Wednesday, September 12, 2007

குமரன் பத்மநாதன் கைதாகவில்லை!

குமரன் பத்மநாதன் கைதாகவில்லை
- தாய்லாந்து அரசு மறுப்பு


புதன்கிழமை, செப்டம்பர் 12, 2007

கொழும்பு:

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனுக்கு அடுத்து 3வது இடத்தில் இருக்கும் முக்கியத் தலைவரான குமரன் பத்மநாதன் தாய்லாந்தில் கைது செய்யப்பட்டதாக கூறப்படுவதில் உணமை இல்லை. தாய்லாந்தில் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த யாரும் கைது செய்யப்படவில்லை என்று தாய்லாந்து வெளியுறவு அமைச்சகம் மறுத்துள்ளது.

கேபி என்று விடுதலைப் புலிகள் வட்டாரத்தில் அழைக்கப்படுபவர் குமரன் பத்மநாதன். கடந்த 1983ம் ஆண்டு இலங்கையில் இனக் கலவரம் வெடித்ததும் குமரன் மலேசியாவுக்கு தப்பினார். அங்கு 1987ம் ஆண்டு கப்பல் நிறுவனம் ஒன்றைத் தொடங்கினார்.

பின்னர் 1995ம் ஆண்டு விடுதலைப் புலிகள் அமைப்புக்காக 6 கப்பல்களை வாங்கி அனுப்பினார். குமரனின் முக்கிய வேலையே விடுதலைப் புலிகள் அமைப்புக்கு பல்வேறு இடங்களிலிருந்து ஆயுதங்களை கொள்முதல் செய்து அனுப்புவதுதான்.

குமரன் தவிர அய்யண்ணா என்பவரும் ஆயுதக் கொள்முதலில் ஈடுபட்டுள்ளார். விடுதலைப் புலிகள் இயக்கத்தில் பிரபாகரன், உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மன் ஆகியோருக்கு அடுத்த இடத்தில் இருந்து வருகிறார் குமரன். இவருக்கு தாய்லாந்து குடியுரிமை உள்ளது.

குமரன் பத்மநாதனுக்கு லண்டன், பிராங்க்பர்ட், ஏதென்ஸ், ஆஸ்திரேலியா, டென்மார்க் ஆகிய இடங்களில் வங்கிக் கணக்குகள் உள்ளன. யாங்கூன், சிங்கப்பூர் மற்றும் ஜோஹன்னஸ்பர்க் ஆகிய இடங்களிலிருந்துபடி செயல்பட்டு வந்தார் குமரன்.

இன்டர்போல் போலீஸாரால் தேடப்பட்டு வரும் விடுதலைப் புலிகள் தலைவர்கள் பட்டியலில் குமரனும் இடம் பெற்றிருந்தார்.

இந்த நிலையில் திங்கள்கிழமை இரவு இன்டர்போல் போலீஸாரால் குமரன் கைது செய்யப்பட்டதாக பாங்காக்கிலிருந்து வெளியாகும் பாங்காக் போஸ்ட் என்ற இதழில் செய்தி வெளியானது.

மேலும் குமரனை தங்களிடம் ஒப்படைக்குமாறு இலங்கை அரசு தாய்லாந்து இன்டர்போலை கேட்டுக் கொண்டுள்ளதாகவும் செய்தி வெளியானது. ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்பாக இந்தியாவுக்கு
குமரனை கொண்டு வர சிபிஐ முயற்சிப்பதாகவும் செய்திகள் வெளியாகின.

தாய்லாந்து மறுப்பு:

ஆனால் இந்த செய்தியை தற்போது தாய்லாந்து அரசு மறுத்துள்ளது. இதுகுறித்து தாய்லாந்து வெளியுறவு அமைச்சக துணை செய்தித் தொடர்பாளர் பியிரா கெம்பான் கூறுகையில், விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த யாரும் கைது செய்யப்பட்டதாக எங்களுக்கு தகவல் இல்லை. பாங்காக்கில் கடந்த ஒரு வாரத்திற்குள் யாரும் இதுபோல கைது செய்யப்பட்டதாக தெரியவில்லை என்று அவர் தெரிவித்தார்.

இதேபோல இன்டர் போல் அமைப்பின் தாய்லாந்து பிரிவும் குமரன் கைது செய்யப்படவில்லை என்று தெரிவித்துள்ளது. அந்த அமைப்பின் தலைவர் இதுகுறித்துக் கூறுகையில், கடந்த ஒரு வாரத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த யாரும் கைது செய்யப்படவில்லை.

குறிப்பாக குமரன் பத்மநாதன் கைது செய்யப்படவில்லை. அவரை ஒப்படைக்குமாறு இலங்கை அரசு கோரிக்கை விடுத்ததாக கூறப்படுவதும் தவறானது என்று விளக்கம் அளித்துள்ளார்.

இதன் மூலம் குமரன் கைது செய்யப்படவில்லை என்பது உறுதியாகியுள்ளது.

நன்றிங்க

திருந்துமா? தினமலர்

தாய்லாந்தில் கேபி கைது செய்யப்பட்டதாக தினமலரில் தவறான செய்தியை வெளிப்படுத்தியிருக்கிறார்கள் என்று தெரிகிறது.

No comments: