Tuesday, September 18, 2007

மூக்குத்தி போட்டதால் வேலையை இழந்தார்.

லண்டன்: மூக்குத்தி போட்டதால் விமான நிலைய வேலையை இழந்த இந்து பெண்!!

செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 18, 2007

லண்டன்:

மூக்குத்தி போட்டுக் கொண்டு வேலைக்கு வந்ததால், விமான நிலைய வேலையிலிருந்து இந்துப் பெண் ஒருவர் நீக்கப்பட்டுள்ளார்.

வட மேற்கு லண்டனில் உள்ள ஸ்டேன்மோர் பகுதியில் வசித்து வருபவர் அம்ரித் லால்ஜி (43). இந்தப் பெண்மணி, லண்டன் ஹூத்ரூ விமான நிலையத்தில் உள்ள பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தின் விஐபிக்கள் பிரிவின் வாடிக்கையாளர் சேவைப் பிரிவில் கிளீனராக வேலை பார்த்து வருகிறார்.

இந்துப் பெண்கள் மூக்குத்தி அணிவது சாதாரணமான விஷயம். அதுபோலவே அம்ரித்தும் மூக்குத்தி அணிந்திருந்தார். ஆனால் மூக்குத்தியுடன் வேலைக்கு வரக் கூடாது என அவரை வேலையில் நியமித்த யூரெஸ்ட் நிறுவனம் கூறியுள்ளது.

ஆனால் அதை ஏற்க மறுத்து விட்டார் அம்ரித். இந்து மத சம்பிரதாயப்படி பெண்கள் மூக்குத்தி அணிய வேண்டும். எனவே நான் மூக்குத்தியை அகற்ற மாட்டேன் என்று கூறி விட்டார் அம்ரித்.

ஆரம்பத்தில் இதை அந்த நிறுவனம் விட்டு விட்டது. இதையடுத்து கடந்த மார்ச் மாதம் முதல் மூக்குத்தி அணிந்தபடியே வேலை பார்த்து வந்தார் அம்ரித். அவரது மூக்குத்தி குறித்து எந்தப் புகாரும் வாடிக்கையாளர்களிடமிருந்து வரவில்லை என்பதால் யூரெஸ்ட் நிறுவனமும் பிரச்சினையை விட்டு விட்டது.

இந்த நிலையில் கடந்த மாதம், பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவன அதிகாரி ஒருவர், அம்ரித் மூக்குத்தியுடன் பணி புரிவதற்கு ஆட்சேபனை தெரிவித்து யூரெஸ்ட் நிறுவனத்திடம் புகார் கொடுத்தார். இதைடுத்து யூரெஸ்ட் நிறுவனம் நடவடிக்கையில் இறங்கியது.

ஒன்று மூக்குத்தியை விட்டு விட வேண்டும் அல்லது வேலையில் நீடிக்க முடியாது என்று அது அம்ரித்திடம் தெரிவித்தது. ஆனால் தனது மூக்குத்தியை எடுக்க முடியாது என்று அம்ரித் உறுதியாக தெரிவித்துள்ளார். இதையடுத்து கடந்த வாரம் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக கூறி அம்ரித்தை வேலையை விட்டு நீக்கி விட்டது யூரெஸ்ட்.

இந்த நடவடிக்கையில் அம்ரித் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், இந்த நடவடிக்கை என்னை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. எனக்கு அநீதி இழைக்கப்பட்டதாக உணர்கிறேன். நான் சார்ந்த இந்து மதத்தின் நம்பிக்கையின் அடிப்படையில்தான் நான் மூக்குத்தி அணிந்தேன்.

நான் யாரிடமும் எதையும் எதிர்பார்க்கவில்லை. எனது மத நம்பிக்கைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று மட்டுமே எதிர்பார்த்தேன். ஆனால் இதைக் கூட பொறுத்துக் கொள்ள முடியாத அளவுக்கு நிர்வாகம் இருப்பது எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது என்றார் அம்ரித்.

அம்ரித் லால்ஜிக்கு ஆதரவாக இங்கிலாந்து இந்து கவுன்சில் களம் இறங்கியுள்ளது. இந்து திருமண சம்பிரதாயப்படி கல்யாணமான பெண்கள் மூக்குத்தி அணிவது ஒரு வழக்கமாகும். எப்படி கிறிஸ்தவர்கள் திருமணத்தின்போது மோதிரங்களை மாற்றிக் கொள்கிறார்களோ, அது போலத்தான் இந்து சமூகத்தில் மூக்குத்தி அணியும் பழக்கம் நடைமுறையில் உள்ளது.

கிறிஸ்தவர்கள் திருமண மோதிரங்களை அணிந்து கொள்வதில் யூரெஸ்ட் நிறுவனத்திற்கு நம்பிக்கை இருக்கும்போது, அதை மதிக்கும்போது, மூக்குத்தி அணிவதை மட்டும் அது எதிர்ப்பது நியாயமற்றது என்று கோபமாக கேட்டார்.

இந்த விவகாரம் குறித்து யூரெஸ்ட் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், நிறுவன விதிமுறைப்படி, பணி நேரத்தின்போது திருமணமான பெண்கள், சிறிய அளவிலான மோதிரம், தோடு போன்றவற்றை மட்டுமே அணியலாம். உடலைத் துளைத்து அணியப்படும் பிற நகைகளுக்கு அனுமதி கிடையாது என்பதை பலமுறை அம்ரித் லால்ஜிக்கு எடுத்துக் கூறினோம்.

இதுபோன்று அணியப்படும் நகைகளால் பாக்டீரியாக்கள் பரவும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. மேலும் எங்களது நிறுவனம் உணவு விநியோகத்தில் ஈடுபட்டிருக்கும் ஒன்று. இப்படிப்பட்ட நகைகளை அணிந்து கொண்டு வேலை பார்த்தால், உணவில் பாக்டீரியாக்கள் பரவி பெரும் பிரச்சினையாகி விடும்.

மூக்குத்தி அணியாமல் வேலைக்கு வர வேண்டும் என்று அவரிடம் கூறினோம். அவர் ஏற்கவில்லை. இதனால்தான் வேலையிலிருந்து நீக்கினோம் என்றார் அவர்.

பேசாமல், யூரெஸ்ட் நிறுவனத்தினரை இந்தியாவுக்கு ஒரு மாதம் இன்டர்ன்ஷிப் கொடுத்து அழைத்து வந்து, மூக்குத்தி அணிந்த நமது நாட்டு இல்லத்தரசிகள் எப்படி பாக்டீரியா பரவலின்றி சமைக்கிறார்கள், வாழ்கிறார்கள் என்பதை கற்றுக் கொடுக்கலாம்.

நன்றிங்க

//பேசாமல், யூரெஸ்ட் நிறுவனத்தினரை இந்தியாவுக்கு ஒரு மாதம் இன்டர்ன்ஷிப் கொடுத்து அழைத்து வந்து, மூக்குத்தி அணிந்த நமது நாட்டு இல்லத்தரசிகள் எப்படி பாக்டீரியா பரவலின்றி சமைக்கிறார்கள், வாழ்கிறார்கள் என்பதை கற்றுக் கொடுக்கலாம்.//

அதானே,

மூக்குத்திப் போட்டால் பாக்டீரியா வருமா..?

நல்ல காது குத்தல்! :)

No comments: