Tuesday, August 07, 2007

ஆடிப் போன மாநகர்!

09.08.07 ஹாட் டாபிக்

செப்டம்பர் 11_ம் தேதியை நியூயார்க் நகரம் எப்படி மறக்க முடியாதோ, அதேபோல கோவை மாநகரால் மறக்க முடியாத நாள் பிப்ரவரி 14. 1998_ம் ஆண்டு இதேநாளில்தான் குண்டு வெடிப்புகளால் கோவை குலுங்கியது. அடுத்தடுத்து இடி இடித்தது போல அங்கங்கே குண்டு வெடிப்புகள். அதைத் தொடர்ந்து கலவரம், தீ வைப்புகள். அதில் கருகிய உயிர்கள் மொத்தம் 58. கால் இழந்து, கை இழந்து வீதிகளிலும், ரயில் நிலையங்களிலும், மருத்துவமனைகளிலும் சிதறிக் கிடந்த சடலங்கள், காயமடைந்தவர்களின் கதறல், உறவினர்களின் அழுகை என கோவையே ஒரு கொலைக் களமானது.

அப்போதைய பா.ஜ.க. தலைவர் அத்வானி கோவை வர இருந்த நிலையில், அவரைக் குறிவைத்து வைக்கப்பட்ட குண்டுகள், மாநகர் முழுவதும் பல மனித உயிர்களை இஷ்டத்துக்கு தின்று தீர்த்தன. காதலர் தினத்தன்று கோவை மாநகரமே ஒரு கசாப்புக் கடை போல காட்சியளித்த அந்த சோக நாளை எப்படி மறக்க முடியும்?

கோவையில் நடந்த இந்தத் தொடர் குண்டு வெடிப்பில் குற்றவாளிகள் யார்? என்ற கேள்விக்கு, கடந்த ஆகஸ்ட் முதல் தேதி விடை கிடைக்கும் என்று அறிவித்திருந்தது, இந்த வழக்குகளை விசாரித்த தனி நீதிமன்றம். தீர்ப்பு நாள் நெருங்க நெருங்க ஒரு வித திக்... திக்... திகிலுடனேயே இருந்து வந்தது கோவை மாநகரம்.

இதில் ரொம்பவும் ஆடிப் போனது மாநகர் போலீஸார்தான். குண்டு வெடிப்பு தீர்ப்பு நாள் அருகில் வரவர, கோவையில் குறிப்பிடத்தக்க சில சம்பவங்கள் போலீஸாரை குழப்பத் தொடங்கின. மூன்று வாரங்களுக்கு முன் கோவையில், விபசாரத்தில் ஈடுபட்ட ஓர் இஸ்லாமியப் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், கோவை போத்தனூர் பகுதியில் அரபி பள்ளியில் நடந்த ஹோமோ செக்ஸ் விவகாரத்தில் நான்கு முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட, இரு இஸ்லாமிய அமைப்புகளுக்கு இடையே நடந்த மோதல் சம்பவம், என போலீஸாரை சற்று அதிர வைத்த சம்பவங்கள் அதிகம்.

இப்படி அபாய சிக்னல் அடிக்கடி எரிய ஆரம்பித்ததால், தீர்ப்பு நாள் வரும் முன்பே, கோவை புறநகர்ப் பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு திமிலோகப்பட்டது. பல்வேறு மதவாத அமைப்புகளின் அசைவுகளை உளவுப் பிரிவு போலீஸார் கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுக் கொண்டு கண்காணிக்க ஆரம்பித்தனர். அப்படியிருந்தும் தீர்ப்புக்கு இரண்டு நாள் முன்பு, மதுரையிலிருந்து கோவை மேட்டுப்பாளையம் வந்த பேருந்தில் ஒரு மஞ்சள் நிற பை. அதில் ஜெலட்டின் குச்சிகள், ஐந்து டெட்டனேட்டர்கள் கிடக்க... ஆடிப் போனார்கள் போலீஸார்.

குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 166 கைதிகளும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். அவர்களை விசாரிக்கும் தனி நீதிமன்றம் அந்த சிறைவளாகத்தை ஒட்டியே அமைக்கப்பட்டிருந்தது. இருந்தும்கூட பாதுகாப்பு காரணம் கருதி, இந்தத் தனி நீதி மன்றத்திலிருந்து தெற்கு, மேற்கு, கிழக்கில் உள்ள சாலைகள் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் அடைக்கப்பட்டு வாகனங்கள் வேறு வேறு திசைகளில் போலீஸாரால் திருப்பி விடப்பட்டன.

தீர்ப்பு நாளான ஆகஸ்ட் முதல் தேதியன்று கோவை ஒரு திகிலுடனேயே கண்விழித்தது. காலை 8.30 மணிக்கே தனிக் கோர்ட் முன்புறம் ஏக பரபரப்பு. குற்றம் சாட்டப்பட்ட கைதிகளில், கேரள மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் மதானியும் ஒருவர் என்பதால், அதுபற்றி செய்தி சேகரிக்க மனோரமா, கைரளி, ஆஸியாநெட், ஐ.பி.என்., என்.டி.டி.வி. என்று ஏகப்பட்ட தொலைக்காட்சி நிறுவனங்கள் நேரடி ஒளிபரப்புக்காக வாகனங்கள், கருவிகளை அங்கே நிறுத்தி வைத்திருந்தன. உள்ளூர் ஆல் இண்டியா ரேடியோ முதல் அகில உலக பி.பி.சி. வரை அத்தனை நிருபர்களும் கோர்ட் வாசலில் அலைபாய்ந்து கொண்டிருந்தார்கள்.

நீதிமன்ற உத்தரவுப்படி அரசு அடையாள அட்டை, அலுவலகக் கடிதம்... இவற்றுடன் 54 நிருபர்கள் மட்டுமே நான்கு இடங்களில் நடந்த கடும் சோதனைக்குப் பின் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். அப்போது நேரம் 9.45 மணி. இந்தச் சோதனையில், வழக்கு நடத்திய சி.பி.சி.ஐ.டி.யின் உட்பிரிவான எஸ்.ஐ.டி. போலீஸாரும் தப்பிக்கவில்லை. சபாரி போட்டு வந்த இன்ஸ்பெக்டர் ஒருவரையே தெரியாத்தனமாக போலீஸ் சோதனை போட, அவரும் சமர்த்தாக கையை உயர்த்திக் கொண்டு போலீஸாருக்கு ஒத்துழைப்புக் கொடுத்தார். ''நீங்க எந்த மீடியா?'' என்று போலீஸார் கேட்க, ''நான் எஸ்.ஐ.டி. இன்ஸ்பெக்டர்'' என்று அவர் நிதானமாகச் சொல்ல, திடுக்கிட்டுப் போன போலீஸார், ''ஸாரி சார்'' என்று சொல்லி கையை எடுத்துக் கொண்டது, அந்தப் பரபரப்பு நேரத்திலும் நல்ல தமாஷ்.

நிருபர்கள், வக்கீல்கள் என்று யாரும் செல்போனுடன் உள்ளே நுழைய அனுமதிக்கப்படவில்லை. இதில் போலீஸ§க்கும், வக்கீல்களுக்கும் இடையில் ஒரு மோதலே உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டது. ஆனால், கடைசியில் ஜெயித்தது போலீஸார்தான். வக்கீல்களை செல்போனுடன் அவர்கள் அனுமதிக்கவில்லை.

கோர்ட்டுக்குள் நீதிபதியின் இருக்கைக்கு எதிரே வக்கீல்களுக்கான இருக்கையில் வழக்கறிஞர்கள் அமர்ந்திருக்க, அவர்களைத் தாண்டி கம்பி ஜன்னல் போட்ட பிரமாண்ட அறைக்குள் 10.20 மணிக்கு பாஷா, அன்சாரி, தாஜுதீன் உள்பட பதினைந்து கைதிகள் முதல்கட்டமாக அழைத்து வரப்பட்டு அமர வைக்கப்பட்டனர்.

சரியாக 10.30 மணி. நீதிபதி உத்திராபதி வந்து உட்கார்ந்தார். அவருக்கு முன்பு ஒரு சூட்கேஸ் வைக்கப்பட்டது. 10.35 மணிக்கு சூட்கேஸ் திறக்கப்பட்டு, அதிலிருந்த ஃபைல்கள், அவர் முன் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டன.

கோர்ட்டுக்குள் ஒரு பகுதியில் கும்பலாக போலீஸார் நிற்க, அவர்களில் அதிகாரிகளைத் தவிர, மற்றவர்களை வெளியேற்ற உத்தரவிட்டார் நீதிபதி. அவர்கள் வெளியேறிய பிறகுதான் தீர்ப்புக்கு வந்தார்.

கம்பி வலை அறையில் இருந்த பதினைந்து கைதிகளில் முதல் ஐந்து பேரான அல்உம்மா தலைவர் பாஷா, பொதுச்செயலாளர் அன்சாரி, தாஜுதீன், நவாப்கான், பாசித் ஆகியோரை வரிசைக்கிரமமாக நிறுத்தி 'எந்தெந்த குற்றப்பிரிவுகள் நிரூபிக்கப்பட்டுள்ளது? எவை எவை நிரூபிக்கப்படவில்லை' என்று தெளிவாக விளக்கி, '6_ம் தேதிக்குப் பின்பு நிரூபிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு தண்டனை கூறப்படும்' என்று நீதிபதி கூறினார்.

அதில் முதல் கைதியான பாஷா முதல், பதின்மூன்றாவது கைதியான சிராஜ் வரை அனைவருக்கும் பல்வேறு குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

14_வது கைதிதான்அப்துல் நாசர் மதானி. ஒரு கால் இல்லாத மதானி இரண்டு சக்கர நாற்காலியில் அழைத்துவரப்பட்டிருந்தார். 'மதானி மீது நான்கு பிரிவுகளில் குற்றம்சாட்டப்பட்டிருந்தது. அவை எதுவுமே நிரூபிக்கப்படவில்லை' என்று நீதிபதி அறிவித்தபோது, கோர்ட் முழுக்க ஒரே அமைதி. மதானி ஒரு நிமிடம் கண்ணை மூடிக்கொண்டார். எதுவுமே பேசவில்லை.

அடுத்த நிமிடம் சுதாரித்துக் கொண்ட மதானியின் வக்கீல்கள் 'அவர் மீது குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாத பட்சத்தில் அவரை உடனே விடுதலை செய்ய வேண்டும்..' என்று வாதம் செய்தனர். இதனால் இருபது நிமிட நேரம் நீதிமன்றத்தில் சிறிய சலசலப்பு நிலவியது. இதன் மீதான விவாதத்தையும், தீர்ப்பையும் பிற்பகல் மூன்று மணிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். மதானியின் மீது குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்றதுமே மலையாள பத்திரிகை, டி.வி. நிருபர்கள் கோர்ட்டுக்குள்ளிருந்து குபீரென வெளியே பறந்தனர். இதனால் லேசான பரபரப்பு ஏற்பட்டது.

கோர்ட்டுக்குள் இருந்து பதினைந்து, பதினைந்தாக கைதிகள் வரவழைக்கப்பட்டு, அவர்களுக்கு நிரூபிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை விளக்கி நீதிபதி நிமிர்ந்தபோது, மாலை நான்கு மணி. மொத்தமுள்ள 166 கைதிகளில் 153 பேர் மீது குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை. ஐந்து பேருக்கான தீர்ப்பு 6_ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. அவர்களுக்கும் தீர்ப்பு சொல்லப்பட்ட பிறகே, ஒவ்வொருவருக்கும் தண்டனை விவரம் வழங்கப்படும்.

குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாத எட்டுப்பேரில் மூவர் ஏற்கெனவே ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள மதானி, முகமது அஷ்ரப், சுபேர், ஆர்மிராஜு, அப்துல் ஹமீது ஆகியோருக்கு ஜாமீன் வழங்க உத்தரவிட்டார் நீதிபதி.

குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டவர்களில் 69 பேர் மீது கூட்டுச்சதி (இ.பி.கோ. 120பி) என்ற குற்றச்சாட்டே நிரூபிக்கப்பட்டிருந்தது. இந்தப் பிரிவு நிரூபிக்கப்படாதவர்கள் 84 பேர். இதில் 65வது எதிரி முதல் 100_வது எதிரி வரையிலான 36 பேர் கோவை கருணாநிதி நகரைச் சேர்ந்தவர்கள்.

இவர்கள் ''இந்த பாழாய்ப்போன கூட்டுச்சதி (120பி)யிலிருந்து எங்களைப் பிரித்து விடுங்கள்'' என்று அடிக்கடி கோர்ட்டில் கோரிக்கை வைத்து வந்தார்களாம். இவர்களுக்கான தீர்ப்பை நீதிபதி வாசிக்கும் போது ''நீங்கள் அடிக்கடி சொல்வீர்களே.... அந்தப் பாழாய்ப்போன 120_பி உங்கள் மீது நிரூபிக்கப்படவில்லை'' என்று சொல்ல, கைதிகள் முகத்தில் லேசான ஒரு சந்தோஷ மின்னல். ஒரு புன்னகைக் கீற்று.

ஓசிர் என்கிற அப்துல் ஓசிர் மீது மட்டும் மொத்தம் 32 பிரிவுகளில் வழக்குகள். 'ராஜேந்திரா டெக்ஸ்டைலில் குண்டு வைத்தது, ராஜராஜேஸ்வரி டவர் குண்டு வெடிப்பு, நேஷனல் டிராவல்ஸ் குண்டு வெடிப்பு, பிலால் எஸ்டேட் குண்டுத் தாக்குதல், சர் சண்முகம் சாலை பாம் என... இதில் எல்லாமே நீங்க இருக்கீங்க' என்று நீதிபதி சொன்னபோது, ஓசிர் முகத்தில் எந்த சலனமும் இல்லை.

கோர்ட்டில் தீர்ப்பு அறிவிக்கப்பட்டுக் கொண்டிருந்தபோது, வெளியே கோவை மாநகரமே மதானி மாயையால் குலுங்கியது. சிறைக்கு அருகில் உள்ள ஒரு லாட்ஜில் தங்கியிருந்த மதானியின் மனைவி சூஃபியாவின் பேட்டி ஒரு பக்கம் சூட்டைக் கிளப்ப, மறுபக்கம் பிற்பகல் 1.30 மணிக்கெல்லாம் கோவை த.மு.மு.க., மீடியாக்களுக்கு போன் செய்து 'நாளை காலை பத்து மணிக்கு மதானி, த.மு.மு.க. மாநிலத் தலைவருடன் பத்திரிகையாளர்களை பிரஸ் கிளப்பில் சந்திக்கிறார். அவசியம் வாங்க!' என அழைக்க, பரபரப்புக்குப் பஞ்சமே இருக்கவில்லை.

அதுபோல, நீதிமன்றத்தின் முன்புறம் மதானி _ கட்சியின் செயல் தலைவர் பூந்துறை சிராஜ் சந்த் பேட்டியும் ஏக பரபரப்பை எழுப்பியது. ''எங்கள் தலைவர் மதானி, ஜெயிலுக்கு வரும்போது 120 கிலோ இருந்தார். இப்போது வெறும் ஐம்பது கிலோதான். அரசியல் காரணத்துக்காக சிறையில் அடைக்கப்பட்ட அவர், இப்போது பீனிக்ஸ் பறவையைப் போல வெளிவந்துவிட்டார். முதல்வர் அச்சுதானந்தன், முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி, கேரள மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர் பிரணாய் விஜயன் ஆகியோர் முன்னிலையில் இதை விழாவாக நடத்தப்போகிறோம். நாளைக்கே அந்த விழா நடக்கும்!'' என்று ரொம்பவும் உணர்ச்சிவசப்பட்டார் அவர்.

இவையெல்லாம் நடந்துகொண்டிருந்தபோதே அடுத்த பரபரப்பு. 14.02.1998_ம் தேதியன்று அத்வானி பேச இருந்த இடத்தில் _ குண்டுகள் வெடித்த அதே இடமான ஆர்.எஸ். புரம் டி.பி. ரோடு பகுதியில் ஒரு பழைய மாருதி ஆம்னி வேன் அனாதையாக நின்று, பார்ப்பவர்களை பயமுறுத்தத் தொடங்கியது. கார்க் கதவைத் திறந்து உள்ளே பேட்டரியில் இருந்து வரும் ஒயர் ஒன்றை கட்டிங் பிளேயரால் துண்டித்து _ அந்தப் பகுதி மக்களை அப்பாடா என்று பெருமூச்சுவிட வைத்தனர். அதன்பின் போலீஸ், ஜாக்கி வாகனத்தைக் கொண்டு வந்து காரை இழுத்துச் சென்றது. அந்தக் காரில் என்ன இருந்தது? யாருடையது? என்பது பற்றி கடைசிவரை மூச்சுவிட மறுத்துவிட்டது போலீஸ்.

இந்த களேபரங்களுக்கு நடுவே மதானி சிறையிலிருந்து வெளியே வந்தபோது இரவு 8.30 மணி. சிறைவாசலில் மீடியாக்களைப் பார்த்துப் பறந்த அவரது வேன், அங்கிருந்து முக்கால் கிலோ மீட்டர் தொலைவில் நின்ற கைரளி, மனோரமா, என்.டி.டி.வி. தொலைக்காட்சி வேன்களைக் கண்டதும் நின்றது. அங்கே பத்து நிமிட நேரம் பரபரப்பு பேட்டி.

''பத்து வருஷமாக நான் தமிழ்நாட்டுச் சோறுதான் சாப்பிட்டிருக்கேன். அந்த நன்றி என்றைக்கும் தமிழ்நாட்டின் மீது எனக்கு இருக்கும்!'' என்றெல்லாம் உணர்ச்சிவசப்பட்ட மதானி, முன்னும் பின்னும் ஒரு பெரிய வாகன அணிவகுப்புடன் ''மதானி ஜிந்தாபாத்'' என்ற கோஷம் வானைப் பிளக்கச் சென்றார். அதைப் பார்த்து இந்துத்வா அமைப்பினர் கடுப்பாகிப் போனார்கள்.

கோவை பா.ஜ.க. பிரமுகர் சிவலிங்கம் இதுபற்றி நம்மிடம் பேசினார். ''என்ன சார்? இவ்வளவு பெரிய குண்டுவெடிப்புச் சம்பவம் நடந்திருக்கு. அந்த குண்டுவெடிப்புக்கு முக்கியக் காரணமே இந்த மதானிதான். அப்படிப்பட்டவர் இதில் விடுவிக்கப்படுகிறார்னா, நாங்கள் சும்மா விடமுடியுமா? போலீஸாரை வற்புறுத்தி அப்பீல் செய்ய வைப்போம்!'' என்றார் அவர்.

ஆனால், குண்டுவெடிப்புக் கைதிகளின் வக்கீல்களோ ''இந்த வழக்கில் மதானி போல எட்டுப் பேர் விடுவிக்கப்பட்டாலும் 153 பேர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. அதை எதிர்த்து அப்பீல் செய்வோம்!'' என்றனர்.

மொத்தத்தில் தொடர்குண்டு வெடிப்புத் தீர்ப்பு நாள் கோவையை ஓர் உலுக்கு உலுக்கிவிட்டுப் போயிருக்கிறது. இனி தண்டனை விவர நாளில் ஏற்படப் போகும் பரபரப்புகளுக்குத் தயாராக இருக்கிறது கோவை.

நன்றிங்க, kumudam reporter 09/08/07

தீர்ப்புக்காக காத்திருப்போம்.

No comments: