Sunday, August 26, 2007

ஹைதராபாத்தில் குண்டு வெடிப்பு, பயங்கரம்.

ஹைதராபாத்தில் பயங்கரம்: 2 குண்டுவெடிப்புகளில்
47 பேர் பலி - 100 பேர் படுகாயம்


ஆகஸ்ட் 26, 2007

ஹைதராபாத்: ஆந்திரப் பிரதேச தலைநகர் ஹைதராபாத்தில் அடுத்தடுத்து நடந்த இரட்டை வெடிகுண்டு சம்பவங்களில் 47 பேர் உடல் சிதறி பலியானார்கள். 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். பாகிஸ்தான் தீவிரவாதிகளின் சதிச் செயலாக இது கருதப்படுகிறது. இந்த சம்பவத்தால் ஆந்திரத் தலைநகரில் பெரும் பதட்டம் நிலவுகிறது.



நேற்று இரவு லும்பினி பார்க் பகுதியில் உள்ள ஒரு தியேட்டரில் லேசர் காட்சி நடந்து கொண்டிருந்தது. 500க்கும் மேற்பட்டோர் அதைக் காண கூடியிருந்தனர். அப்போது இரவு 7.40 மணிக்கு முதல் குண்டு வெடித்தது.

இந்த பயங்கர குண்டுவெடிப்பினால் அந்தப் பகுதியே போர்க்களம் போலக் காணப்பட்டது. இறந்தவர்களின் உடல்கள் ஆங்காங்கு விழுந்து கிடந்தன. தரையெல்லாம் ரத்த வெள்ளமாக காணப்பட்டது. இந்த இடத்தில் நடந்த குண்டுவெடிப்பில் 9 பேர் பலியானார்கள்.

2வது குண்டு கோடி என்ற இடத்தில் உள்ள கோகுல்சாட் என்ற பிரபல ஹோட்டலில் வெடித்தது. லும்பினி பார்க்கிலிருந்து இது 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இங்குதான் உயிரிழப்பு அதிகம். 32 பேர் இங்கு மட்டும் உயிரிழந்துள்ளனர்.

லும்பினி பார்க் அருகே தான் ஆந்திர மாநில தலைமைச் செயலகம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இரு குண்டுவெடிப்புகளிலும் 47 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சாவு எண்ணிக்கை 50 இருக்கும் என கூறப்படுகிறது.



குண்டுவெடிப்புச் சம்பவங்களைத் தொடர்ந்து விரைவு அதிரடிப்படையினர், விரைந்து வந்து அந்தப் பகுதிகளில் தேடுதல் வேட்டையில் இறங்கினர். நகர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. மீட்புப் படையினர் துரித கதியில் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

காயமடைந்து துடித்துக் கொண்டிருந்தவர்கள் மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். 100க்கும் மேற்பட்டோர் இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்களில் 35 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களை உள்துறை அமைச்சர் ஜனா ரெட்டி பார்வையிட்டார். முதல்வர் ராஜசேகர் ரெட்டி லும்பினி பார்க் பகுதிக்கு விரைந்து சென்று சம்பவம் நடந்த இடத்தைப் பார்வையிட்டார்.

குண்டுவெடிப்பு நடந்த இரு இடங்களிலும் துயரக் காட்சிகள் காண்பவர் நெஞ்சை உருக்கும் வகையில் இருந்தது. தங்களது உறவினர்கள், நண்பர்கள், குடும்பத்தினர் குண்டுவெடிப்பில் என்ன ஆனார்கள் என்பதை அறிய அவர்கள் அலறி அடித்தபடி அங்குமிங்கும் அலைந்தபடி இருந்தனர்.

படுகாயமடைந்த பலர் வலியால் துடித்தபடி ரத்தம் சிந்தியபடி வேதனையில் முணகியபடி இருந்தனர். அவர்களை போலீஸாரும், தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும் மீட்டு ஆம்புலன்ஸ்களில் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்றனர்.

இறந்தவர்களில் 6 பெண்கள் உள்ளிட்ட 11 பேரின் உடல்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில், மகாராஷ்டிரா மாநிலத்திலிருந்து வந்திருந்த மாணவர்கள் சிலரும் பரிதாபமாக பலியாகி விட்டனர்.

2 குண்டுகள் கண்டுபிடித்து செயலிழப்பு:

இந்த நிலையில், வேறு எங்கும் குண்டுள் வைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து போலீஸாரும், வெடிகுண்டு நிபுணர்களும் தேடுதல் வேட்டையில் இறங்கினர்.

அப்போது, தில்சுக்நகர் பகுதியில் பாலத்தின் கீழ் ஒரு குண்டு வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த குண்டு 9.35 மணிக்கு வெடிக்கும் வகையில் டைம் செட் செய்து வைக்கப்பட்டிருந்தது. இந்தக் குண்டை பத்திரமாக மீட்ட பாதுகாப்புப் படையினர் அதை பின்னர் செயலிழக்கச் செய்தனர்.

இந்த குண்டு பிளாஸ்டிக் பையில் வைக்கப்பட்டிருந்தது. செல்போன் மூலம் இதை இயக்கும் வகையில் அந்தக் குண்டு வடிவமைக்கப்பட்டிருந்தது.

இதேபோல, தியேட்டர் ஒன்றின் அருகே வைக்கப்பட்டிருந்த இன்னொரு வெடிகுண்டையும் பாதுகாப்புப் படையினர் கண்டுபிடித்து செயலிழக்கச் செய்தனர்.

வெடிகுண்டுச் சம்பவங்களைத் தொடர்ந்து ஹைதரதாபாத்தில் நேற்று இரவு சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. அனைத்து தியேட்டர்களிலும் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருக்கிறதா என்று தீவிர சோதனை நடத்தப்பட்டது.

ஐஎஸ்ஐ சதி:

வங்கதேசத்தை மையமாகக் கொண்டு செயல்படும் பாகிஸ்தான் உளவு நிறுவனமான ஐஎஸ்ஐ ஆதரவு பெற்ற ஹூஜி ஜிஹாதிஸ் என்ற தீவிரவாத அமைப்பே இதற்குக் காரணம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள்தான் கடந்த மே 18ம் தேதி ஹைதராபாத்தில் உள்ள மெக்கா மசூதியில் குண்டுவெடிப்பை நிகழ்த்தினர்.

இதுகுறித்து ஆந்திர மாநில உள்துறை அமைச்சர் ஜனா ரெட்டி கூறுகையில், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐயின் சதியாகவே இதை நாங்கள் நினைக்கிறோம்.

குண்டுவெடிப்புச் சம்பவங்களில் பாதுகாப்புத் துறையின் குளறுபடி எதுவும் இருப்பதாக நாங்கள் கருதவில்லை. அப்படி இருந்திருந்தால் பெரிய அளவில் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கும்.

ஆந்திராவில் எட்டரை கோடி பேர் உள்ளனர். அனைவரையும் உஷார்படுத்துவது என்பது இயலாத காரியம். காயமடைந்துள்ளவர்களுக்கு அரசு சார்பில் நல்ல சிகிச்சை அளிக்கப்படும் என்றார் ஜனா ரெட்டி.

திருப்பதியில் பாதுகாப்பு அதிகரிப்பு:

ஹைதராபாத் குண்டுவெடிப்புச் சம்பவங்களைத் தொடர்ந்து திருப்பதியில் பாதுகாப்பு பன் மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

திருச்சானூர் பத்மாவதி கோவில், ஸ்ரீகாளஹஸ்தி கோவில், கனிபாக்கம் வரசித்தி விநாயகர் கோவில் உள்ளிட்ட மாநிலம் முழுவதும் உள்ள கோவில்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதுதவிர திருப்பதி கோவில் அமைந்துள்ள சித்தூர் மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்களிலும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை - கொல்கத்தா பிரிவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளிலும் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இங்கு வாகனச் சோதனைகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

பிரதீபா பாட்டீல், மன்மோகன் சிங் கண்டனம்:

ஹைதராபாத் இரட்டை குண்டுவெடிப்புச் சம்பவங்களை குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், துணை குடியரசுத் தலைவர் முகம்மது அன்சாரி, பிரதமர் மன்மோகன் சிங், உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் ஆகியோர் கண்டித்துள்ளனர்.

குடியரசுத் தலைவர் மாளிகை இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இதுபோன்ற பயங்கரவாத சம்பவங்கள் கடுமையாக கண்டிக்கப்பட வேண்டும். மத ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தைக் குலைக்க நினைப்போரின் செயல் தான் இது. இதுபோன்ற மனிதாபிமானமற்ற செயலில் ஈடுபடுவோர் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்று பிரதீபா பாட்டீல் கூறியுள்ளார்.

சிவராஜ் பாட்டீல் இன்று ஹைதராபாத் வருகிறார். ஆந்திர அரசுக்கு தீவிரவாதிகளை ஒடுக்கும் செயலில் மத்திய அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும் என உறுதியளித்துள்ளது.

பலியானோருக்கு ரூ.5 லட்சம் பணம், அரசு வேலை:

ஹைதராபாத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் பலியான ஒவ்வொருவரின் குடும்பத்தாருக்கு ஆந்திர அரசின் சார்பில் ரூ. 5 லட்சம் நிவாரண நிதியுதவியும், அக்குடும்பத்தில் உள்ள தகுதியான ஒருவருக்கு அரசு வேலையும் தரப்படும்.

காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் நிவாரண நிதியாக கொடுக்கப்படும் என்று ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி இன்று கூட்டிய அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கூட்டத்தில் அறிவித்துள்ளார்.

நன்றிங்க

கண்டிக்கத்தக்கது, :(((

No comments: