Saturday, August 11, 2007

2. ஆயுள் கைதிக்கு மாற்று ஆயுள் கைதி!

கால் பந்தாட்டத்தில் ஓர் அணியைச் சேர்ந்த வீரர் ஓய்ந்து போனாலோ, உதை வாங்கிச் சோர்ந்து போனாலோ, அவருக்குப் பதிலாக மாற்று ஆட்டக்காரர் ஒருவரை களமிறக்குவார்கள். அந்த பதிலி ஆட்டக்காரர் பந்தாட்டத்தில் முத்திரை பதிக்க முயல்வார். தேர்தல்களில், கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளர் மனுதாக்கல் செய்யும்போது, மாற்று வேட்பாளராக ஒருவர் மனுதாக்கல் செய்வார். அதிகாரபூர்வ வேட்பாளர் ஏதோ காரணத்துக்காகப் போட்டியிட முடியாமல் போனால், இந்த மாற்று வேட்பாளர்தான் இறுதி வேட்பாளர்.

மதுரை மத்திய சிறையில், இப்படி ஒரு 'மாற்று ஆட்டக்காரர்' உண்மைக் குற்றவாளிக்குப் பதில் கைதியாக இருக்கிறார் என்ற தகவல் 'மடேர்' என்று நம் மண்டையைத் தாக்க, ஆடி அதிர்ந்து போனோம். ஆயுள் தண்டனை பெற்ற ஒரு கொலைக் குற்றவாளிக்குப் பதிலாக, இவர் சிறையில் இருக்கிறார் என்ற தகவல் நம்மை அதிர வைத்தது.

பாளையங்கோட்டையைச் சேர்ந்த நமக்குத் தெரிந்த ஜெயில் அதிகாரி ஒருவரிடம், இந்த ஆள் மாறாட்ட மோசடி பற்றிக் கேட்டோம். ''அதையேன் கேட்கிறீங்க?'' என்று அலுத்துக் கொண்ட அவர், ''ஆள் மாறாட்டம் செய்து இப்போது மதுரை மத்திய சிறையில் மாட்டிக் கொண்டு தவிக்கும் அந்தக் கைதியின் பெயர் சிவக்குமார்.

ஆயுள் தண்டனைக் கைதியாக இருக்கும் சிவகுமாருக்கு, சிறையில் வழங்கும் பெயர் மணி. அந்த சிவகுமாரை நாங்குநேரி கோர்ட்டுக்கு வரும்போது நீங்கள் சந்தியுங்கள். முழு விவரமும் தெரியும்!'' என்றார்.

நாமும் அதன்படியே சிவகுமார் கோர்ட்டுக்கு வந்தபோது அவரைச் சந்தித்தோம். ஆரம்பத்தில் பேசத் தயங்கியவர், அதன்பின் குற்றால மெயின் அருவி போல நம்மிடம் கொட்டத் தொடங்கிவிட்டார்.

ராதாபுரம் தொகுதியிலுள்ள இளைய நயினார் குளம்தான் என் சொந்த ஊர். விஜயாபதி ஸ்ரீ தில்லை காளியம்மன் விசுவாமித்திரர் கோயிலில் இருபத்திரண்டு வருடங்களாக பூசாரியாக இருந்து வருகிறேன். எனக்குத் திருமணமாகி ஏழு வயதில் பையன் இருக்கிறான்.

எனது அப்பாவின் தங்கை மகன் மணி. அவள் என்னை விட வயதில் சின்னவன். ஆனால் வசதியானவன், நாங்குநேரியில் 1998_ம் ஆண்டு வாக்கில் ஒரு கொலை நடந்தது. அதில் ஏழு பேர் கைதானார்கள். அந்த ஏழு பேரில் மணியும் ஒருவன். இன்னும் சொல்லப்போனால், அந்தக் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்பட்டவன் மணி தான்.

மணி அப்போதே பெரிய பணக்காரன். மதுபானக்கடை பிறகு பார் எல்லாம். வைத்திருந்தான். வழக்கில் அவனுக்கு ஆயுள்தண்டனை கிடைத்தபோது மணி ஆடிப் போய் விட்டான். ஆறுமாதம் உள்ளே இருந்த பிறகு ஐகோர்ட்டில் அப்பீல் செய்து பெயிலில் வெளியே வந்தார். ஆறுவருடங்களுக்குப் பிறகு அவனது ஆயுள் தண்டனையை ஐகோர்ட் உறுதி செய்துவிட்டது. மணி வெலவெலத்துப் போனான்.

இனிமேலும் சிறைக்குப் போனால் இமேஜ் பாழாகி விடும், அதோடு பிஸினஸ§ம் படுத்து விடும். சிறைக் கூண்டுக்குள் போகாமல் தப்பிக்க என்ன வழி என்று மணி சிந்தித்த போது, அவனது நினைவில் வந்த பெயர் என்னுடைய பெயர்.

2005_ம் ஆண்டு நவம்பர் மாதம் 19_ம் தேதி மணியும், என் மாமன் மகன் முத்துக் கிருஷ்ணனும் விஜயாபதிக்கு வந்து என்னைச் சந்தித்தார்கள். 'மணி வெளியில் இருந்தால் பிஸினஸ் செய்வான். நம்ம இரண்டு குடும்பத்துக்கும் அது நல்லது. உன் குடும்பத்துக்கும் அவன் உதவுவான். அதனால் நீ ஒரு தியாகம் செய்யணும்' என்று முத்துக் கிருஷ்ணன் பீடிகை போட்டார்.

'என்ன செய்யணும்? சொல்லுங்க!' என்றேன். 'மணிக்குப் பதிலாக நீ ஜெயிலுக்குப் போகணும். மூன்றே மாதத்தில் உன்னை வெளியில் எடுத்து விடுவோம். மணி அதற்குள் வெளிநாடு போய் விடுவான். நீ மணி இல்லேன்னு சொல்லி நிரூபித்து வெளியே வந்து விடலாம். இரண்டு பேருமே ஜெயில் தண்டனையில் இருந்து தப்பிவிடலாம்'' என்றார். எனக்குத் திக்கென்று இருந்தது.

இது நடக்குமா? கோர்ட்டையும், ஜெயிலையும் ஏமாத்துகிறது தப்பில்லையா?' என்றேன். 'அதெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன்' என்றார் முத்துக் கிருஷ்ணன். அவர் மீதுள்ள மரியாதையால் நான் ஒப்புக் கொண்டேன்.

என்னை திருநெல்வேலிக்கு அழைத்துப் போனார். வண்ணாரப் பேட்டை பஸ் டிப்போ முன் வக்கீல் ஒருவர் எங்களைச் சந்தித்து, அப்போது அரசில் அ.தி.மு.க. அமைச்சராக இருந்த ஒருவரிடம் கூட்டிப் போனார். அமைச்சர் எங்களுக்கு ஏற்கெனவே பழக்கமானவர். மாமா... மச்சான்னு உரிமையாகப் பேசிக் கொள்வோம். அவரிடம் முழு விவரத்தையும் சொன்னேன். 'அதற்கென்ன? ஜெயில் அதிகாரிகளிடம் பேசிக் கொள்ளலாம். அதற்கு குற்றாலம் ஐந்தருவியில் இரண்டு காட்டேஜ் புக் செய்யுங்கள்' என்றார்.

வேறு ஆட்கள் இரண்டு பேர் பெயரில் காட்டேஜ்களை புக் செய்தோம். அங்கு அமைச்சர் உள்பட எல்லோரும் கூடினோம். இரவு பத்து மணியளவில் பாளையங்கோட்டை சிறை உயர் அதிகாரி அந்த காட்டேஜுக்கு வந்தார். நானும் என் அத்தான் முத்துக் கிருஷ்ணனின் கார் டிரைவரும் வெளியில் போய் மதுபான அயிட்டங்களை வாங்கி வந்தோம்.

அமைச்சர், சிறை அதிகாரி, வக்கீல் மூவரும் ஒரு காட்டேஜில் தங்கிக் கொண்டார்கள். நாங்கள் மற்ற காட்டேஜில் தங்கினோம். மறு£நள் காலை அமைச்சர் வக்கீலிடமும், சிறையதிகாரியிடமும் விஷயத்தைச் சொல்லி, கோர்ட்டிலும், ஜெயிலிலும் பிரச்னை வராமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறி, என் அத்தான் தந்த பணத்தை வாங்கி வக்கீலுக்கும், ஜெயில் அதிகாரிக்கும் பிரித்துக் கொடுத்தார்.

ஜெயில் அதிகாரி என்னிடம் 'வரும் 24.11.2005 அன்று நீ கோர்ட்டில் ஆஜராகிவிடு. அப்போது ஓர் எலுமிச்சம் பழத்தைக் கையில் வைத்துக் கொள். இன்னொரு பழத்தை பையில் வைத்துக் கொள். நீ பூசாரிதானே! எலுமிச்சம்பழம் வைத்திருந்தால் யாரும் சந்தேகப்பட மாட்டார்கள். இது எங்களுக்கும் ஓர் அடையாளம். மற்றதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்' என்றார்.

24.11.2005 அன்று வக்கீல் என்னை கோர்ட்டில் ஆஜர்படுத்தினார். நீதிபதி என் பெயரைக் கேட்டார், மணி என்று பதில் சொன்னேன். 'அப்பா பெயர் சுப்பையாவா?' என்றார் 'ஆமாம்' என்றேன்.

மாலை நாலே முக்கால் மணிக்குப் போலீஸார் வந்து வக்கீல் குமாஸ்தாவிடம் பேசினார்கள். 'நீ தான் மணியா?' என்று என்னிடம் கேட்டார்கள். 'ஆம்' என்றேன். 'கையில் என்ன எலுமிச்சம்பழமா?' என்று கேட்டு வாங்கிக் கொண்டார்கள். அதன் பிறகு பாளை சிறைக்கு என்னை அழைத்துப் போனார்கள்.

அங்கிருந்த ஜெயில் அதிகாரியிடமும் என் பெயரை மணி என்றேன். என் பையை சோதனை போட்டு எலுமிச்சம்பழத்தை எடுத்துவிட்டு, புத்தகத்தில் கையெழுத்து வாங்கி உள்ளே அனுப்பினார். 29.11.2005 அன்று ஜெயிலுக்குள் இருக்கும் உள் மருத்துவமனைக்கு என்னை கூட்டிப் போனார்கள் ஜெயில் அதிகாரி ஏற்கெனவே எனக்குத் தெரிந்தவர் என்றாலும், அவர் வெளிக்காட்டிக் கொள்ளாமல் ஜெயிலில் எனக்குத் தறி வேலை'யை ஒதுக்கியிருப்பதாகக் கூறினார்கள்.

என் உடலில் மச்சம், தழும்பு என அங்க அடையாளம், கைரேகைப் பதிவு என எந்த வெரிபிக்கேஷனும் செய்யவில்லை. ஒன்பது மாதங்கள் கழித்து இரண்டாம் நிலை ஜெயில் அதிகாரி என்னைக் கூப்பிட்டார். நான் ஆள் மாறாட்ட ஆசாமி என்பது அவருக்கும் தெரியும். 'உயர் அதிகாரி மாற்றலாகிப் போகிறார். இனி நீ ஜாமீனில் போவது சிரமம். மணியின் உடலில் என்ன தழும்பு இருந்ததோ, அது உன் உடம்பிலும் இருக்கணும். அப்போதுதான் நீ வெளியே போகமுடியும்' என்றார்.

அதிர்ச்சியடைந்து போன நான், மணியின் வலதுபக்க மார்பில் தழும்பு இருப்பதாக, அதிகாரி ஆவணத்தைப் பார்த்துக் கூறியதைக் கேட்டு சிகரெட்டால் என் மார்பில் தழும்பை ஏற்படுத்திக் கொண்டேன்.

பதினேழு மாதங்கள் நான் பாளை மத்திய சிறையில் இருந்தேன். அதிகாரிகளால் எந்த ஓர் இடையூறும் இல்லை. இந்த நிலையில் மணியை மார்ச் மாதம் திருநெல்வேலி போலீஸார் கைது செய்து விட்டதாக அறிந்தேன். இனி நாம் வெளியே போய்விடலாம் என்று நினைத்த போது பலத்த அதிர்ச்சி. என் மீதும் போர்ஜரி வழக்குப் போட்டு விட்டார்கள்.

இந்தச் சூழ்நிலையில், மதுரை சரக சிறைத்துறை உயரதிகாரி பாளை ஜெயிலுக்கு வந்து என்னை விசாரித்தார். 'மணிதான் பிடிபட்டுவிட்டானே.' மூன்று மாதத்தில் வெளிவந்து விடலாம்' என்று சொல்லி என்னை உள்ளே அனுப்பி, இப்போது பதினேழு மாதங்களாகி விட்டது. கொலைக் குற்றத்துக்கான ஆயுள் தண்டனைக் கைதியாக இருக்கிறேன். எனவே உண்மையைச் சொல்லி விடலாம் என, அவரிடம் உண்மையை ஒப்புக் கொண்டேன்.

இந்த ஆள் மாறாட்ட மோசடியில் பாளை ஜெயில் அதிகாரிக்கும் பங்கு இருப்பதை வாக்குமூலத்தில் தெரிவித்தேன். அது அந்த அதிகாரிக்கு பலத்த அதிர்ச்சியைக் கொடுத்தது. அதுவரை என்னிடம் பரிவு காட்டிய அவர், அதன் பின் போக்கை மாற்றிக் கொண்டார். மணியும் நானும் ஒரே சிறையிலிருந்தால் பிரச்னை என்று நினைத்தாரோ என்னவோ, என்னை மதுரை மத்திய சிறைக்கு மாற்றிவிட்டார்கள்.

கடந்த மே மாதம் மதுரை சிறைக்கு வந்தேன். ஆள் மாறாட்டம் பற்றி என்னிடம் ஏற்கெனவே விசாரணை செய்த மதுரை சரக சிறைத்துறை உயர் அதிகாரி, அங்கே இருந்ததால் எனக்கு பிரச்னை எதுவும் இல்லாமல் இருந்தது. ஆனால் திடீரென அவர் மாற்றப்பட்டார்.

நான் ஆள் மாறாட்டம் செய்தது பற்றி போலீஸ§க்குத் தகவல் தெரிவித்தேன். ஓர் இன்ஸ்பெக்டர் வந்து விசாரித்தார். அதன் பிறகும் நடவடிக்கை எதுவுமில்லை. கடந்த முறை கோர்ட்டுக்கு வந்தபோது நீதிபதியிடமும் இதைச் சொன்னேன். அவர் எழுதித் தரச் சொன்னார். அங்கேயே எழுதிக் கொடுத்தேன்.

இந்தச் சூழ்நிலையில், நான் எந்த சிறை அதிகாரி மீது புகார் கொடுத்திருந்தேனோ, அவரே மதுரை சிறைக்கு உயரதிகாரியாக வந்து விட்டார். அவரது தூண்டுதலால் சக கைதிகளாலோ அல்லது ஜெயில் அதிகாரிகளாவோ என் உயிருக்கு ஆபத்து ஏற்படலாமோ என்று அஞ்சுகிறேன். தினமும் செத்து செத்துப் பிழைக்கிறேன்' எனக்கு ஏதாவது ஒன்று நடந்தால், அந்த சிறையதிகாரிதான் பொறுப்பு.

செய்யாத குற்றத்துக்காக நான் சிறையில் வாடுகிறேன். உறவுக்காக பரிதாப்பட்டது தான் நான் செய்த ஒரே தவறு. இப்போது என் ஒரிஜினல் பெயரே மறந்து போகும் அளவுக்குச் சிறையில் மணி என்ற பெயருடன் இருக்கிறேன். எனக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது'' என்றார். மணி... மன்னிக்கவும் சிவகுமார்.

அதற்குள், ''வா போகலாம் நேரமாச்சு!'' என்று அவரைக் கைப்பிடியாக கூட்டிச் சென்றது! போலீஸ்.

ஜெயிலில் செல்போன் கிடைக்கும், கஞ்சா கிடைக்கும் என்றுதான் கேள்விப்பட்டிருக்கிறோம். கைதிக்குப் பதிலாக, போலி கைதி கூட கிடைப்பார் என்ற லேட்டஸ்ட் தகவல் நமக்கு அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது. இதை முழுமையாக விசாரித்து உண்மைகளைக் கண்டறிய வேண்டியது, அரசின் கடமை!

நன்றிங்க, kumudam reporter 12/08/07

எல்லாத்திலேயும் substitute இருக்கிற மாதிரி ஜெயில் கைதிகளுக்கும் ஆளுக்குப் பதிலாக ஆளுன்னு வைச்சிக்கிட்டால் கொஞ்சம் Relieve இருக்கும்.

என்ன, சட்டம் ஒத்துக்கொள்ளாதுங்க!

No comments: