Sunday, September 16, 2007

4. வெடிக்கும் ராமர் பால சர்ச்சை!

வெடிக்கும் ராமர் பால சர்ச்சை:
அமைச்சர்கள் மோதல் - சங்கடத்தில் காங்.!


ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 16, 2007

டெல்லி:

ராமர் பாலம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில், தொல்பொருள் துறை தாக்கல் செய்த தவறான அறிக்கைக்கு பொறுப்பேற்று கலாச்சாரத் துறை அமைச்சர் அம்பிகா சோனி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று அமைச்சர் ஜெயராம் ரமேஷ் கூறியுள்ளதால் காங்கிரஸ் கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

ராமர் பாலம் தொடர்பான வழக்கில் மத்திய கலாச்சாரத்துறைக்கு உட்பட்ட மத்திய தொல்பொருள் ஆய்வுத் துறை உச்சநீதிமன்றத்தில் பதில் அறிக்கை தாக்கல் செய்தது.

அதில், ராமர் இருந்ததற்கான ஆதாரம் இல்லை. ராமாயணத்தில் நடந்தவை உண்மை என்பதற்கான ஆதாரங்களும் இல்லை என்று கூறப்பட்டிருந்தது. இது பெரும் சர்ச்சையைக் கிளப்பி விட்டது.

பெரும் எதிர்ப்பு கிளம்பியதால், அந்த சர்ச்சைக்குரிய அறிக்கையை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற்றது. இந்த நிலையில், காங்கிரஸ் அமைச்சர்களுக்குள் தற்போது மோதல் மூண்டுள்ளது.

இந்த சர்ச்சை குறித்து மத்திய அமைச்சர் ஜெயராம் ரமேஷ் கூறுகையில், நான் கலாச்சாரத்துறை அமைச்சராக இருந்திருந்தால், எனது பதவியை ராஜினாமா செய்திருப்பேன். எங்கேயோ அரியலூரில் நடந்த ரயில் விபத்துக்குப் பொறுப்பேற்று லால் பகதூர் சாஸ்திரி தனது பதவியை ராஜினாமா செய்தார்.

அப்படிப்பட்ட நிலையில் இதுபோன்ற முக்கியமான விஷயத்தில் மிகவும் மெத்தனமாக நடந்து கொண்டதற்காக கலாச்சாரத் துறை அமைச்சர் ஏன் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யக் கூடாது.

இது ஒரு சமூக மக்களின் உணர்வுகளை கடுமையாக பாதித்துள்ளது. இது தவறான அறிக்கை என்று கோபமாக கூறியுள்ளார். இதனால் காங்கிரஸ் கட்சிக்குள்ளும், மத்திய அமைச்சரவையிலும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

ரமேஷின் இந்த பேச்சு குறித்து கலாச்சாரத் துறை அமைச்சர் அம்பிகா சோனி கூறுகையில், நான் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், பிரதமரும் உத்தரவிட்டால் அடுத்த நிமிடமே அதைச் செய்யத் தயாராக இருக்கிறேன்.

ஜெயராம் ரமேஷ் சொல்வதற்காக எல்லாம் ராஜினாமா செய்ய முடியாது. இந்த விஷயத்தில் எனது துறை தவறு செய்யவில்லை. பதில் அறிக்கை தொடர்பாக 3 திருத்தங்கள் பரிந்துரைக்கப்பட்டன. அதில் 2 செய்யப்பட்டன. ஒன்று விட்டுப் போய் விட்டது.

இந்த பதில் அறிக்கையை தொல்பொருள் ஆய்வுத் துறைக்கு கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் அனுப்பினார். தவறு காரணமாக தொல்பொருள் துறை அதிகாரிகள் 2 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

தொல்பொருள் ஆய்வுத் துறை தலைவரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. பரிந்துரைக்கப்பட்ட முக்கியமான திருத்தத்தை செய்யாமல் விட்டதுதான் தவறாகி விட்டது. இது மிகப் பெரிய தவறு. கவனக்குறைவு. இதை நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது.

இந்தத் தவறு காரணமாக துறை ரீதியிலான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தவறு செய்தவர்கள் அதற்குப் பதில் சொல்லியாக வேண்டும்.

இந்த விவகாரம் தொடர்பான அனைத்து ஆவணங்களும் பிரதமர் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் தரப்பட்டுள்ளது என்றார் சோனி.

இதற்கிடையே, சேது சமுத்திரத் திட்டத்தை அமல்படுத்தி வரும் மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகம் தான் இந்தப் பிரச்சினையை கையாண்டிருக்க வேண்டும் என தொல்பொருள் ஆய்வுத் துறை கூறுகிறது.

காங்கிரஸ் அமைச்சர்கள் இருவர் ராமர் பாலம் தொடர்பாக மோதிக் கொண்டிருப்பதால் இந்தப் பிரச்சினை மேலும் சூடு பிடித்துள்ளது.

நன்றிங்க

சோதனை மேல் சோதனை
போதுமடா ஐயா!

தர்ம சங்கடத்தில்...
- காங்கிரஸ்

ராமர் பாலம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தொல்பொருள் துறை தாக்கல் செய்த அறிக்கையை தாக்கல் செய்வதற்கு முன்பு மத்திய அரசில் பொறுப்புள்ள அதிகாரிகள் மற்றும் முந்திரிகள் யாரும் பார்க்கவில்லையா?

இதைக்கூட கவனிக்காமலா அரசாங்கம் நடத்துறாங்க???

அதிகாரிகள் 2 பேர் தற்காலிக வேலை நீக்கம்!

அய்யோ பாவம் அதிகாரிகள்!!

No comments: