ஹாட் டாபிக்
பஞ்சாயத்துத் தலைவியாக இருந்து என்ன பிரயோஜனம்? பஸ்சில் கூட உட்கார விடமாட்டேங்கிறாங்களே!'' என்று உள்ளம் நொந்துபோன ஒரு பஞ்சாயத்துத் தலைவி, டி.எஸ்.பி. உள்பட போலீஸ் உயரதிகாரிகள் கூட பிறஜாதியினருக்கு ஆதரவாகவே செயல்படுவதாக கோர்ட்டில் குற்றம் சாட்டியிருக்கிறார். இதுபற்றி கீழ்கோர்ட் மூலமாக நடவடிக்கை எடுக்க, மதுரை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
அந்தப் பெண்மணியின் பெயர் சந்திரகலா. தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் உள்ள ஆதிச்ச நல்லூர் பஞ்சாயத்தின் தலைவி இவர். தலித் ஒருவர் பஞ்சாயத்துத் தலைவராகவோ, தலைவியாகவோ வரும்போது அவர்களுக்கு தாராளமாக அவமதிப்பு கிடைப்பது சகஜம்தான் என்றாலும், அதைத் தட்டிக்கேட்டு முதல் முறையாக நீதிமன்றத்துக்குப் போயிருக்கும் முதல் பெண்மணி சந்திரகலாதான். எனவே, இந்த வழக்கு பலரது கவனத்தைக் கவர்ந்திருக்கிறது.
நாம் சந்திரகலாவிடம் பேசினோம். ''நான், கணவர் மற்றும் நான்கு குழந்தைகளுடன் ஆதிச்சநல்லூர் சுப்பிரமணியபுரத்தில் வசித்து வருகிறேன். ஆதிச்சநல்லூர் பஞ்சாயத்துத் தலைவர் பதவி தலித் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதால், நான் கிராமத்துப் பெரியோர்களின் அனுமதி பெற்று அவர்களின் ஆசியுடன் வேட்பு மனு தாக்கல் செய்தேன்.
எங்கள் பஞ்சாயத்தில் ஏற்கெனவே அதிகாரத்தில் இருந்த ஆதிக்க ஜாதியினருக்கு இது பிடிக்கவில்லை. 'ஐந்து வருடம் நாங்கள் சொல்லும் ஆளுக்கு பதவியை விட்டுக்கொடு. அடுத்த ஐந்து வருடம் நீ இரு. அதற்கு அக்ரிமெண்ட் போட்டுக் கொள்ளலாம்' என்றார்கள். அதற்கு நான் உடன்படவில்லை.
அதனால் ஓட்டுக் கேட்கப் போன இடத்தில் என்னை அவமானப்படுத்தினார்கள். டோர் ஸ்லிப் கொடுக்கப் போன இடங்களில் ஜாதியைச் சொல்லி என்னைத் திட்டி அனுப்பினார்கள். ஓட்டுப் பதிவு நாளன்று என் கணவர் சங்கரனை வழிமறித்துத் தாக்க முற்பட்டார்கள்.
ஓட்டு எண்ணிக்கை நடந்தபோது, 'இவள் ஜெயித்தால் அவளை காரோடு வைச்சு பெட்ரோல் குண்டு வீசிக் கொல்லணும்' என்று என் காது படவே அவர்கள் பேசினார்கள். ஓட்டு எண்ணிக்கை முடிவில் 119 ஓட்டு வித்தியாசத்தில் நான் வெற்றி பெற்றேன். 'கொலை செய்வோம்' என இவர்கள் மிரட்டியதால், வீட்டுக்குப் போகப் பயந்து, ஓட்டு எண்ணிய இடத்திலேயே இரவு ஒரு மணி வரை உட்கார்ந்திருந்தோம். அதன் பின்னர், மழையில் நனைந்தபடி வீடு போய்ச் சேர்ந்த போது இரவு இரண்டு மணி. வெற்றி பெற்றதற்கு சந்தோஷப்படக்கூட முடியவில்லை. அவர்களும் எங்களை சந்தோஷப்பட விடவில்லை.
துணைத் தலைவர் தேர்தல் வந்தது. அதில் சிவசுப்புத் தேவரின் மகன் சங்கர் கணேஷ் என்பவர் வெற்றி பெற்று துணைத் தலைவரானார்.
முதல் நாள் பஞ்சாயத்துக் கூட்டத்தில் நான் எனக்குரிய நாற்காலியில் உட்கார்ந்திருந்தபோது, சங்கர் கணேஷ் அங்கு வந்தார். பஞ்சாயத்து எழுத்தரைக் கூப்பிட்டு 'அவளுக்கு என்ன நாற்காலி கேட்குதா? அவளுக்கு முன்னாடி நான் உட்காரணுமா? நோட்டை இங்கே எடுத்து வா' என்று டூவீலரில் இருந்தபடியே உத்தரவிட்டார். என் கணவர் அவரிடம் சென்று 'உள்ளே வாங்க!' என்றபோது, கோபத்துடன் முறைத்தார்.
பஞ்சாயத்து அலுவலகத்தில் நான் நாற்காலியில் உட்கார்ந்திருந்தால், சங்கர் கணேஷ் உள்ளே வரமாட்டார். பஞ்சாயத்து வளர்ச்சித் திட்டங்களுக்காக செக் புத்தகத்தில் அவரிடம் கையெழுத்து வாங்க என் கணவரை அனுப்புவேன். என் கணவரை நிற்க வைத்து, கால்மேல் கால் போட்டபடி பேசுவார். 'இந்த வேலைக்கு இவ்வளவு கமிஷன் வேண்டும்' என மிரட்டுவார். நானும் கொடுத்திருக்கிறேன்.
இதற்குப் பிறகும் கூட நிம்மதியாக பஞ்சாயத்து வேலையைப் பார்க்க முடியவில்லை. பஞ்சாயத்துத் துணைத் தலைவரான சங்கர் கணேஷின் அண்ணன் பஞ்சாயத்துக்குச் சொந்தமான புறம்போக்கு நிலத்தில் இரண்டரை ஏக்கரை ஆக்கிரமித்து வைத்திருக்கிறார். அதைக் கேட்கப் போனபோது, ஜாதியைச் சொல்லித் திட்டி 'உன்னைக் கூறு போட்டு விடுவேன்' என மிரட்டினார். இதை ஊரே வேடிக்கை பார்த்தது. எங்கள் தலித் பிரிவைச் சேர்ந்த சிலரும் அவர்களுக்கு ஆதரவாகப் பேசினார்கள்.
''நான் பஞ்சாயத்துத் தலைவி என்றுதான் பேர். எந்தப் பஞ்சாயத்து விழாக்களுக்கும் என்னைக் கூப்பிட மாட்டார்கள். என்னை அழைக்காமலேயே விழாவை நடத்துகிறார்கள். ஒரு பள்ளிக்கூடத் திறப்புவிழா எனக்குத் தெரியாமலேயே நடந்து முடிந்து விட்டது. இதையெல்லாம் கலெக்டரிடம் எழுத்து மூலமாக ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன்.
எங்கள் ஊருக்குள் வந்து செல்லும் அரசு பஸ்களில் தலித் மக்கள் உட்கார்ந்து செல்ல சிலர் அனுமதிப்பதில்லை. நின்று கொண்டுதான் பயணம் செய்தாக வேண்டும். அதற்கு நானும் விதிவிலக்கில்லை. தலித் வகுப்பைச் சேர்ந்தவர்கள் வயதில் பெரியவர்களாக இருந்தாலும், மற்ற ஜாதியினரை 'சாமி!' 'நைனா' என்றுதான் அழைக்க வேண்டும். அந்த அளவுக்குத் தீண்டாமை இருக்கிறது.
கடந்த 18_ம் தேதி என் வீட்டு முன்பு, சிலர் கூடி நின்று என்னை ஜாதியைச் சொல்லித் திட்டியதோடு 'இனி நாற்காலியில் உட்காரக் கூடாது என அருவருக்கத்தக்க வார்த்தைகளால் மிரட்டி விட்டுச் சென்றார்கள்.
இதுபற்றி போலீஸில் புகார் செய்தேன். ஸ்ரீவைகுண்டம் துணைக் கண்காணிப்பாளர் என்னைக் கூப்பிட்டு, 'அவர்கள் மேல் வழக்குத் தொடர்ந்தால் உன் உயிருக்குத்தான் ஆபத்து. அதனால் சமரசமாகப் போய் விடு' என்று மிரட்டினார். அதோடு என்னை வற்புறுத்தி கையெழுத்தும் வாங்கினார்.
நாங்கள் புகார் கொடுத்தால் அதைப் பதிவு செய்ய மறுக்கும் போலீஸார், அவர்கள் கொடுத்த பொய்ப் புகாரின் பேரில் என் மீதும் என் கணவர் உள்ளிட்ட எட்டுப் பேர் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இப்படி எங்கள் மீது வழக்குப் பதிவு செய்ய வைத்தவர் துணைக் கண்காணிப்பாளர். அதனால் என் கணவர் உள்ளிட்ட எட்டுப் பேர் முன்ஜாமீன் பெற்று போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்துப் போட்டு வருகிறார்கள். இதை விட கொடுமை உண்டா சொல்லுங்கள்?
எனவே, பஞ்சாயத்துத் துணைத் தலைவர் சங்கர் கணேஷ் அவரது சகோதரர் ஆனந்த் மற்றும் டி.எஸ்.பி. ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வேறுவழியில்லாமல் கோர்ட்டுக்கு வந்திருக்கிறேன். மதுரையில் உள்ள 'எவிடென்ஸ்' மனித உரிமை அமைப்பின் இயக்குனர் கதிரின் உதவியுடன் மதுரை ஐகோர்ட்டில் வழக்குத் தொடுத்தேன்'' என்றார் சந்திரகலா.
'எவிடென்ஸ்' இயக்குனர் கதிரிடம் பேசினோம். ''சந்திரகலா கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் முதல் தகவல் அறிக்கை கூடப் பதிவு செய்யவில்லை.
சந்திரகலா பக்கம் நியாயம் இருந்தும் அதை நிலைநாட்ட ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி. தவறிவிட்டார். விசாரணை அதிகாரிகள் பாரபட்சம் காட்டக் கூடாது என்பது பொதுவான நியதி. 'வன்கொடுமைச் சட்டத்தின் பிரிவு 4_ல் வேண்டுமென்றே கடமையைப் புறக்கணிக்கும் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று உள்ளது. அதைத்தான் சந்திரகலாவும் கோர்ட்டில் வேண்டுகோளாக முன் வைத்தார். அதற்கு நல்ல தீர்ப்பு கிடைத்திருக்கிறது!'' என்றார் கதிர்.
இந்த வழக்கில் சந்திரகலாவுக்காக வாதாடிய ஐகோர்ட் வக்கீல் அழகுமணியிடம் பேசினோம்.
''பஞ்சாயத்துத் தலைவராக உள்ள தலித் ஒருவர் தன்னை உதாசீனப்படுத்துகிறார்கள் என்று கூறி முதன் முதலில் நீதிமன்றம் வந்த வழக்கு இதுதான். நீதிமன்றம் இந்த வழக்கை சீரியஸாகவே எடுத்துக் கொண்டது. பஞ்சாயத்துத் தலைவி சந்திரகலா ஐகோர்ட்டில் வழக்குத் தொடுத்துவிட்டார் என்று தெரிந்தவுடன், அவருக்குச் சொந்தமான வாழைத்தோட்டம், பம்ப் செட் போன்றவை ஊரில் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கின்றன. இதை கோர்ட்டில் கூறியதும் நீதிபதி அதை கவனமாக, கருத்தில் எடுத்துக் கொண்டார்.
சந்திரகலாவின் இரண்டு மனுக்களையும் ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்றம் 'இந்த இரண்டு மனுக்கள் மீதும் வழக்குப் பதிவு செய்ய சந்திரகலா கீழ் கோர்ட்டில் மனுதாக்கல் செய்ய வேண்டும்' என்றும், 'டி.எஸ்.பி. மீது சந்திரகலா குற்றச்சாட்டுகளைக் கூறியிருப்பதால், இன்னொரு போலீஸ் அதிகாரி மூலம் விசாரிக்க எஸ்.பி.க்கு கீழ்கோர்ட் உத்தரவிட வேண்டும்' என்றும் உத்தரவிட்டுள்ளது. கடமை தவறிய போலீஸ் அதிகாரி விசாரணைக்கு உட்படுத்தப்படுவார். இதில் நல்ல முடிவு கிடைக்கும் என நம்புகிறோம்'' என்றார் அழகுமணி.
தூத்துக்குடி மாவட்ட போலீஸ் அதிகாரி ஒருவரிடம் இதுபற்றிக் கேட்டோம்.
''சந்திரகலாவின் கிராமத்தில் உள்ள தலித்துகளிடையே இரண்டு கோஷ்டிகள் உள்ளன. அதில் பெரிய கோஷ்டி சந்திரகலாவை ஆதரிக்கிறது. ஆறுமுக வடிவு என்பவர் சந்திரகலாவின் உறவினர். இருந்தாலும் அவர் எதிர்கோஷ்டிக்குத் தலைவியாக இருந்து சங்கர் கணேஷை ஆதரிக்கிறார்.
சந்திரகலா இதே ஆறுமுகவடிவை ஊரை விட்டே ஒதுக்கி வைத்திருக்கிறார். ஆறுமுகவடிவின் வீட்டுப்பக்கம் தெருவிளக்கு போடக்கூட மறுக்கிறார். கோயில் திருவிழாவில் கூட ஆறுமுகவடிவை அவர் பங்கேற்க விடவில்லையாம். இதுபற்றி ஆறுமுகவடிவு எங்களிடம் புகார் செய்தார். நாங்கள் கூப்பிட்டு சமரசம் செய்தோம்.
இதற்கிடையே, போலீஸார் சந்திரகலாவுக்கு ஆதரவாக இருப்பதாகக் கருதிய ஆறுமுகவடிவு கோர்ட்டுக்குப் போய் சந்திரகலா தரப்பு தனது வீட்டைப் பிரித்து எறிந்து விட்டதாக புகார் செய்து, அதன்படி போலீஸார் வழக்குப்பதிவு செய்ய உத்தரவு வாங்கி வந்து விட்டார். இதனடிப்படையில் நாங்கள் வழக்குப் பதிவு செய்தோம். இப்போது எங்கள் மீதே வழக்கு விசாரணை வந்துள்ளது. போலீஸார் பாரபட்சமாக நடக்கவில்லை'' என்றார் அவர்.
எது எப்படியோ? கொட்டக்காய்சியேந்தல், பாப்பாரப்பட்டி, கீரிப்பட்டி வரிசையில் ஓர் ஆதிச்சநல்லூரும் வந்து விடக் கூடாதே என்பதுதான் நடுநிலையாளர்களின் அங்கலாய்ப்பு.
ஸீ கபிலன்
நன்றிங்க, 02.08.07 kumudam reporter
என்று தணியுமிந்த சாதி வெறி...?
No comments:
Post a Comment