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி தீர்ப்பு அளிக்கப்பட்டது.
அப்போது குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படாத கேரள மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் அப்துல் நாசர் மதானி உள்ளிட்ட 8 பேர் ஜாமீனில் விடுதலையாக நீதிமன்றம் அனுமதித்தது.
இவர்கள் தவிர அல் உம்மா பாஷா, அன்சாரி உள்ளிட்ட 158 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டனர். இன்று அவர்களுக்கான தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டது.
முதலில் மதானி உள்ளிட்ட 8 பேரும் நிரபராதிகள் என கூறி அவர்களை விடுதலை செய்வதாக நீதிபதி உத்திராபதி அறிவித்தார்.
இதையடுத்து சாதாரண குற்றச்சாட்டுக்கள் நிரூபணமான 80 பேருக்கான தண்டனை விவரத்தை நீதிபதி வெளியிட ஆரம்பித்தார். முதற்கட்டமாக இன்று 41 பேருக்கு தலா 5 முதல் 9 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
இதில் 25 பேருக்கு தலா 9 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ.1000 அபராதமும், 10 பேருக்கு தலா 7 வருடங்கள் கடுங்காவல் சிறை தண்டனையும், 6 பேருக்கு தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.
இவர்கள் சிறையில் இருந்த காலத்தை தண்டனைக் காலத்தில் கழித்துக் கொள்ளலாம் என நீதிபதி அறிவித்தார். எனவே தண்டனை விதிக்கப்பட்டவர்கள் அனைவரும் ஏற்கனவே சிறையில் 9 வருடங்களுக்கு மேலே இருந்திருப்பதால் 41 பேரும் விடுதலை ஆனார்கள்.
விடுவிக்கப்படுகிறவர்கள் இறுதித் தீர்ப்பு வெளியாகும் வரை வழக்கு குறித்து வெளிப்படையாகப் பேசக் கூடாது என நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
தொடர்ந்து தண்டனை விவரத்தை நீதிபதி உத்திராபதி நாளை அறிவிப்பார் என்று தெரிகிறது.
தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படுவதையொட்டி கோவை நகர் முழுவதும் பலத்த பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. தீவிர வாகனச் சோதனை மற்றும் ரோந்துப் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. நகரின் முக்கியப் பகுதிகளில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
நன்றிங்க
தண்டனை அனுபவித்து முடிந்தபின் தீர்ப்பும், விடுதலையும்.
2 comments:
தமிழகத்தில் இஸ்லாமிய சிறுபான்மையினருக்கு மட்டும் முதலில் சிறை தண்டனை - பிறகு தீர்ப்பு.
குற்றம் செய்யாமல் பல ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த மற்றவர்களுக்கு எப்படி நீதி வழங்கப்போகிறார்கள் - அனுபவித்த தண்டணைக்கேற்றவாறு ஏதாவது குற்றங்களை புரிந்துகொள்ளலாம் என்றும் தீர்ப்பில் சொல்லியிருந்தால் தீர்ப்பு முழுமையாக இருந்திருக்கும்.
பிறைநதிபுரத்தான் உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.
Post a Comment