Monday, August 27, 2007

ஐதராபாத்தில் பலி வாங்கிய ரசாயன குண்டு.

இந்தியா

ஐ.எஸ்.ஐ., தலிபான், அல்குவைதா உதவியுடன் செயல்படும் "ஹூஜி'* ஐதராபாத் பயங்கரவாத அமைப்பின் பின்னணி!

ஹர்கத் உல் ஜிகாத் இஸ்லாமி (ஹூஜி) எனும் பயங்கரவாத அமைப்புதான், ஐதராபாத் குண்டு வெடிப்பு சம்பவத்தை அரங்கேற்றியிருக்கிறது.

ஆப்கானிஸ்தானுடன் ரஷ்யா போர் புரிந்த நேரத்தில், ரஷ்யாவை எதிர்த்த பயங்கரவாத முஜாகிதீன்களின் முகாம் புனரமைப்புப் பணிகளுக்காக 1980ம் ஆண்டில் துவக்கப்பட்டதுதான் ஹூஜி.ஜமாத் உல் உலமா இ இஸ்லாமி (ஜுல்) மற்றும் தப்லிக் இ ஜமாத் (திஜ்) ஆகிய இரு பாகிஸ்தான் அமைப்புகள்தான், "ஹூஜி'யை நிறுவிய மத அமைப்புகள். அப்போது, மவ்லவி இர்ஷாத் அகமது என்பவர், "ஹூஜி'யின் தலைமைப் பொறுப்புகளை கவனித்து வந்தார். அடிப்படையிலேயே, "ஹூஜி'க்கு பாகிஸ்தான் தொடர்பு இருந்த போதிலும், ஆப்கனில் ரஷ்ய படைகளுக்கு எதிர்ப்பு வலுத்த நிலையில், பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., ஹூஜிக்கு தாராளமாக உதவ முன்வந்தது. ஹூஜி அமைப்புக்குத் தேவைப்படும், பயங்கரவாதிகளை தேர்வு செய்யவும், அவர்களுக்கு பயிற்சி அளித்து ஆப்கனுக்கு அனுப்பும் வேலையையும் மனம் உவந்து ஐ.எஸ்.ஐ., செய்தது. இது இப்போதும் தொடர்கிறது.

ஹிஸ்ப் இ இஸ்லாமி யூனஸ் காலிஸ் (ஹெல்கே) ஆப்கன் பயங்கரவாத அமைப்புடன், "ஹூஜி' தொடர்பு வைத்திருந்தது. 1985ம் ஆண்டில் மவ்லவி இர்ஷாத் மறைவுக்குப் பின்னர், "ஹூஜி' மூன்றாக பிரிந்தது. புதிய அமீர் (தலைவர்) காசி சைபுல்லா அக்தர் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் ஹர்கத் உல் முஜாகிதீனை (காஷ்மீரில் பல்வேறு பயங்கரவாத செயல்களுக்கு காரணமான அமைப்பு) தலைமை கமாண்டர் பஷல் உர் ரஹ்மான் காலில் துவக்கினார். மவ்லானா மசூத் காஷ்மீரி என்பவர் ஜமாத் உல் முஜாகிதீன் எனும் பிரிவுக்குத் தலைமையேற்றார்.

கடந்த 1991ம் ஆண்டுகளில் காஷ்மீர் பிரச்னை அதிகரித்த போது, இந்த மூன்று அமைப்பும் ஒன்றாக வேண்டும் என்று இஸ்லாமிய உலமாக்கள் கருதியதால், ஹர்கத் உல் அன்சார் எனும் புதிய அமைப்பு பாகிஸ்தானில் தோற்றுவிக்கப்பட்டது. வங்கதேசத்துக்கு ஒரு கிளை பயங்கரவாத அமைப்பு தேவைப்பட்ட போது, அதற்கு அல்குவைதா தலைவர் ஒசாமா பின்லாடன் உதவினார். சவுகத் உஸ்மான் என்ற ஷேக் பாரித் என்பவர் வங்கதேச, "ஹூஜி' பிரிவுக்கு பொறுப்பேற்று பல்வேறு பயங்கரவாத செயல்களுக்கு காரணமாக அமைந்தார். இன்றும், அங்கு இந்த அமைப்பு பயங்கரவாத வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்திய ஹூஜி பிரிவுக்கு தலைமையேற்ற மவுலானா மசூத் அசார், போர்ச்சுக்கீசிய பாஸ்போர்ட் உடன், இந்தியா வந்து 1994 பிப்ரவரியில் காஷ்மீர் சென்று சேர்ந்தார். அங்கு, பிப்ரவரி 10ம் தேதி, பிளவுபட்ட மூன்று அமைப்புகளுக்கான ஒரு கூட்டத்தை கூட்டி, காஷ்மீர் பிரிவினையே தனது குறிக்கோளாக அறிவித்தார். இதற்காக அடுத்து செய்ய வேண்டிய விஷயங்களையும் தீர்மானித்தார். இந்திய பாதுகாப்புப் படையினர் இவரை கைது செய்த போதும், 1999ம் ஆண்டில் இந்திய ஏர்லைன்ஸ் விமானத்தை ஆப்கனில் உள்ள காந்தகாருக்கு கடத்தி சென்று பயணிகளை பயங்கரவாதிகள் பிணைக் கைதிகளாக்கினர். பயங்கரவாதிகளை விடுவிக்க வேண்டும் என்று தலிபான்கள் கோரிய பயங்கரவாதிகளில் மசூத் அசாரும் ஒருவர். அதன்படியே இந்தியாவும் விடுவித்தது. விடுதலை ஆன மசூத் உடனே, ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கத்தை (2001 பார்லிமென்ட் தாக்குதலில் தொடர்புடைய அமைப்பு) துவக்கினார். ஹூஜி அமைப்புக்கு முகமது அப்துல் ஷாகித் என்ற பிலால் தலைமையேற்றார். இவர், கடந்த பிப்ரவரியில் டில்லி லாகூர் இடையேயான சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் குண்டு வெடிப்பில் தொடர்புடையவர். காஷ்மீரில் மட்டும் தாக்குதல் நடத்துவதைவிட, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடத்தும் தாக்குதல்கள் தான், தங்கள் மீது கவனம் பெறும் என்ற அடிப்படையில் இந்த பயங்கரவாத அமைப்பினர் தற்போது செயல்பட்டு வருகின்றனர். இதுவே, ஐதராபாத் குண்டு வெடிப்புக்கு காரணம். ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி, குண்டு வெடிப்பில் பாகிஸ்தான் மற்றும் வங்கதேச பயங்கரவாத தொடர்பு உள்ளது என்று கூறியிருப்பது சம்பவத்தில், "ஹூஜி' மற்றும் ஜெய்ஷ் இ முகமது அமைப்புகளின் பின்னணியை உறுதிப்படுத்துகிறது. கடந்த 27 ஆண்டுகளில் இல்லாத அளவில் இந்த அமைப்பு தற்போது விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இந்திய அரசு பயங்கரவாத முறியடிப்புக்கு என தனித் துறையை உருவாக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது என்பதையே இந்த குண்டு வெடிப்பு சம்பவம் காட்டுகிறது.

-------------------------------------------------------------

ஐதராபாத்தில் 42 பேரை பலி வாங்கியது பயங்கர ரசாயன குண்டு.

ஐதராபாத்: "ஐதராபாத்தில் நடந்த இரட்டை குண்டு வெடிப்பு சம்பவத்தில் "நியோஜெல்90' என்ற ரசாயனத்தை அடிப்படையாக கொண்ட நவீன குண்டுகளை பயங்கரவாதிகள் பயன்படுத்தி உள்ளனர்' என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆந்திராவில் வெடிகுண்டு கண்டுபிடிப்பு படையை சேர்ந்த தலைமை அறிவியல் அதிகாரி டி.சுரேஷ் கூறியதாவது:

ஐதராபாத்தில் மே 18ம் தேதி மசூதியில் நடந்த குண்டு வெடிப்பும், நேற்று முன்தினம் நடந்த இரட்டை குண்டு வெடிப்பும் வெவ்வேறு வகையில் நடத்தப்பட்டுள்ளன. மசூதி குண்டு வெடிப்பில் ஆர்.டி.எக்ஸ்., மற்றும் டி.என்.டி., வெடிமருந்துகளின் கலவை பயன்படுத்தப்பட்டு இருந்து. நேற்று முன்தினம் நடந்த குண்டு வெடிப்பில் அமோனியம் நைட்ரேட் என்ற ரசாயனத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. மசூதி குண்டு வெடிப்பில், வெடிமருந்து பைப்களில் அடைக்கப் பட்டு இருந்தன.நேற்று முன்தினம் இரட்டை குண்டு வெடிப்பு சம்பவம் நடந்த பிறகு பல இடங்களில் போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினர். மாலாபாடா என்ற இடத்தில் ஒரு குண்டு கண்டுபிடிக்கப்பட்டு இருந்தது. அந்த குண்டில் "நியோஜெல்90' என்ற அமோனியம் நைட்ரேட் ரசாயனத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டு இருந்தது. ரசாயனத்துடன் சிறிய இரும்பு குண்டுகள் கலக்கப்பட்டு இருந்தன. அலாரம் கடிகாரம் மற்றும் டெட்டனேட்டர்கள் ஆகியவை ஒரு பேட்டரியுடன் இணைக்கப்பட்டு இருந்தன. நேற்று முன்தினம் "கோகுல் சாட்' என்ற உணவகத்தில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஏராளமானவர்கள் உயிர் இழந்தனர்.

இங்கு ஐஸ் கிரீம் இயந்திரம் மீது, தரையில் இருந்து ஐந்து அடி உயரத்தில் குண்டு மறைத்து வைக்கப்பட்டு இருந்தது. அதிக அளவில் உயிர் சேதம் ஏற்பட வேண்டும் என்ற எண்ணத்தில் இதுபோல செய்துள்ளனர்.இவ்வாறு சுரேஷ் கூறினார். வெடிகுண்டில் பயன்படுத்தப் பட்ட "நியோஜெல்90' என்ற ரசாயனத்தை நாக்பூரில் உள்ள "அமின் கெமிக்கல்ஸ்' என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. இதை உள்ளூரிலேயே பயங்கரவாதிகள் வாங்கியுள்ளனர். இரும்பு பெட்டியில் வெடிமருந்தை நிரப்பி, அதை ஒரு பையில் போட்டு மறைத்து வைத்துள்ளனர். பிரின்ஸ் நிறுவனம் தயாரித்த அலாரம் கடிகாரம் குண்டுகளில் இணைக்கப்பட்டுள்ளன. "லும்பினி பார்க்' பகுதிக்கு நேற்று காலை ஆந்திர சுற்றுலாத்துறை அமைச்சர் ஆனாம் ராமநாராயணன ரெட்டியும் வந்து இருந்தார். அவர் கூறுகையில்,"சுற்றுலா பகுதியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவது இதுவே முதல் முறை. இது கண்டனத்துக்கு உரியது. பயங்கரவாதத்தை தடுக்க அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும். எதிர்காலத்தில் "லும்பினி பார்க்' எந்த வகையான பாதுகாப்பு அளிப்பது என்பது குறித்து சுற்றுலாத் துறையும், ஐதராபாத் நகர மேம்பாட்டுத் துறை அதிகாரிகளும் கலந்து ஆலோசித்து முடிவு செய்வர்' என்றார்.

"நியோஜெல்90' தயாரிப்பது எப்படி?:ஐதராபாத்தில் பயங்கரவாதிகள் பயன்படுத்திய குண்டு, "நியோஜெல்90' எனும் அமோனியம் நைட்ரேட்டால் ஆன வெடிபொருள் என்று கண்டறியப்பட்டுள்ளது. பெட்ரோலியப் பொருட்கள் மற்றும் அமோனியம் நைட்ரேட் கலந்து இந்த வெடிபொருளை தயாரிக்கின்றனர். அமோனியம் நைட்ரேட் குவாரி மற்றும் சுரங்கப் பகுதியில் வெடி பொருளாகப் பயன்படுத்தப்படுவதாலும், டீசல் அல்லது மண்ணெண்ணெய் சாதாரணமாக கிடைக்கக்கூடியது என்பதால், யாரும் சந்தேகப்படாத வகையில் குண்டுகளை தயாரிக்க பயங்கரவாதிகள் இப்போது இவ்வகை குண்டுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர். ஜெலட்டின் மற்றும் டைனமைட்டை பெற்று குண்டுகள் தயாரிப்பதில் உள்ள சிக்கல் இதில் இல்லை. அமோனியம் நைட்ரேட் உடன் அலுமினிய பவுடர் சேர்த்து அதிக பாதிப்பை ஏற்படுத்துகின்றனர். அமோனியம் நைட்ரேட் வெடிபொருளின் வெடிக்கும் வேகம் பொதுவாக வினாடிக்கு 10 ஆயிரத்து 700 அடி வேகத்தில் சிதறடிக்கும்.அயர்லாந்தில் செயல்படும் பயங்கரவாதிகள் இந்த வகை வெடிபொருட்களை பயன்படுத்துகின்றனர். 1995ம் ஆண்டில் அமெரிக்காவில் ஒக்லஹாமா வெடிகுண்டு சம்பவத்திலும்கூட இந்த வெடிபொருள் பயன்படுத்தப்பட்டது.போரில் பயன்படுத்தப்படும் சில வகை குண்டுகளில் கூட அமோனியம் நைட்ரேட் கலக்கப்படுகிறது. தரைக்கு மேலே வெடித்து தரையில் உயிர் மற்றும் பொருட்சேதம் ஏற்படுத்தக்கூடிய "டெய்சி கட்டர்' குண்டுகளிலும் அமோனியம் நைட்ரேட் பயன்படுகிறது. ஆப்கன் போரின் போது அமெரிக்கா இதைப் பயன்படுத்தியது.

ஒரே குடும்பத்தினர் நான்கு பேர் பலி: ஐதராபாத்தில் நடந்த இரட்டை குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஒரே குடும் பத்தைச் சேர்ந்த நான்கு பேர் பரிதாபமாக இறந்துள்ளனர். ஐதராபாத்தில் ஹூமாயூன் நகரில் உள்ள கோல் கண்டா அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் முகமது சலீம்(40); ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி பரீதா நாஸ்(36), மகன்கள் அமர்(9), அலி(6). நேற்று முன்தினம், "கோகுல் சாட்' என்ற உணவகத்தில் குண்டு வெடித்து ஏராளமானவர்கள் கொல்லப் பட்டனர். சம்பவம் நடந்த போது முகமது சலீம் குடும் பத்தினரும் அங்கு சென்றிருந்தனர். அவர்கள் நான்கு பேரும் குண்டு வெடிப்பில் இறந்து விட்டனர். முகமது சலீமின் சகோதரர் சமீர் கூறுகையில், ""குண்டு வெடிப்பு சம்பவம் நடந்து விட்டது என்று கேள்விப் பட்டதும் முகமது சலீமை தொடர்பு கொள்ள முயன்றேன், முடியவில்லை. உடனடியாக அங்கு சென்று பார்த்தோம். யாரும் கிடைக் கவில்லை. பின்னர் தேடிப் பார்த்ததில் நான்கு பேரின் உடல்களையும் ஓஸ்மேனியா மருத்துவமனையில் கண்டு எடுத்தோம்,'' என்றார்.

நன்றிங்க, dinamalar 27/08/07

பொதுவானவை.

No comments: