Tuesday, September 04, 2007

டைட்டானியம்: நிலம் வாங்கத் தொடங்கியது டாடா.

டைட்டானியம்: நிலம் வாங்கத் தொடங்கியது டாடா

செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 4, 2007

தூத்துக்குடி:

டாடா நிறுவனத்தின் டைட்டானியம் டை ஆக்சைடு ஆலைக்கான நிலத்தைக் கையகப்படுத்தும் பணியில் டாடா ஸ்டீல் நிறுவனம் இறங்கியுள்ளது. இதுவரை 10 ஏக்கர் நிலத்தை அந்த நிறுவனம் கையகப்படுத்த ஒப்பந்தம் செய்துள்ளது.

சாத்தான்குளம் மற்றும் திருச்செந்தூர் தாலுகாக்களில் 1000 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமான டைட்டானியம் டை ஆக்சைடு ஆலையை நிறுவ டாடா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

ஆனால் இந்தத் திட்டத்திற்கு பல்வேறு கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக அனைத்து அரசியல் கட்சிகளும் மக்களிடம் கருத்து கேட்க குழுக்களை அனுப்பின. அரசும் ஒரு குழுவை அனுப்பியது.

இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படுவதாலும், பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்படுவதாலும் திட்டத்தை நிறுத்தி வைப்பதாகவும், அரசுக் குழு தரும் அறிக்கையின் அடிப்படையில் திட்டம் செயல்படும் எனவும் முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.

இந்த நிலையில், டைட்டானியம் டை ஆக்சைடு தொடர்பான சர்ச்சைகள் இன்னும் முற்றுப் பெறாத நிலையில், டாடா நிறுவனம் நிலம் கையகப்படுத்தும் வேலையில் தீவிரமாக இறங்கியுள்ளது.

இதற்காக டாடா ஸ்டீல் நிறுவனத்தைச் சேர்ந்த 9 பேர் கொண்ட அதிகாரிகள் குழு சாத்தான்குளம், திருசெந்தூர் தாலுகாக்களில் திட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று மக்களை சந்தித்து நிலங்களை கையகப்படுத்தி வருகின்றனர்.

கடந்த வாரம் முதல் இந்தப் பணியை டாடா நிறுவனம் தொடங்கியுள்ளதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அற. பழனியாண்டி தெரிவித்துள்ளார். பட்டா நிலங்களுடன் கூடிய 7538 பேரை, நேரடியாக அணுகி டாடா நிறுவனம் நிலங்களை கையகப்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

டாடா நிறுவனத்திடம் இதுவரை 100 ஏக்கர் நிலங்களுக்கான பத்திரங்கள் விற்பனைக்காக வந்திருப்பதாக தெரிகிறது. அதில் 10 ஏக்கர் நிலங்களுக்கு விலை பேசப்பட்டு, ஒப்பந்தமும் கையெழுத்தாகி விட்டதாம். இதில் அரசூர் 2 கிராமத்தில் 7 ஏக்கரும், குலசேகரன் பட்டனத்தில் 3 ஏக்கரும் அடக்கம்.

இந்த நிலங்கள் நல்ல வயல்வெளிகள் என்பதாலும், தண்ணீர் நிறைந்த பகுதி என்பதாலும் ஏக்கருக்கு ரூ. 90 ஆயிரம் விலை கொடுத்துள்ளதாம் டாடா நிறுவனம்.

நிலங்களை மொத்தம் 3 வகையாக டாடா நிறுவனம் பிரித்துள்ளது. அதன்படி நீர்ப்பாசன வசதியுடன் கூடிய வயல்வெளிகள், நீர்ப்பாசன வசதி இல்லாத நிலங்கள், தரிசு நிலங்கள் என பிரித்து அதற்கேற்ப விலையையும் நிர்ணயித்துள்ளனர். இதில் ஏக்கருக்கு ரூ. 90 ஆயிரம் என்பதுதான் அதிகபட்ச விலையாகும்.

டிசம்பர் மாத இறுதிக்குள் 1000 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த டாடா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

நிலங்களை வழங்குவோரின் குடும்பத்தில் படித்தவர்கள் இருந்தால் அவர்களின் தகுதிக்கேற்ப வேலை தரவும் டாடா நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றிங்க

பொதுவானவை.

No comments: