அமெரிக்காவில் வரதட்சணை கொடுமை?- கோமாவில் திருச்சி பெண்
செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 25, 2007
திருச்சி:
வரதட்சணை கொடுக்காததால், தனது மகளை கொடுமைப்படுத்தி கோமா நிலைக்குத் தள்ளி விட்டதாக, அமெரிக்க மாப்பிள்ளை மீது அந்தப் பெண்ணின் தந்தை திருச்சி போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
திருச்சி பாலக்கரையைச் சேர்ந்தவர் செபாஸ்டின். இவரின் மகள் ஸ்மாலின் ஜெனிட்டா (23). எம்பிஏ பட்டதாரியான இவருக்கும், காட்டூர் ஸ்ரீராம் நகரில் வசித்து வரும் சேவியர் மகன் கிறிஸ்டி டேனியல் என்பவருக்கும் கடந்த வருடம் திருமணம் நடந்தது.
திருமணத்தின்ேபாது, மகளுக்கு 50 பவுன் நகையும், மணமகன் கிறிஸ்டிக்கு 10 பவுன் நகை போட்டும் திருமணத்தை தனது செலவில் நடத்தியுள்ளார் செபாஸ்டின்.
மணமகன் கிறிஸ்டி டேனியல் அமெரிக்காவில் உள்ள இன்போசிஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கிறிஸ்டி தனது திருமணத்திற்கு பிறகு மனைவி ஜெனிட்டாவையும், தனது பெற்றோரையும் அமெரிக்காவிற்கு அழைத்து சென்றுள்ளார்.
அமெரிக்காவில் தனது குடும்பத்தோடு காரில் போகும் போது விபத்துக்குள்ளாகி அனைவரும் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த விபத்தில் ஜெனிட்டா பல அடி தூரம் தூக்கியெறியப்பட்டு எலும்புகள் உடைந்த நிலையில் தற்போது அமெரிக்க மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு கோமா நிலையில் உள்ளார்.
இந்த விபத்து குறித்து ஜெனிட்டா வீட்டாருக்கு கிறிஸ்டி எந்தத் தகவலும் தெரிவிக்க வில்லையாம். தனது மகள் கோமாவில் இருப்பது, அமெரிக்காவில் இருக்கும் குடும்ப நண்பர் மூலமாகத்தான் தெரிய வந்துள்ளது.
இதனால் அதிர்ச்சியுற்ற செபாஸ்டின் இதுகுறித்து விசாரிக்க கிறிஸ்டி டேனியல் குடும்பத்தாரிடம் விசாரிக்க தொடர்பு கொள்ள முயன்று விரக்தியடைந்து விட்டார்.
இதனால் தனது மகள் வரதட்சணை கொடுமை காரணமாக சிறை வைக்கப்பட்டிருக்கலாம் என்று எண்ணி, செபாஸ்டின் திருச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
அதில், திருமணம் நிச்சயிக்கப்பட்ட போது அவர்கள் 75 பவுன் நகையும், மாப்பிள்ளை திருமணத்துக்கு பிறகு வெளிநாடு சென்று விடுவதால் சீர்சாமான்களுக்கு பதிலாக 1 லட்சம் ரூபாய் ரொக்கப் பணமும் கேட்டனர்.
ஆனால் நான் 50 பவுன் நகையும், மாப்பிள்ளைக்கு 10 பவுனும் போடுகிறேன் என்று சொன்னதற்கு சரியென்று ஒத்துக் கொண்டார்கள். திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கும் போதே இடையில் திடீரென்று பணமும், நகையும் கேட்டார்கள்.
என்னால் கொடுக்க முடியவில்லை. திருமணத்தை என் செலவில் தான் நடத்தினேன். திருமணம் நடந்த நாளில் இருந்து என் பெண்ணிடம், கிறிஸ்டி சந்தோஷமாகவே பேசுவதில்லை.
இந்த விபத்திற்கு முன்னர் எனக்கு மெயில் அனுப்பிய ஜெனிட்டா, வரதட்சணை கேட்டு மாமியார், மாமனார், கணவர் கொடுமைப்படுத்துவதாக சொல்லியிருந்தார்.
பணத்துக்காக ஏற்பாடு செய்து கொண்டிருந்தபோது இந்த விபத்து நடந்துள்ளது என்று அவர் அந்த மனுவில் கூறியிருந்தார்.
விபத்துக்குள்ளான தனது மகளை பார்க்க அமெரிக்கா செல்ல செபாஸ்டின் முயன்று வருகிறார். இது தொடர்பாக அமெரிக்க போலீசுடன் தொடர்பு கொண்டு உரிய விசாரணை நடத்துமாறு தமிழக காவல்துறை அதிகாரிகளுக்கும் மனு அனுப்பியுள்ளார் செபாஸ்டின்.
நன்றிங்க
யாரைத்தான் நம்புவதோ...
No comments:
Post a Comment