Saturday, August 18, 2007

ஆண்டிப்பட்டியில் மணல் அள்ளுகிறார்கள்.

ஆண்டிப்பட்டியில் மணல் அள்ளும் திமுகவினர்:
போராட்டத்தில் குதிப்பேன்: ஜெ எச்சரிக்கை


ஆகஸ்ட் 18, 2007

சென்னை: மணல் அள்ளுவதை தடுக்காவிட்டால் ஆண்டிப்பட்டி பகுதியில் நானே போராட்டத்தில் குதிப்பேன் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா எச்சரித்துள்ளார்.

ஆண்டிப்பட்டி தொகுதியில் கடமலைக்குண்டு-மயிலாடும்பாறை ஒன்றியத்தில் உள்ள ஆற்றுப் படுகையில் மணல் அள்ளப்பட்டு வருகிறது.

இதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக ஜெயலலிதா அறிவித்துள்ளார்

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

வெள்ளிமலையில் இருந்து வைகை ஆற்றுக்கு வரும் தண்ணீர், வைகை அணைக்கு சென்று அங்கிருந்து திறந்துவிடப்பட்டு ராமநாதபுரம் வரை பாய்கிறது. இதனால் விவசாயிகளும், பொது மக்களும் பெரிதும் பயனடைகிறார்கள்.

மக்களின் அன்றாடத் தேவைகளை நிவர்த்தி செய்து கொண்டிருக்கும் இந்த நீரை அவர்கள் இழக்கவுள்ளார்கள். தண்ணீர் செல்ல வேண்டிய இடத்தில் திமுகவினர் தொடர்ந்து மணலை அள்ளிய வண்ணம் இருக்கிறார்கள்.

இதனால் தண்ணீர் எந்த நோக்கத்திற்காக திறந்து விடப்படுகிறதோ அது நிறைவேறாமல் போகப் போகிறது.

மணலை அள்ளுவதால் பொது மக்களும், விவசாயிகளும் தான் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.

அதிலும் குறிப்பாக, ஆண்டிப்பட்டியில் உள்ள துரைசாமிபுரம் முதல் அய்யனார்புரம் வரையுள்ள ஆற்றுப் படுகைகளில் சுமார் 20 அடி அளவிற்கு மணல் மேடுகளைக் கொண்டிருப்பதனால் தான் வைகை ஆற்றுத் தண்ணீர் அந்த இடத்திலிருந்து மற்ற இடங்களுக்குச் சீராக செல்ல முடிகிறது.

இதன் காரணமாக இப்பகுதியில் வசிக்கும் சுமார் 80,000 மக்களின் குடிநீர் மற்றும் பாசனத்திற்கு பயனுள்ளதாக இத்தண்ணீர் இருக்கிறது. துரைசாமிபுரம் முதல் அய்யனார்புரம் வரையுள்ள பகுதியில் மணல் அள்ளுவதற்கு இதுவரை எந்த அரசும் அனுமதி கொடுத்தது இல்லை.

ஆனால் திமுக அரசு தான் முதல் முறையாக இதற்கு அனுமதி வழங்கியதன் பேரில், தேனி மாவட்ட கலெக்டரால் மேற்குறிப்பிட்டுள்ள இடங்களில் திமுகவினரின் சுயலாபத்திற்காக மணல் அள்ளுவதற்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். பொதுமக்களின் குடிநீர் பிரச்சனையை பூர்த்தி செய்கிற கடமலைக்குண்டு-மயிலாடும்பாறை பகுதியில் வைகையாற்றில் திமுகவினர் மணல் அள்ளுகிற செயல் மனிதாபிமானமற்ற, ஈவு, இரக்கமற்ற செயலாகும்.

திருட்டுத்தனமாக யார் மணல் எடுத்துச் செல்ல முற்பட்டாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அரசுக்கு வரவேண்டிய வருவாயை ஏமாற்றிப் பிழைக்க நினைப்போரை வளர்த்திடக்கூடாது என்றும் கடந்த 02-08-2007 அன்று நடந்த கனிம வளத்துறை அதிகாரிகளுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் கருணாநிதி குறிப்பிட்டிருக்கிறார்.

ஆனால் அதற்கு முரணாக திமுக அரசு அனுமதி வழங்கியிருக்கிறது. இத்தகைய செயலை கடுமையாக கண்டிக்கிறேன்.

ஆண்டிப்பட்டி தொகுதியில் உள்ள பொதுமக்களின் குடிநீருக்காகவும், விவசாய பாசனத்திற்கு பயனுள்ளதாகவும் இருக்கிற வைகையாற்றில் உள்ள மணலை எடுப்பதற்கு வழங்கப்பட்டிருக்கும் அரசின் அனுமதியை உடனடியாக ரத்து செய்யவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இல்லாவிட்டால், அப்பகுதி மக்களை திரட்டி அதிமுக சார்பில் எனது தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று திமுக அரசுக்கு எச்சரிக்கை செய்ய விரும்புகிறேன் என்று ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

நன்றிங்க

ஜெயாக்கா ஆண்டிப்பட்டியில் மட்டும் குதிக்காமல் தமிழ் நாட்டில் மணல் அள்ளுகிற இடத்திலெல்லாம் குதிக்கட்டும் போராட்டத்தில்.

ம்ம்ம்... ஆட்சி கையிலே இல்லேன்னா எல்லாரும் இப்படி மாறிடுவாங்க போலேயே... நெசந்தானா...?

No comments: