Wednesday, August 22, 2007

சிலிக்கான் சென்னைக்கு வயது 368!

'சிலிக்கான்' சென்னைக்கு வயது 368!
ஆகஸ்ட் 22, 2007

- எம். ஹூஸைன் கனி

பட்டணம் என்று செல்லமாக அழைக்கப்படும், சென்னை, இன்று தனது 368வது பிறந்த நாளை கொண்டாடுகிறது.



பழைய கருப்பு - வெள்ளை சினிமா படங்களில் சென்னையைக் காண்பிக்கும்போது சென்டிரல் ரெயில் நிலையத்தையும், அண்ணா சாலையில் உள்ள எல்.ஐ.சி. கட்டிடத்தையும் காட்டுவார்கள். பிறகு வந்த படங்களில் அண்ணா சமாதியின் அழகுமிகு ஆர்ச் காட்டப்படும் அல்லது கடற்கரை உழைப்பாளர் சிலை காட்டப்படும்.



இன்று எல்.ஐ.சி. கட்டிடத்தை விட உயரமான பெரிய பெரிய கட்டிடங்களையும், கண்களைக் கவரும் வகையிலான கலர் கலர் கம்ப்யூட்டர் நிறுவன வளாகங்களையும், வழுக்கிக் கொண்டு ஓடும் அதி நவீன கார்களையும், வாகன நெரிசல்களையும் கொண்டு, நீண்டு விரிந்து பரந்து போய்க் காணப்படுகிறது சென்னை மாநகரம்.



குதிரை வண்டிகளும், டிராம்களும், கை வண்டி ரிக்ஷாக்களும் ஓடிய அண்ணா சாலையில் இன்று விதவிதமான வெளிநாட்டு சொகுசு கார்கள் சீறிப்பாய்ந்து செல்கின்றன.



வானளாவிய உயர்ந்த கட்டிடங்களையும், நவீன வசதிகளையும் கொண்டுள்ள சென்னை நகரம் உருவான வரலாறு நெடியது. தென்னிந்தியாவின் முதன்மையான நகராகவும், இந்தியாவின் நான்காவது பெருநகரமாகவும் திகழும் சென்னைக்கு இன்றுடன் 368 வயது ஆகிறது.



எப்படி பிறந்தது சென்னை:

பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியைச் சேர்ந்த பிரான்சிஸ் டே, ஆண்ட்ரு கோகன் ஆகிய இருவரும்தான் சென்னையை உருவாக்கியவர்கள். இப்போதைய சென்னை அந்த காலத்தில் 'சென்னப்பட்டினம்' என்றும், 'மெட்ராஸ்பட்டினம்' என்றும் அழைக்கப்பட்டு வந்தது.



மைலாப்பூர், எழும்பூர், திருவல்லிக்கேணி, திருவான்மியூர், திருவொற்றியூர் என்று பல்வேறு சிறுசிறு கிராமங்களாகவும், சிறு சிறு குறு நகர்களாகவும் காணப்பட்டது அந்தக்கால சென்னைப்பட்டினம். புதர்கள், காடுகள், மரங்கள் சூழ்ந்த இந்த ஊர்களுக்கு இடையே கூவம், அடையாறு போன்ற ஆறுகள் பாய்ந்து ஓடின.



ஆங்கிலேயர்கள் வருகை:

சென்னப்பட்டினம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக வாசனை திரவியம் மற்றும் ஜவுளி வியாபாரத்தில் கொடிகட்டிப் பறந்தது. போர்ச்சுக்கீசியர்களின் வருகைக்குப் பின்னரே அது வளர்ச்சி அடையத் தொடங்கியது. கி.பி. 1552-ம் ஆண்டில் போர்ச்சுக்கீசியர்கள் சாந்தோமில் குடியேறி வியாபாரம் செய்தனர்.



சென்னப்பட்டினத்தில் விலை உயர்ந்த ஜவுளி மூலப்பொருட்கள் கிடைத்தன. இதை குறிவைத்து இங்கு கால்பதிக்க ஆங்கிலேயர்கள் திட்டமிட்டனர். இதற்காக கிழக்கிந்திய கம்பெனி பிரான்சிஸ் டே, ஆண்ட்ரு கோகன் என்ற 2 வியாபாரிகளை சென்னப்பட்டனத்திற்கு அனுப்பி வைத்தது. சென்னப்பட்டினத்துக்கு வந்த அவர்கள் இருவரும் வணிக மையம் கட்டுவதற்காக இடம் பார்த்தனர்.



ஜார்ஜ் கோட்டை:

அதற்காக பூந்தமல்லி நாயக்கர் மன்னரிடமிருந்து ஒரு குறிப்பிட்ட அளவு நிலத்தை வாங்கினார்கள். அந்த இடத்தில் கிழக்கிந்திய கம்பெனியின் வணிக மையத்தையும் செயின்ட் ஜார்ஜ் கோட்டையையும் 22.8.1639-ல் கட்டினர். இதுதான் சென்னை உருவாக முதல் அடிக்கல் எனலாம்.



பாதுகாப்பை கருத்தில் கொண்டு செயிண்ட் ஜார்ஜ் கோட்டையைச் சுற்றிலும் சுற்றுச்சுவர் கட்டப்பட்டது. வணிக வளாகம் கட்டப்பட்டதால் ஐரோப்பியர்கள் நிறைய பேர் வந்தனர். அவர்கள் செயிண்ட் ஜார்ஜ் கோட்டையை சுற்றிலும் வீடு கட்டி குடியேறினர். அந்த பகுதி வெள்ளை பட்டினம் என்று அழைக்கப்பட்டது. அதற்கு வெளிப்புற பகுதியில் ஆந்திராவில் இருந்து வந்த ஏராளமான நெசவாளர்கள் குடியேறினர். இது கறுப்பு பட்டினம் என்று அழைக்கப்பட்டது. இந்த பகுதிதான் பின்னர் ஜார்ஜ் டவுண் ஆனது.



கைமாறியது:

செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு வடக்கே உள்ள பகுதி சென்னப்பட்டினம் என்றும், தெற்குப் பகுதி மதராஸ் பட்டனம் என்றும் அழைக்கப்பட்டது. இந்த இரண்டு பட்டணங்களையும் ஒன்றுசேர்த்து ஆங்கிலேயர்கள் மதராஸ் பட்டினம் என்றும், தமிழர்கள் சென்னப்பட்டினம் என்றும் அழைத்தனர்.




1653-ல் சென்னப்பட்டினம் சென்னை மாகாணமாக மாறியது. அதன் பின்னர் 1702-ல் முகலாயர்களாலும், 1741-ல் மராட்டியர்களாலும் அது தாக்குதலுக்கு உள்ளானது. 1746-ம் ஆண்டு பிரெஞ்சுக்காரர்கள் கைவசமானது.




பெயர் மாற்றம்:

பின்னர் ஆங்கிலேயர்களின் கைக்கு போனது. 1758-ல் மீண்டும் பிரெஞ்சுக்காரர்கள் கைப்பற்றினர். ஆனால், 2 மாதங்களிலேயே ஆங்கிலேயர்கள் திரும்பவும் மீட்டனர். அன்றுமுதல் 1947-ம் ஆண்டுவரை சென்னை மாகாணம் ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது.




சென்னை மாகாணம் 1968-ம் ஆண்டு தமிழ்நாடு என்று பெயர்மாற்றம் செய்யப்பட்டது.

அதுபோல, மெட்ராஸ் என்று இருந்த பெயர் 1997-ம் ஆண்டு சென்னை என்று மாற்றப்பட்டது.

30 ஆயிரம் மக்கள்தொகையுடன் உருவான சென்னை நகரின் மக்கள்தொகை தற்போது 1 கோடியை நெருங்கிக் கொண்டிருக்கிறது. சென்னை நகரின் பரப்பும் விரிவடைந்து கொண்டே போகிறது. இன்னும் கொஞ்ச நாளில் தெற்கே செங்கல்பட்டு வரையிலும், வடக்கே திருவள்ளூர் வரையிலும் சென்னை நகரமாக மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

'மெட்ராஸ் டே':

1639-ம் ஆண்டு உருவான சென்னை நகரின் பிறந்த நாளையொட்டி சென்னை நகரில் பல்வேறு நிகழ்ச்சிகள், கண்காட்சிகள், கருத்தரங்குகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நன்றிங்க

சென்னைக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

No comments: