Thursday, September 13, 2007

பீகாரில், 10 திருடர்கள் அடித்துக் கொலை!

பீகாரில் பயங்கரம்: 10 திருடர்கள் அடித்துக் கொலை!

வியாழக்கிழமை, செப்டம்பர் 13, 2007

ஹாஜிபூர்:

பீகாரில் திருடர்கள் என சந்தேகப்படும் 10 பேரை கிராம மக்கள் அடித்தே கொன்ற சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பீகாரில் சமீப காலமாக மக்கள் சட்டத்தை கையில் எடுத்துக் கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. சமீபத்தில் ஒரு நகைத் திருடனை பொதுமக்கள் கடுமையாக அடித்து உதைத்தனர். போலீஸாரும் சேர்ந்து கொண்டு அந்தத் திருடனைத் தாக்கியதால் பெரும் சர்ச்சை எழுந்தது.

அதேபோல நவடா மாவட்டத்தில், கடந்த திங்கள்கிழமை செயின் திருடி விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிய 3 பேரைப் பிடித்த பொதுமக்கள் அவர்களின் கண்களைப் பறித்து மிகக் கொடூரமாக தாக்குதல் நடத்தினர்.

இந்த நிலையில் பீகாரின் வைஷாலி மாவட்டம், தேல்புர்வா கிராமத்தில், 10 திருடர்களை கிராம மக்கள் விரட்டி விரட்டி அடித்துக் கொன்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இக்கிராமத்தில் அதிகாலையில் சிலர் கும்பலாக நடமாடியதைப் பார்த்த கிராம மக்கள் ஒன்று திரண்டு அவர்களைப் பிடித்தனர். அவர்களிடமிருந்து தப்ப அந்த நபர்கள் முயன்றுள்ளனர்.

ஆனால் கத்தி, கட்டை போன்ற ஆயுதங்களால் துரத்திய கிராம மக்கள் 10 பேரை சரமாரியாக அடித்து உதைத்தும், குத்தியும் கொன்றனர். ஒருவர் இந்தத் தாக்குதலில் மிகக் கடுமையாக காயமடைந்தார்.

தகவல் அறிந்ததும் போலீஸார் விரைந்து வந்தனர். 10 பேரின் உடல்களையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அனைவரும் திருடர்களாக இருக்கக் கூடும் என சந்தேகிக்கப்படுகிறது.

கொல்லப்பட்டவர்கள் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவில்லை.

நன்றிங்க

பொதுவானவை

No comments: