Wednesday, September 05, 2007

வெளிநாடுகளுக்கு விற்கப்பட்ட குழந்தைகள்!

வெளிநாடுகளுக்கு விற்கப்பட்ட குழந்தைகள்:
சிபிஐ விசாரணைக்கு உத்தரவு


புதன்கிழமை, செப்டம்பர் 5, 2007

சென்னை:

ஆதரவற்றோர் இல்லங்களிலிருந்து கடத்தப்பட்டு வெளிநாடுளுக்கு 22 குழந்தைகள் விற்கப்பட்ட விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை செங்குன்றத்தை சேர்ந்த சாலியா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில், சென்னையில் உள்ள தொண்டு நிறுவனம் ஒன்று நடத்தி வந்த ஆதரவற்றோர் இல்லத்தில் எனது குழந்தையை சேர்த்திருந்தேன். பின்னர் நான் எனது குழந்தையை பார்க்க சென்றபோது அங்கிருந்த எனது குழந்தை உட்பட 3 குழந்தைகளை தனியார் நிறுவனம் ஒன்று கடத்தி சென்றது தெரிய வந்தது.

போலியான சான்றிதழ் தயாரித்து 3 குழந்தைளையும் அந்த நிறுவனம் வெளிநாட்டினருக்கு விற்று விட்டது. கடத்திச் சென்ற தனியார் நிறுவனத்திடம் குழந்தையை தத்து கொடுத்தது போல போலியான ஆவணம் தயாரித்து, பின்பு அந்த போலி ஆவணத்தை மத்திய அரசிடம் காட்டி தடையில்லா சான்றிதழ் பெற்றிருக்கிறார்கள்.

பின்னர் தொண்டு நிறுவனம், அந்த 3 குழந்தைகளையும் வெளிநாட்டினருக்கு தத்து கொடுப்பது போல ஆவணங்கள் தயாரித்து விற்பனை செய்துள்ளனர்.

இவ்வாறு கடத்தி செல்லப்பட்ட 3 குழந்தைகளையும் மீட்டு, இந்த மோசடி குறித்து விசாரணை நடத்தவும் உத்தரவிடவேண்டும் என்று சாலியா தனது மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு தரப்பில் வக்கீல் இளங்கோ ஆஜராகி வாதாடினார்.

அப்போது அவர் கூறுகையில், 3 குழந்தைகள் மட்டும் கடத்தப்படவில்லை. தமிழகம் முழுவதும் இதுவரை 22 குழந்தைகள் கடத்தப்பட்டதாக புகார்கள் வந்துள்ளன. கடத்தப்பட்ட அனைத்து குழந்தைகளும் வெளிநாட்டில் விற்கப்பட்டுள்ளனர்.

தமிழக அரசு மட்டும் இதில் நடவடிக்கை எடுக்க இயலாது. மத்திய அரசு மற்றும் சிபிஐ ஒன்று சேர்ந்தால் தான் நடவடிக்கை எடுக்க முடியும் என்றார்.

மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் வில்சன் வாதிடுகையில், சிபிஐ விசாரணை நடத்த அரசு தயாராக உள்ளது. தென் மண்டல சிபிஐ இணை இயக்குனர் அசோக்குமார் தலைமையில் விசாரணை நடத்தலாம். நீதிமன்றம் உத்தரவிட்டால் அதற்கான ஏற்பாடுகளை செய்யலாம் என்றார்.

அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், குழந்தைகள் கடத்தல் தொடர்பாக சிபிஐ, தனி அதிகாரியை நியமித்து விசாரிக்க வேண்டும். மூன்று மாதங்களில் ஆரம்பகட்ட அறிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.

நன்றிங்க

தான் வசதியாக வாழ்வதற்கு அடுத்தவர் பிள்ளைகளை விலைபேசி விற்கும் அயோக்கியர்கள் தன் தாய், பிள்ளைகளையும் விற்றுத் தின்ன தயங்கிடமாட்டார்கள்!

2 comments:

முஸ்லிம் said...

மாசிலா ஐயா
உங்கள் மறுமொழிகள் சற்று விரசமாக இருக்கிறது.

முதல் வரி, இரண்டாவது வரி OK

முன்றாவது பாராவை மட்டும் மாற்றி அனுப்புங்களேன்.

மாசிலா said...

குழந்தைகள் பிறந்ததிலிருந்து அவர்கள் 16/18 வயது வரும்வரை பெற்றோர்களுக்கு இணையாக அரசாங்க நல அமைப்புகள் கண்கானிப்பிலேயே இருந்தும் வளர்க்கப்பட வேண்டும்.

நாலா பக்கத்திலிருந்தும் பணம் எக்கச்சக்கமாக பொங்கி வழியும் இந்த இந்தியாவில் நல்ல நிர்வாக திறமையுடன், சீரிய சமூக நலண் அக்கறை கொண்ட நடுவன், மாநில, சிற்றூர்கள், நகரங்கள் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் நினைத்தால் இவை அனைத்தையும் தடுத்து நிறுத்தமுடியும்.

பல அம்பானிகள், டாட்டாக்கள், மிட்டால்கள் ... இருக்கும் இந்நாட்டில் ஏழ்மை காரணமாக குழந்தைகள் காப்பகங்களில் விடுவது ஏற்கக்கூடியது அல்ல. அரசாங்கத்திற்கு இது ஒரு வெட்கக்கேடு.

வெள்ளைத்தோலை பார்த்ததும் பல்லை இளிக்கும் கும்பல்கள் இருக்கும்வரை இது தொடருமே.

அயல் நாடுகளுக்கு கடத்தப்பட்ட இது குழந்தைகள் பாதுகாப்பு அற்று உள்ளதால், இவர்களை குழந்தை பாலியல் வெறியர்கள் தங்கள் இச்சைகளை தீர்த்துக்கொள்வதற்கு வசதியாக கூட இருக்கும். யார் கண்டது.

இந்த அனைத்து அவலங்களுக்கும் நம் சமுதாயம்தான் பொறுப்பேற்க வேண்டும். நிவர்த்திக்க மாற்று வழிகளை உடனடியாக தேடவும் வேண்டும்.

மனிதனை மனிதனாக உணர்ந்து அவர்களுக்கு உரித்தான அனைத்து அடிப்படை உரிமைகள், சுதந்திரங்கள் கிடைக்குபடி செய்து கொடுத்தால் நம் சமுதாயம் நல்வழி செல்ல நன்றாக இருக்கும்.

விழிப்புணர்வு ஊட்டும் அருமையான செய்தியை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி முஸ்லிம்.