ஹனீப் விவகாரம்-'ஆஸி அமைச்சர் உளறுகிறார்'
ஆகஸ்ட் 02, 2007
பெங்களூர்: தனது பதவியை காப்பாற்றிக் கொள்வதற்காக ஆஸ்திரேலிய அமைச்சர் என்ன நடந்தது எனத் தெரியாமல் அரைகுறையான தகவல்களை வெளியிட்டு வருகிறார் என குயின்ஸ்லாந்து பிரதமர் பீட்டர் குற்றம் சாட்டியுள்ளார்.
கிளாஸ்கோ விமான நிலையம் தாக்குதல் மற்றும் லண்டனில் கார் குண்டு கண்டுபிடிப்பு ஆகியவற்றில் தொடர்புள்ளதாகக் கூறி டாக்டர் ஹனீப் கடந்த மாதம் 2ம்தேதி ஆஸ்திரேலிய விமான நிலையத்தில் அந்நாட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு போதுமான ஆதாரங்கள் இல்லாததால் அவர் மீது பதியப்பட்ட அனைத்து வழக்குகளையும் ஆஸ்திரேலிய போலீசார் திரும்ப பெற்று விடுதலை செய்தனர்.
இந் நிலையில் ஆஸ்திரேலிய குடியிரிமைத்துறை அமைச்சர் கெவின் ஆன்ட்ரூஸ் அளித்த பேட்டியில்,
கிளாஸ்கோ விமான நிலைய தாக்குதலை பற்றி முதலிலேயே டாக்டர் ஹனீப்பிற்கு தெரியும். அதனால் தான் அவர் தன் மனைவியையும், பிறந்துள்ள குழந்தையையும் பார்க்க செல்வதாக பொய் சொல்லி மருத்துவமனையில் விடுமுறை எடுத்துள்ளார்.
அவர் இந்தியாவுக்கு கிளம்பிய தினத்தன்று தனது சகோதரருடன் இன்டர்நெட்டில் சேட்டிங் மூலம் பேசிய தகவல்களும் ஆஸ்திரேலிய போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
அதனால் தான் அவருடைய விசாவை ரத்து செய்து உத்தரவிட்டேன். என்னதான் அவர் மீதான வழக்குகள் திரும்ப பெற்று விட்டாலும், இன்னமும் டாக்டர் ஹனீப் மீது ஆஸ்திரேலிய போலீசாருக்கு சந்தேகம் உள்ளது என்றார்.
இது குறித்து டாக்டர் ஹனீப் நிருபர்களிடம் கூறியதாவது,
நான் எனது சகோதரருடன் சேட்டிங்கில் பேசியது குறித்து ஆஸ்திரேலிய போலீசார் என்னிடம் 2வது முறையாக நடத்திய விசாரணையில் கேட்டனர். அப்போது நான் அவர்களிடம் அதைப்பற்றி முழுமையாக விளக்கிவிட்டேன்.
எனது சகோதரர் ஷோகீப்புடன் நான் என்ன பேசினேன் என்பதை பற்றி அனைத்து விவரங்களையும் சொன்னால் அதில் தவறு ஏதுமில்லை என்பதை ஒப்புக் கொள்வீர்கள். ஆனால் இப்போது அதை வெளியில் தெரிவித்தால் வழக்கு விசாரணையில் பாதிப்பு ஏற்படும் என வழக்கறிஞர்கள் கூறியுள்ளதால் நான் ஏதும் சொல்ல இயலாது.
வரும் 8ம் தேதியன்று மெல்போர்ன் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் இதைப்பற்றி முழுமையான விளக்கம் கொடுக்கப்படும். பல்வேறு பத்திரிக்கைகள் சிறப்புப் பேட்டி கொடுங்கள். பணம் தருவதாக கூறினார்கள். ஆனால் நான் இதுவரை பணத்திற்காக யாருக்கும் தனிப்பட்ட முறையில் பேட்டி கொடுக்கவில்லை என்றார்.
இந் நிலையில் ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாண பிரதமர் பீட்டர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
டாக்டர் ஹனீப், கிளாஸ்கோ விமான நிலைய தாக்குதலில் தொடர்புடைய கபீல், சபீல் சகோதரர்களுக்கு சிம்கார்டு கொடுத்துள்ள தகவலை இங்கிலாந்து போலீசாருக்கு தெரிவிக்க 4 முறை போன் செய்துள்ளார். அதையெல்லாம் கெவின் தெரிவிக்கவில்லை.
டாக்டர் ஹனீப் விவகாரத்தில் தனது பதவி பறிபோய் விடாமல் இருக்க, இப்படி அரைகுறை தகவல்களை வெளியிட்டு வருகிறார் என்று கூறியுள்ளார்.
கெவினின் குற்றச்சாட்டுகளுக்கு ஜனநாயக கட்சி எம்பி ஆன்ட்ரூ பார்ட்லெட் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நன்றிங்க
ஒரு நாட்டின் பொறுப்புள்ள அமைச்சர் பதவியை வகிப்பவர் இப்படியெல்லாமா உளறுவது...?
No comments:
Post a Comment