Friday, August 17, 2007

இன்னொரு மீனாட்சிபுரமாக...

மீனாட்சிபுர ஸ்டைலில் மீண்டும் ஒரு பரபரப்புக்குத் தயாராகி வருகிறது நெல்லை. அங்கே திரளான தலித் மக்கள் மதம் மாறப் போகிறார்கள். அவர்கள் தழுவப் போவது புத்த மதத்தை. 'தீண்டாமை' காரணமாக அவர்கள் கிறிஸ்தவ மதத்தை விட்டுக் கிளம்பப் போகிறார்கள் என்பதுதான் இதில் வேதனையான விஷயம்.

_இப்படி புத்த மதத்துக்குப் போக இருப்பவர்கள் அனைவருமே ஆர்.சி. எனப்படும் ரோமன் கத்தோலிக்கப் பிரிவைச் சேர்ந்த பறையர் சமூக மக்கள். இவர்களை 'ஏழை கிறிஸ்துவர் விடுதலை இயக்கம்' என்ற அமைப்பு, புத்த மதத்துக்கு மதம் மாற்ற இருப்பதாகக் கேள்விப்பட்டு, எக்கச்சக்க பரபரப்புக்குள்ளானோம்.

இந்த மதமாற்ற நிகழ்ச்சிக்கு முத்தாய்ப்பாக, கடந்த 29.7.07 அன்று பாளையங்கோட்டை ஆதிதிராவிடர் நலச்சங்க கட்டடத்தில் புத்தமதம் தொடர்பான ஒரு ரகசிய கருத்தரங்கு நடந்திருக்கிறது. அதில் சுமார் ஐம்பது தலித் கிறிஸ்துவர்கள், குறிப்பாக பறையர் சமூகத்தினர் பங்கேற்றிருக்கிறார்கள். சென்னை உயர்நீதிமன்ற வக்கீலும், புத்த சமூக செயல்பாட்டு பாசறைத் தலைவருமான தமிழினியன் என்பவர், அந்தக் கருத்தரங்கை நடத்தியிருக்கிறார். அதைத் தொடர்ந்துதான் இந்த மதமாற்றச் செய்தி நெல்லையில் மல்லுக்கட்டத் தொடங்கியிருக்கிறது.

ஆரம்பகட்டமாக ஆர்.சி. கிறிஸ்துவ பறையர் சமூகத்தினர் நூற்றைம்பது பேர் புத்தமதத்துக்கு மாற இருப்பதாகவும், ஏழை கிறிஸ்துவர் விடுதலை இயக்க அமைப்பின் மாநிலத் தலைவர் நரேஷ் அம்பேத்கர் என்பவர்தான் இந்த மதமாற்றத்துக்கு முன்னோடி என்பதும் நமக்குத் தெரியவந்தது. இவரும் பறையர் சமூகத்தைச் சேர்ந்தவர்தான். அவர் பாளையங்கோட்டை, தாழையூத்து, தென்கலம், தேவர்குளம், சங்கரன்கோயில், லாலுகாபுரம், வைராவிகுளம் ஆகிய ஊர்களில் தலித் மக்களை புத்த மதத்துக்கு ஈர்த்திருக்கிறார் என்றும் கேள்விப்பட்டோம்.

நரேஷ் அம்பேத்கரை நாம் சந்தித்து, ''ஏன் இந்தத் திடீர் மதமாற்றம்?'' என்றோம்.

''இந்து மதத்தில் தீண்டாமை இருப்பதால்தான் தலித்துகள் கிறிஸ்துவ மதத்தில் சேர்ந்தனர். அது வாணலிக்குத் தப்பி அடுப்பில் விழுந்த கதையாகிவிட்டது. ரோமன் கத்தோலிக்க கிறிஸ்துவப் பிரிவில் தீண்டாமை தலைவிரித்தாடுகிறது. தலித் கிறிஸ்துவர்களுக்கு கிறிஸ்துவ தேவாலயங்களில் சம உரிமை இல்லை. சில ஆலயங்களில் அவர்கள் தனியாக உட்கார வைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பிலும் கூட சம உரிமையில்லை. கல்லூரிப் பேராசிரியர்கள், பங்குத்தந்தையர், பேராயர்கள் போன்ற உயர் பதவிகள் எங்களுக்கு மறுக்கப்படுகிறது. கடைநிலை ஊழியர்களாக மட்டுமே நாங்கள் உட்கார வைக்கப்படுகிறோம். தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒரு சிலர் பங்குத்தந்தையாக இருந்தாலும், அவர்கள் கையால் திவ்விய நற்கருணை அப்பம் வாங்கிக் கொள்ள மற்ற சமுதாயத்தினர் மறுக்கிறார்கள்.

கல்லறைத் தோட்டத்தில் பிணத்தைப் புதைப்பதில் கூட தீண்டாமை நிலவுகிறது. தலித் கிறிஸ்துவர்கள் உடல்களை கிழக்குப் பக்கமாகவும், மேல்ஜாதி கிறிஸ்துவர்கள் உடலை மேற்குப் புறமாகவும் தனித்தனி இடங்களில் புதைக்கிறார்கள். இது எவ்வளவு பெரிய கொடுமை?

எல்லாவற்றுக்கும் மேலாக பாளையங்கோட்டை புனித சவேரியார் ஆலயம் இருக்கும் இடம் பறையர் சமூகத்துக்குச் சொந்தமானது. அதை மேல்ஜாதி கிறிஸ்துவர்கள் அந்தக் காலத்திலேயே ஏமாற்றி அபகரித்து விட்டார்கள். அந்த நிலத்தை மீட்க பலமுறை கலெக்டரிடம் மனு கொடுத்தும் எந்தப் புண்ணியமும் இல்லை. அவர்களை எதிர்க்கும் சக்தியும் எங்களுக்கு இல்லை. அதனால்தான் மதம் மாற முடிவு செய்தோம். புத்தமதத்தில் சேர்ந்துவிட்டால் ஜாதிக்கொடுமை இல்லை. தீண்டாமை இல்லை. மதம் மாறும்படி யாரையும் நாங்கள் கட்டாயப்படுத்தவில்லை'' என்றார் அவர்.

புத்தமதத்துக்கு மாறப்போகும் தாழையூத்து பறையர் சமூகத்தினர் வசிக்கும் பகுதிக்கு நரேஷ் அம்பேத்கர் நம்மை அழைத்துச் சென்று அவர்களில் சிலரை நமக்கு அறிமுகப்படுத்தினார். அதில் ஒருவர் ஆல்டன் என்ற இருபத்து மூன்று வயது இளைஞர், குடும்பத்துடன் ஒட்டுமொத்தமாக மதம் மாற இருந்த அவர் நம்மிடம் பேசினார்.

''கிறிஸ்துவ மதத்தில் சம உரிமையில்லை. ஒடுக்கப்படுகிறோம். வைராவிக்குளத்தைச் சேர்ந்த ஸ்டீபன் என்பவர் சாமியாருக்குப் படித்தவர். அவரை மேல்ஜாதியினர் கிண்டல், கேலி செய்ததால் மனநலம் பாதிக்கப்பட்டு ஊருக்குத் திரும்பிவிட்டார். அதேபோல அருட்சகோதரியாக (கன்னியாஸ்திரியாக) ஆக வேண்டிய ஒருவருக்கும் இதே நிலை ஏற்பட்டு, அவர் மதத்தைவிட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டார். ஆகவேதான் நான், எனது தாயார் பன்னீர் செல்வம், சகோதரிகள் அருள் ஆஷா போஸ்லின், அருள்திரேசா, அருள் ஆனிசா ஆகியோரோடு புத்த மதத்துக்கு மாறப் போகிறேன்'' என்றார் அவர்.

நரேஷ் அம்பேத்கருக்கு இப்படி மதமாற்ற ஐடியாவைத் தந்தவர் அன்புதாசன் என்று கேள்விப்பட்டோம். அன்புதாசன் அம்பேத்கர் பேரவையின் மாநில பொதுச் செயலாளர். அவருடன் தொலைபேசியில் பேசினோம்.

''சார்! இந்துக்கள் எங்களை விஷம் வைத்துக் கொல்கிறார்கள். கிறிஸ்துவர்கள் இனிப்பில் விஷம் வைத்துக் கொல்கிறார்கள். அவ்வளவுதான் வித்தியாசம்.

சென்னை லயோலா கல்லூரி தலித் கிறிஸ்தவர்களுக்காக உருவாக்கப்பட்டது. ஆனால், அங்கு தலித்துகளுக்கு உரிமை மறுக்கப்படுகிறது.

ஆகவே, மதம் மாறுவதுதான் தலித் மக்களுக்குள்ள ஒரே தீர்வு. கடந்த அக்டோபர் மாதம் சென்னையில் பத்தாயிரம் பேர் புத்தமதத்தைத் தழுவினார்கள். நெல்லையில் இந்த மாதக் கடைசியில் தலித் கிறிஸ்துவர்கள் புத்தமதத்துக்கு மாறப் போகிறார்கள். இதற்காக பிரமாண்ட விழா ஒன்றை நடத்த இருக்கிறோம். தமிழ்நாட்டில் உள்ள லட்சக்கணக்கான தலித் கிறிஸ்துவர்களை மதமாற்றம் செய்வதே எங்கள் இலக்கு'' என்றார்.

வக்கீல் தமிழினியனிடம் பேசியபோது, '' பொதுவாக இந்துக்கள்தான் மதம் மாறுவார்கள். ஆனால், இந்த முறை முதல் தடவையாக கிறிஸ்துவர்கள் மதம் மாறப் போகிறார்கள். கிறிஸ்துவ சபையில் மனுதர்மம்தான் ஆட்சி செய்கிறது. சில ஆலயங்களுக்குள் தலித் கிறிஸ்துவர்கள் போகவே முடியாத சூழ்நிலை இருக்கிறது.

இடஒதுக்கீடு பட்டியலில் தலித் கிறிஸ்துவர்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் இருக்கிறார்கள். ஆனால் புத்த மதத்தில் சேர்ந்தால், அவர்கள் தாழ்த்தப்பட்ட பிரிவில் சேர்க்கப்படுவார்கள். முதல்கட்டமாக நூற்றைம்பது பேர் புத்த மதத்தைத் தழுவ இருக்கிறார்கள். நெல்லையிலேயே மதமாற்ற விழாவை நடத்தப் போகிறோம். விரைவில் பத்து ஏக்கர் நிலம் வாங்கி புத்த விகார் ஒன்றையும் கட்டப்போகிறோம்'' என்றார் அவர்.

சரி! இந்த மதமாற்ற முயற்சி பற்றி, ரோமன் கத்தோலிக்க கிறிஸ்துவ சபையின் கருத்து என்ன? ஆயர் ஜூடு பால்ராஜ் சார்பாக, ஒரு பங்குத்தந்தை நம்மிடம் 'பெயர் போட வேண்டாம்' என்ற வேண்டுகோளுடன் பேசினார்.

''நீங்கள் சொல்லும் ஏழை கிறிஸ்துவர்கள் விடுதலை இயக்கத்தைப் பற்றி இப்போதுதான் கேள்விப்படுகிறேன். அவர்கள் இதுவரை எங்களிடம் எந்தக் கோரிக்கைகளையும் முன்வைக்கவில்லை. ஆர்.சி. கிறிஸ்துவ சபையில் ஜாதிப் பிரச்னை இருப்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் நிச்சயமாக தீண்டாமை இல்லவே இல்லை.

இங்குள்ள பங்குத் தந்தையரில் ஐந்து பேர் தலித் மக்கள். 1990_களுக்குப் பிறகு கிறிஸ்துவ சபையில் தலித்துகளுக்கு அதிகப் பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டு வருகிறது. அவர்களது வாழ்க்கை மேம்பாட்டுக்காக தனி அறக்கட்டளை அமைத்திருக்கிறோம்.

வேலைவாய்ப்பில் தலித்துகளுக்கு முப்பது சதவிகித இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்றால், உடனடியாய் கல்லூரிகளில் அட்மிஷன் வழங்கப்படுகிறது.

புனித சவேரியார் ஆலயம் பஞ்சமி நிலத்தில் இருக்கிறது என்பதில் உண்மையில்லை. இந்தப் பிரச்னையைக் கிளப்பிய பலர் அதில் உண்மையில்லை என்று தெரிந்ததும் விட்டுவிட்டார்கள். கல்லறைத் தோட்டத்தில் எல்லோருக்கும் சமஉரிமை வழங்கப்படுகிறது. திருச்சியில் அப்படியொரு பிரச்னை ஏற்பட்டு பிஷப்புகளின் தீவிர முயற்சியால் அது முடிவுக்கு வந்துவிட்டது'' என்றார் அவர்.

எது எப்படியோ? 'பரமண்டலங்களில் இருக்கிற எங்கள் பிதாவே' என்று இதுவரை சொல்லிவந்த உதடுகள், இனி புத்தமதத்துக்கு மாறி, 'புத்தம், சரணம், கச்சாமி' என்று சொல்லப் போவதால், நெல்லை கொஞ்சம் பரபரப்பாகி நிமிர்ந்து உட்கார்ந்திருக்கிறது என்பதில் சந்தேகமே இல்லை.

நன்றிங்க, குமுதம் ரிப்போர்டர் 19/08/07

பங்குத்தந்தை சொல்வதற்கும், மதம் மாறப்போகிறவர்கள் சொல்லும் காரணங்களுக்கு நேர் முரண்பாடுகள் இருக்கிறதே...?

4 comments:

புதுச்சுவடி said...

மீனாட்சி புரத்தில் முஸ்லிம் ஆனவர்கள் இன்று வரை முஸ்லிம்களாகத்ததன் இருக்கின்றனர். எவருமே தங்களைப் பிற முஸ்லிம்கள் வேறுபடுத்திப் பார்த்ததாகவோ தனிமைப் படுத்தியதாகவோ கூறவில்லை என்பது இங்கே குறிப்பிடத் தக்கதாகும்

முஸ்லிம் said...

புதுச்சுவடி உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

G.Ragavan said...

தீண்டாமை என்று ஒழியுமோ! சாதிமத வேறுபாடுகள் என்று ஒழியுமோ! சகோதரர்களுக்கு நல்ல வாழ்வும் சுயமரியாதையும் கிடைக்க வாழ்த்துகிறேன்.

முஸ்லிம் said...

G.Ragavan உங்கள் வரவுக்கு நன்றி.

மனுஷங்க அழிஞ்சாத்தான் தீண்டாமை ஒழியும். அதுவரைக்கும் நிம்மதியைத் தேடி இப்படி அப்படி மாறிக்கிட வேண்டியதுதான்.