Tuesday, September 11, 2007

தமிழ் மண் பாதுகாப்பு மாநாடு

சாத்தான்குளத்தில் தமிழ் மண் பாதுகாப்பு மாநாடு

செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 11, 2007

நெல்லை:

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் வருகிற அக்டோபர் 20ம் தேதி தமிழ் மண் பாதுகாப்பு மாநாடு நடத்தப்படும் என்று பாட்டாளி தமிழர் முன்னணி அறிவித்துள்ளது.

இதுகுறித்து பாட்டாளி தமிழர் முண்ணனியின் தலைவர் வியனரசு செய்தியாளர்களிடம் கூறுகையில், டாடா நிறுவனத்தை எதிர்த்து சாத்தான்குளத்தில் வரும் அக்டோபர் 20-ந் தேதி தமிழ் மண் பாதுகாப்பு மாநாடு பாட்டாளி தமிழர் முன்னணி சார்பில் நடத்தப்பட உள்ளது.

இம்மாநாட்டில் கலந்து கொள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல்.திருமாவளவன், உலகத் தமிழ் பேரவையின் தலைவர் பழ.நெடுமாறன் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அழைக்கப்பட உள்ளனர் என்றார் அவர்.

நன்றிங்க

-----------------------------
கோவில்பட்டியில் சாலை மறியல்
-3 ஆயிரம் பேர் கைது


செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 11, 2007

கோவில்பட்டி:

கோவில்பட்டி வேலாயுதபுரம் ரயில்வே மேம்பாலம் அருகே சர்வீஸ் ரோடு அமைக்க கோரி அனைத்துக் கட்சியினர் சார்பில் மாபெரும் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்ட 3000க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

சர்வீஸ் சாலையை அமைக்கக் கோரி அனைத்துக் கட்சியினர் மற்றும் வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் கடந்த 4 ஆண்டுகளாக தொடர்ந்து போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

இக்கோரிக்கையை வலியுறுத்தி சர்வீஸ் ரோடு போராட்டக்குழுவினர் கடந்த 4ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதன் அடுத்த கட்டமாக இன்று காலை 11 மணி அளவில் போராட்டக்குழு சார்பில் கோவில்பட்டி எட்டையாபுரம் ரோட்டில் சாலை மறியல் போராட்டம் நடந்தது.

மெயின் ரோட்டில், கொளுத்தும் வெயிலில் ரோட்டில் அமர்ந்து 2000 பெண்கள் உள்பட சுமார் 3000 பேர் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

தகவல் அறிந்ததும் கோவில்பட்டி தாசில்தார் திருநாவுக்கரசு சம்பவ இடத்திற்கு வந்து போராட்டக்குழுவினருடன் பேச்சு வார்த்தை நடத்தினார்.

மறியல் தவிர புதுக்கிராமம், இலுப்பையூரணி, தாமஸ்நகர், முகமது சாலியாபுரம், வள்ளுவர் நகர் ஆகிய பகுதிகளில் அனைத்து வியாபாரிகளும் முழு கடையடைப்பு நடத்தினர்.

மேலும் இப்பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட தீப்பெட்டி ஆலைகளும் மூடப்பட்டிருந்தன. வியாபாரிகள் மற்றும் தீப்பெட்டி ஆலை தொழிலாளர்கள் குடும்பத்துடன் இந்த மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 3000 ஆயிரம் பேரை போலீசார் கைது செய்தனர்.

நன்றிங்க, தட்ஸ்தமிழ்: 11.09.2007

------------------------------------------

பொன்னமராவதியை தனி தாலுகாவாக
அறிவிக்க கோரி மதிமுக போராட்டம்


செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 11, 2007

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியை தனி தாலுகாவாக அறிவிக்க வேண்டும் என்று கோரி மதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் அடிப்படை தேவைகளை நிறைவேற்றக் கோரியும், அதை தனித் தாலுகாவாக அறிவிக்கக் கோரி அரசைக் கண்டித்தும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இன்று பொன்னமராவதியில் தெருமுனை ஆர்பாட்டம் நடைபெற்றது.

இந்தப் போராட்டத்தில் மதிமுக மற்றும் கூட்டணி கட்சியான அதிமுகவைச் சேர்ந்த தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

நன்றிங்க, தட்ஸ்தமிழ்: 11.09.2007

----------------------------------------

அடுத்தபடியாக, மதுரை மாநகரிலே ...

செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 11, 2007

சென்னை:

மதுரை மாநகர வளர்ச்சிக்கு கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை கிடப்பில் போட்டு விட்ட திமுக ஆட்சியை கண்டித்து மதுரையில் நாளை அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:

மக்கள் நலத் திட்டங்களில் திமுக அரசு அக்கறை செலுத்துவதில்லை. அதிமுக ஆட்சியில் மக்களுக்குப் பயன்தரும் திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. ஆனால் அவற்றை நிறைவேற்றுவதில் திமுக அரசு மெத்தனமாக செயல்படுகிறது. கிடப்பில் போட்டுள்ளது.

மதுரை மாநகராட்சியில் கடந்த அதிமுக ஆட்சியில் ரூ. 1474 கோடி மதிப்பீட்டில் பல திட்டங்களை நிறைவேற்ற ஒப்புதல் வழங்கப்பட்டது. திடக் கழிவு மேம்பாடு, சுகாதார மேம்பாடு, பாலம் அமைத்தல், சாலைகள் மேம்பாட்டுத் திட்டம், குடிசை மாற்று சிறப்புத் திட்டம், நவீன மயானம் உள்ளிட்ட பல திட்டங்களுக்கு முறைப்படி ஒப்புதல் தரப்பட்டது.

ஆனால் இந்தத் திட்டங்களை நிறைவேற்ற ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி மக்கள் விரோதப் போக்கை திமுக அரசு கடைப்பிடிக்கிறது.

மதுரை மாநகரின் வளர்ச்சிக்குத் தேவையான திட்டங்களை நிறைவேற்ற திமுக அரசு தவறி விட்டது. திட்டங்களை நிறைவேற்றுவதில் திமுக அரசு காலம் தாழ்த்தி வருவதால், மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

இந்தத் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தியும், மதுரை மாநகராட்சியின் நிர்வாக சீர்கேட்டைக் கண்டித்தும் மதுரை தல்லாகுளம் தந்தி அலுவலகம் முன்பு நாளா காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இதற்கு அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் தலைமை தாங்குவார். மதுரை மாநகர மாவட்ட அதிமுக செயலாளர் ராஜன் செல்லப்பா முன்னிலை வகிப்பார் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

நன்றிங்க, தட்ஸ்தமிழ்: 11.09.2007

தங்கத் தமிழகம் போராட்டங்களால் சும்மா தக தகவென ஜொலிக்கிறது!

வெற்றி கிட்டும் வரை விடமாட்டோம்!!

No comments: