Wednesday, August 01, 2007

டெலி மார்க்கெட்டிங் நிறுவனங்களுக்கு கட்டுப்பாடு.

டெலி மார்க்கெட்டிங் நிறுவனங்களுக்கு கட்டுப்பாடு: போனில் லோன்-கிரடிட் கார்ட் தொல்லை குறையும்

ஜூலை 31, 2007

டெல்லி: லோன் வேண்டுமா, கிரடிட் கார்டு வேண்டுமா, லைப் இன்சூர் பாலிசி போடுங்க என போனில் வரும் தொல்லைகளில் இருந்து விரைவில் விடுதலை கிடைக்கப் போகிறது.

பல வங்கிகள், இன்சூரன்ஸ் நிறுவனங்களும் செல்போன் நிறுவனங்களில் வாடிக்கையாளர்களின் டெலிபோன் எண்களை பெற்று, தங்களது டெலி மார்க்கெட்டிங் நிறுவனங்களுக்கு கொடுத்து நேரம், காலம் பார்க்காது லோன், கிரடிட் கார்டு வாங்க சொல்லி தொல்லை கொடுத்து வருகின்றன.

அதே போல பல தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களும் இந்த முறையை பின்பற்றி வருகின்றன. இது தொடர்பாக ஏராளமான பொது நல வழக்குகள் தொடரப்பட்டன. இதற்கு விளக்கம் கேட்டு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.

இது குறித்து மத்திய அரசு சில முடிவுகளை எடுத்துள்ளது. அவை தொடர்பாக மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் பி.பி.மல்ஹோத்ரா கூறுகையில்,

வரும் செப்டம்பர் 5ம் தேதி முதல் மத்திய தொலைத்தொடர்பு துறை அழைக்காதீர் என்ற சேவையை அறிமுகப்படுத்தவுள்ளது. இதில் வாடிக்கையாளர்கள் தங்களது பெயர், தொலைபேசி எண்ணை பதிவு செய்துவிட்டால், டெலி மார்க்கெட்டிங் நிறுவனங்கள் அந்த எண்களை பயன்படுத்த முடியாது.

தேசிய தகவல் மையம் (என்ஐசி) இந்த பட்டியலை பராமரிக்கும். டெலி மார்க்கெட்டிங் நிறுவனங்களிடமிருந்து யாருக்கெல்லாம் அழைப்பு தேவையில்லையோ அவர்கள் முதலில் தங்களது செல்போன் நிறுவனத்துக்கு தகவல் தர வேண்டும். அதன் பின்பு அந்த நிறுவனங்கள் தேசிய தகவல் மையத்துக்கு அந்த லிஸ்ட்டை கொடுத்துவிடும். அதன்படி "அழைக்காதீர்" பட்டியலில் அந்த எண்கள் சேர்க்கப்பட்டு இந்த சேவை வழங்கப்படும்.

இந்த புதிய முறைப்படி இனிமேல் டெலிமார்க்கெட்டிங் நிறுவனங்கள் கட்டாயமாக தங்களை பற்றிய விவரங்கள தொலை தொடர்பு துறையில் பதிவு செய்ய வேண்டும். அழைக்காதீர் பட்டியலில் பதிவு செய்தவர்களை இவர்கள் அழைக்கவே கூடாது என்றார்.

மத்திய தொலைத் தொடர்பு ஆணையத்தின் (ட்ராய்) தலைவர் நிருபேந்திர மிஸ்ரா கூறுகையில்,

இதனையும் மீறி டெலி மார்க்கெட்டிங் நிறுவனங்கள் பொது மக்களை தொந்தரவு செய்தால் முதலில் கடும் எச்சரிக்கை விடுக்கப்படும். 2வது முறையாக அழைப்பு வந்தால் அந்த எண்ணுக்கு தொடர்புடைய டெலிமார்க்கெட்டிங் நிறுவனத்திடமிருந்து ஒரு அழைப்புக்கு ரூ. 1,000 வரை அபராதம் விதிக்கப்படும்.

அதையும் மீறி 3வது முறையாக அழைப்பு விடுத்து தொந்தரவு செய்தால் அந்த நிறுவனத்தின் தொலைத்தொடர்பு நெட்வொர்க் இணைப்பு துண்டிக்கப்படும் என்றார்.

நன்றிங்க

ஸ்ஸ்ஸ்... அப்பாடா!!!

No comments: