Tuesday, September 11, 2007

சேலம் கோட்டத்தில் கோவை,

சேலம் கோட்டத்தில் கோவை, திருப்பூர்;
பறிபோனது பொள்ளாச்சி, கிணத்துக்கடவு!!


செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 11, 2007

டெல்லி:

சேலம் ரயில் கோட்டத்துடன் கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய பகுதிகள் இணைவது உறுதியாகி விட்டது. ஆனால் அதற்குப் பதிலாக மதுரை கோட்டத்தில் உள்ள பொள்ளாச்சி மற்றும் கிணத்துக்கடவு ஆகிய பகுதிகள் அடங்கிய 79 கிலோமீட்டர் தொலைவிலான பகுதிகள் கேரளாவுக்கு தாரை வார்க்கப்படுகிறது.

சேலம் ரயில்வே கோட்டம் தொடர்பாக கேரளா ஆட்சேபனையும், எதிர்ப்பும் தெரிவித்து வருகிறது. வருமானம் அதிகம் வரக் கூடிய கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பகுதிகள் பாலக்காடு கோட்டத்திலேயே இருக்க வேண்டும் என அது கோரி வருகிறது.

ஆனால், பாலக்காடு கோட்டத்தில் தற்போது இடம் பெற்றுள்ள தமிழகப் பகுதிகளை சேலம் கோட்டத்துடன்தான் இணைக்க வேண்டும் என தமிழகம் கோரி வருகிறது.

இந்தப் பிரச்சினை தொடர்பாக டெல்லியில் ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் இரு மாநில எம்.பிக்களையும் அழைத்து ஆலோசனை நடத்தினர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, ரயில்வே இணை அமைச்சர் ஆர்.வேலு, மார்க்சிஸ்ட் தலைவர் சீதாராம் எச்சூரி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கலந்து கொண்ட கேரள எம்.பிக்கள் கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய பகுதிகள் தொடர்ந்து பாலக்காடு கோட்டத்திலேயே இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

ஆனால் இதற்கு தமிழக எம்.பிக்கள் மிகக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். எக்காரணம் கொண்டும் கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய பகுதிகளை கேரளாவுக்கு விட்டுத்தர மாட்டோம் என அவர்கள் தீர்மானமாக தெரிவித்தனர்.

ஒரு கட்டத்தில் இரு மாநில எம்.பிக்களிடையே கடும் வாக்குவாதம் மூண்டது. இதையடுத்து இரு தரப்பு எம்.பிக்களையும் லாலு பிரசாத் சமாதானப்படுத்தினார்.

கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் நடந்த ஆலோசனைக் கூட்டம் பின்னர் முடிவுக்கு வந்தது. அதன் பின்னர் ரயில்வே இணை அமைச்சர் ஆர்.வேலு செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அவர் கூறுகையில், சேலம் கோட்டத்துடன் கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய பகுதிகள் சேர்க்கப்படும். அது உறுதியாகியுள்ளது.

அதற்குப் பதிலாக, பாலக்காட்டிலிருந்து பொள்ளாச்சி வரையிலும், பொள்ளாச்சியிலிருந்து கிணத்துக்கடவு வரையிலும் உள்ள 79 கிலோமீட்டர் பகுதிகள் பாலக்காடு கோட்டத்துடன் சேர்க்கப்படுகின்றன. தற்போது இவை மதுரை கோட்டத்துடன் உள்ள பகுதிகள் ஆகும்.

வருகிற 14ம் தேதி நடப்பதாக இருந்த சேலம் கோட்டத் தொடக்க விழா தள்ளி வைக்கப்பட்டுள்ளது. விழா நடக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். முதல்வர் கருணாநிதி தொடங்கி வைப்பார். லாலு பிரசாத் யாதவ் தலைமை தாங்குவார் என்றார் வேலு.

கோவை, திருப்பூர், ஈரோடு ஆகியவை தமிழகத்திற்குள் வந்துள்ள போதிலும், இதுவரை மதுரை கோட்டத்துடன் இணைந்திருந்த பொள்ளாச்சி, கிணத்துக்கடவு ஆகியவை கேரளாவுக்கு தாரை வார்க்க முடிவு செய்யப்பட்டிருப்பது அப்பகுதியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சில தமிழக பகுதிகளைப் பெறுவதற்காக, வேறு சில தமிழகப் பகுதிகளை கேரளாவுக்கு தாரை வார்க்க வேண்டிய துர்பாக்கிய நிலை தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அச்சுதானந்தன் கொடும்பாவி எரிப்பு:

இதற்கிடையே, சேலம் ரயில் நிலையம் முன்பு இன்று சட்டக் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கோவை, திருப்பூர் உள்ளிட்ட தமிழகப் பகுதிகள் அனைத்தும் சேலம் கோட்டத்துடன் இணைக்கப்ப வேண்டும் என்று அவர்கள் கோஷமிட்டனர்.

அப்போது மாணவர்களில் சிலர் கேரள முதல்வர் அச்சுதானந்தனின் கொடும்பாவியை எரித்தனர். ஆனால் போலீஸார் குறுக்கிட்டு அதைத் தடுத்து நிறுத்தினர்.

இதே கோரிக்கையின்பேரில் கோவையில் உண்ணாவிரதம் இருந்து வரும் சட்டக் கல்லூரி மாணவர்களின் போராட்டம் இன்று 2வது நாளாக தொடர்ந்தது. ஆனால் கோவை, திருப்பூர் ஆகியவை சேலம் கோட்டத்துடன்தான் இருக்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருப்பதால் தங்களது போராட்டத்தை விலக்கிக் கொள்வதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.

நன்றிங்க

வாலு போச்சு கத்தி வந்தது டும் டும் டும்...

No comments: