Wednesday, September 26, 2007

2 மணி நேரம் பறந்த ரஷ்ய சிறுவன்!

விமான இறக்கையில் தொங்கியபடி 2 மணி நேரம் பறந்த ரஷ்ய சிறுவன்

புதன்கிழமை, செப்டம்பர் 26, 2007

மாஸ்கோ:

ரஷ்யாவின் பெர்ம் நகரிலிருந்து மாஸ்கோ வரை சென்ற போயிங் விமானத்தின் இறக்கையில் திருட்டுத்தனமாக தொங்கியபடி 2 மணி நேரம் பறந்துள்ளான் 15 வயது சிறுவன். இடையில் பனி தாக்கியதால் கை, கால் விரைத்துப் போய் மாஸ்கோ விமான நிலையத்தில் மயங்கி விழுந்தான்.

ரஷ்யாவின் ஊரல்ஸ் பகுதியைச் சேர்ந்தவன் ஆண்ட்ரி. இவனது தந்தை குடிப்பழக்கம் உடையவர். இதனால் அவருக்கும், ஆண்ட்ரிக்கும் ஒத்துப் போகவில்லை. ஆண்ட்ரியின் தாயாரும், தனது கணவருக்கு ஆதரவாகவே பேசுவாராம்.

இதனால் மனம் வெறுத்த ஆண்ட்ரி அருகில் உள்ள கிராமத்தில் வசிக்கும் தனது தாத்தா வீட்டுக்கு கிளம்பிச் சென்றான். தாத்தா வீட்டுக்கு வந்த அவன் அருகில் உள்ள பெர்ம் நகருக்குக் கிளம்பினான்.

பெர்ம் வந்த ஆண்ட்ரிக்கு மாஸ்கோ போகும் எண்ணம் வந்துள்ளது. இதையடுத்து பெர்ம் நகர விமான நிலையத்திற்குள் நைசாக புகுந்து அங்கு மாஸ்கோ செல்லத் தயாராக இருந்த போயிங் விமானத்தில் ஏறியுள்ளான்.

விமானத்தின் இறக்கைப் பகுதியில் பதுங்கிக் ெகாண்டான். பெர்ம் நகரிலிருந்து அந்த விமானம் கிளம்பியதும் இறக்கையில் இறுகப் பிடித்தபடி இருந்துள்ளான். பெர்ம் நகரிலிருந்து மாஸ்கோவின் நுகோவா விமான நிலையம் கிட்டத்தட்ட 1,300 கிலோமீட்டர் தூரமாகும்.

இத்தனை தூரத்தையும் ஆண்ட்ரி இறக்கையில் தொங்கியபடி பயணித்துள்ளான். அவன் பயணித்த விமானம் மணிக்கு 900 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக் கூடியது. வழியில் -50 டிகிரி அளவுக்கு கடும் பனி நிலவியது. இத்தனையையும் தாங்கியபடி விமானத்தில் பயணித்துள்ளான் ஆண்ட்ரி.

விமானம் மாஸ்கோ வந்து சேர்ந்ததும், அதுவரை இருந்த உறுதி குலைந்து அப்படியே தரையில் மயங்கி விழுந்தான் ஆண்ட்ரி. இதைப் பார்த்ததும் விமான நிலைய ஊழியர்கள் விரைந்து வந்து அவனை மீட்டனர்.

கை, கால்கள் விரைத்துப் போன நிலையில் இருந்த அவனை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவனது உடைகளைக் கூட கழட்ட முடியாத அளவுக்கு விரைத்துப் ேபாயிருந்தன கை, கால்கள்.

தற்போது ஆண்ட்ரிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவனது பெற்றோருக்குத் தகவல் தரப்பட்டுள்ளது. அவர்கள் உடனடியாக மாஸ்கோ விரைந்து வந்தனர்.

ஆண்ட்ரி உயிருடன் வந்தது மிகப் பெரிய அதிசயம் என்று டாக்டர்கள் வியப்பு வெளியிட்டுள்ளனர்.

இதற்கிடையே, ஒரு சிறுவன் விமானத்தில் ஏறி இறக்கையில் பயணிக்கும் அளவுக்கு பாதுகாப்பு குளறுபடிகள் பெர்ம் நகர விமான நிலையத்தில் இருப்பது பெரும் கேள்விக்குறியையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.

நன்றிங்க

அதிசயந்தான்!!!

No comments: