Wednesday, September 12, 2007

இந்தோனேசியாவில் பூகம்பம்.

இந்தோனேசியாவில் பயங்கர பூகம்பம்
- சுனாமி அபாயம் இல்லை


புதன்கிழமை, செப்டம்பர் 12, 2007

ஜகார்தா:

இந்தோனேசியாவின் பெங்குலு என்ற இடத்தில் இன்று மாலை பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. இதன் காரணமாக பல்வேறு நாடுகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. இருப்பினும் தற்போது அந்த எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டு விட்டது.

இந்தோனேசியத் தலைநகர் ஜகார்தாவுக்கு தென் மேற்கில், சுமத்ரா தீவுப் பகுதியில் உள்ள பெங்குலு என்ற இடத்தில் இரண்டு சக்தி வாய்ந்த நில நடுக்கங்கள் ஏற்பட்டன.

இந்திய நேரப்படி மாலை 6.10 மணிக்கு முதல் பூகம்பம் நிகழ்ந்தது. இது 7.9 ரிக்டராக இருந்தது. இரணண்டாவது நிலநடுக்கத்தின் அளவு 8 ரிக்டராக இருந்தது. மேலும் ஒரு பூகம்பமும் ஏற்பட்டது. இதன் அளவு 6.1 ரிக்டராக இருந்தது.

இந்த நிலநடுக்கம் காரணமாக இந்தியப் பெருங்கடல் பகுதியில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது.

இந்தியக் கடலோரம் உள்ள அனைத்து நாடுகளிலும் சுனாமி அலைகள் தாக்கக் கூடிய வாய்ப்புகள் உள்ளதாகவும், அந்தந்த நாடுகளில் சுனாமி எச்சரிக்கைகள் விடப்பட வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டது.

தற்போது ஏற்பட்டுள்ள பூகம்பத்தால் ஏற்படும் சுனாமி அலைள், இந்தோனேசியா மற்றும் ஆஸ்திரேலியாவை ஒரு மணி நேரத்தில் தாக்கக் கூடும். இந்தியா, இலங்கையை 3 மணி நேரங்களில் தாக்கக் கூடும் எனவும் அறிவிக்கப்பட்டது.

இருப்பினும் இந்தோனேசிய கடல் பகுதியில் எதிர்பார்த்தபடி சுனாமி அலைகள் எழவில்லை. இதையடுத்து சுனாமி அபாய எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டு விட்டது.

பூகம்பத்தால் பெங்குலு பகுதியில் உள்ள பல வீடுகள் கட்டடங்கள் இடிந்துள்ளன. உயிரிழப்பு குறித்துத் தெரியவில்லை. அந்தப் பகுதியில் பெரும் பீதி நிலவுகிறது.

தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலும் பூகம்பத்தின் அதிர்வுகள் உணரப்பட்டுள்ளன.

தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை:

சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து தமிழகக் கடலோரப் பகுதிகளில் காவல்துறையும் மாவட்ட நிர்வாகங்களும் விரைந்து நடவடிக்கையில் இறங்கின.

தமிழத்தில் உள்ள அனைத்து கடலோர மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மின்னல் வேகத்தில் நடவடிக்கையில் இறங்கினர்.

கடலோரப் பகுதிகளில் வசிப்போருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு பாதுகாப்பான தூரங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.

சென்னையில் மெரீனா கடற்கரைக்கு வந்த மக்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு விட்டனர். மெரீனா கடற்கரையோரம் உள்ள கட்டடங்கள், வீடுகளில் உள்ளோரும் கூட அப்புறப்படுத்தப்பட்டனர்.

கடந்த சுனாமியில் கடுமையாக பாதிக்கப்பட்ட நாகை, கடலூர், விழுப்புரம், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் முழு வேகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

எத்தகைய சூழ்நிலையையும் சந்திக்கும் அளவுக்கு தயார் நிலையில் இருக்குமாறு கடலோர மாவட்டங்களின் ஆட்சித் தலைவர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.

அதேபோல அந்தமானிலும் முழுமையான அளவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

இந்தியாவின் கடலோரப் பகுதிகளில் சுனாமி அலைகள் தாக்கக் கூடும் என மத்திய உள்துறை அமைச்சகமும் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது.

சென்னை, மும்பை, மங்களூர், கட்ச் வளைகுடா, அந்தமான் உள்ளிட்ட பகுதிகளில் கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறும் அது கேட்டுக் கொண்டது.

கடந்த முறை வந்த சுனாமியால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட நாகை மற்றும் கடலூர் மாவட்ட கடலோரப் பகுதிகளில் பெரும் பீதி நிலவியது. கடந்த சுனாமியின் நினைவுகளே இன்னும் அகலாத நிலையில் இந்த இரு மாவட்டங்களின் கடலோரப் பகுதி மக்களும் தங்களது வீடுகளை விட்டு வேகமாக வெளியேறினர்.

கடந்த முறையை விட இந்த முறை குறைந்த அளவிலேயே பூகம்பம் ஏற்பட்டுள்ளது என்றாலும் கூட இப்பகுதி மக்கள் குடும்பம் குடும்பமாக பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேறினர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உவரி உள்ளிட்ட பகுதிகளில் போலீஸார் மைக் மூலம் மக்களை எச்சரிக்கை செய்து பாதுகாப்பான பகுதிகளுக்கு அனுப்பினர்.

இதேபோல நெல்லை மாவட்டத்திலும் கடந்த முறை சுனாமி பாதித்த கடலோரப் பகுதிகளில் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்று கொண்டுள்ளனர்.

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள கடலோரப் பகுதிகளிலும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர்.

இருப்பினும் பொதுமக்கள் பீதியடையத் தேவையில்லை, யாரும் பயப்படத் தேவையில்லை என்று மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் கபில் சிபல் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடந்த 2004ம் ஆண்டு சுமத்ரா தீவில் ஏற்பட்ட பயங்கர பூகம்பத்தால் எழுந்த சுனாமி அலைள் ஆசிய நாடுளில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோரை பழி வாங்கியது நினைவிருக்கலாம்.

நன்றிங்க

பொதுவானவை

No comments: