ஈரத் துணியில் சுருட்டி...வேலூரில் மாவட்டத்தில்
பெண் சிசு கொலை கொடூரம்!!
ஆகஸ்ட் 04, 2007
வேலூர்: வேலூர் மாவட்டத்தில் வறுமை காரணமாக பிறந்த பெண் சிசுக்களை பெற்றோர்களே கொன்று புதைத்து வரும் அவலம் அரங்கேறியுள்ளது.
தமிழகத்தைத் தாண்டி யாருக்கும் தெரியாமல் இருந்த மதுரை மாவட்டம் உசிலம்பட்டி கிராமம் சில ஆண்டுகளுக்கு உலகப் புகழ் பெற்ற கிராமமாக மாறியது. ஏதோ நல்லது செய்தோ அல்லது சாதனை செய்தோ அந்த ஊருக்கு பெருமை கிடைத்து விடவில்லை.
பிறந்த சிசுக்களைக் கொன்று குவிக்கும் கொலைகார குக்கிராமமாக உசிலம்பட்டிக்குப் பெயர் கிடைத்தது. பெண் குழந்தை பிறந்தால் உடனே கள்ளிப் பால் கொடுத்தும், நெற்கதிர்களை தொண்டைக்குழியில் போட்டும் கொன்று புதைக்கும் கொடூரம், காலம் காலமாக உசிலம்பட்டியில் அரங்கேறி வந்த அவலம் வெளிச்சத்திற்கு வந்து பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து அரசுத் தரப்பிலும், தொண்டு நிறுவனங்கள் தரப்பிலும் பல நடவடிக்கைகள் அடுக்கடுக்காக பாய்ந்தன. அதன் பின்னர் சிசுக் கொலை சற்றே அடங்கியது. ஆனால் உசிலம்பட்டியைத் தவிர தர்மபுரி, சேலம் உள்ளிட்ட வேறு சில மாவட்டங்களிலும் இந்தக் கொடூரம் நடப்பது தெரிய வந்தது.
கடந்த ஜெயலலிதாவின் ஆட்சியின்போது பெண் சிசுக்களை காக்கும் நோக்குடன் தொட்டில் குழந்தைகள் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. பெரும் வரவேற்பைப் பெற்ற இந்தத் திட்டத்தின் கீழ் பல பெண்கள் அரசுத் தொட்டிலில் விடப்பட்டன
கடந்த சில வருடங்களாக பெரிய அளவில் இல்லாமல் இருந்து வந்த பெண் சிசுக் கொலை மீண்டும் தற்போது தலை தூக்க ஆரம்பித்துள்ளது. கடந்த வாரம் வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் தாலுகாவில் உள்ள பேரணாம்பட்டு என்ற ஊரில் ஒரு பெண்ணுக்கு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெண் குழந்தை சுகப்பிரசவத்தில் பிறந்துள்ளது.
அந்த பெண்ணுக்கு ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் இருக்கும் நிலையில் 3வதும் பெண்ணாக பிறந்துள்ளது. இந்த நிலையில், குழந்தை பிறந்த 2வது நாள் இறந்து விட்டதாம்.
சந்தேகமடைந்த அதிகாரிகள் இதுகுறித்து பெற்றோரிடம் கேட்டபோது, ஏதோ தீய சக்தி வந்து குழந்தையை கொன்றுவிட்டது என்றார்களாம். அவர்கள் மட்டுமல்லாது அந்தக் கிராமமே அப்படித்தான் சொல்கிறது.
இதன் பின்னணியில் பெரிய அக்கிரமமே ஒளிந்திருப்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
ஈரத் துணியில் சிசு 'சுருட்டல்':
இந்த கிராமங்களில் பெண் குழந்தை பிறந்ததும் அதற்கு தாய்ப்பால் கொடுக்க மாட்டார்களாம். பிறந்து ஒன்றிரண்டு நாட்களே ஆன குழந்தைகளை ஈரத்துணியில் சுருட்டி வைத்து விடுவார்களாம். இந்த கொடூரத்தால், சில மணி நேரங்களிலேயே அந்தப் பச்சிளம் சிசு பரிதாபமாக இறந்து போய் விடும்.
அதன்பின்பு அந்த குழந்தைகளை வீட்டின் பின்புறமோ அல்லது ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடமாக பார்த்தோ புதைத்து விடுவார்களாம்.
தமிழகத்திலேயே வேலூர் மாவட்டத்தில்தான் தற்போது பெண் சிசுக் கொலை அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த 2001முதல் 2006 வரை இந்த மாவட்டத்தில் 1612 பெண் சிசுக்கள் கொல்லப்பட்டுள்ளன.
இதைத் தடுக்க சமூகநல அதிகாரிகளும், சுகாதார அதிகாரிகளும் நடவடிக்கை எடுத்து வருகின்றனராம். ஆனால் இதுவரை அவர்கள் எடுத்த முயற்சிக்கு கிராம மக்கள் யாருமே ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்பதுதான் வேதனையிலும் வேதனை.
நன்றிங்க
//இந்த கிராமங்களில் பெண் குழந்தை பிறந்ததும் அதற்கு தாய்ப்பால் கொடுக்க மாட்டார்களாம்.//
என்ன அநியாயமய்யா இது?
2 comments:
நீங்கள் வறுமைக்குப் பயந்து உங்களுடைய குழந்தைகளைக் கொலை செய்யாதீர்கள்; அவர்களுக்கும் உங்களுக்கும் நாமே உணவை (வாழ்க்கை வசதிகளையும்) அளிக்கின்றோம் - அவர்களைக் கொல்லுதல் நிச்சயமாகப் பெரும் பிழையாகும். (அல்குர்ஆன்: 17:31)
அவர்களில் ஒருவனுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது என்று நன்மாராயங் கூறப்பட்டால் அவன் முகம் கறுத்து விடுகிறது - அவன் கோபமுடையவனாகிறான். (அல்குர்ஆன்: 16:58)
எவர்கள் அறிவில்லாமல் மூடத்தனமாக தம் குழந்தைகளைக் கொலை செய்தார்களோ இன்னும் தங்களுக்கு அல்லாஹ் உண்ண அனுமதித்திருந்ததை அல்லாஹ்வின் மீது பொய் கூறி (ஆகாதென்று) தடுத்துக் கொண்டார்களோ, அவர்கள் வழிகெட்டு விட்டனர், நேர்வழி பெற்றவர்களாக இல்லை. (அல்குர்ஆன்: 6:140)
"வாருங்கள்! உங்கள் இறைவன் உங்கள் மீது விலக்கியிருப்பவற்றையும் (ஏவியிருப்பவற்றையும்) நாம் ஓதிக் காண்பிக்கிறேன்; எப்பொருளையும் அவனுக்கு இணையாக வைக்காதீர்கள்; பெற்றோர்களுக்கு நன்மை செய்யுங்கள்; வறுமைக்குப் பயந்து உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள் - ஏனெனில் உங்களுக்கும், அவர்களுக்கும் நாமே உணவளிக்கின்றோம்; வெளிப்டையான இரகசியமான மானக்கேடான காரியங்களை நீங்கள் நெருங்காதீர்கள்; அல்லாஹ் தடுத்துள்ள எந்த ஓர் ஆத்மாவையும் நியாயமானதற்கு அல்லாமல் - கொலை செய்யாதீர்கள் - இவற்றை நீங்கள் உணர்ந்து கொள்வதற்காக (இறைவன்) உங்களுக்கு (இவ்வாறு) போதிக்கின்றான். (அல்குர்ஆன்: 6:151)
அர் ரஹ்மானுக்கு அவர்கள் எதனை ஒப்பாக்கினார்களோ அதை (அதாவது பெண் குழந்தையை) கொண்டு அவர்களில் ஒருவனுக்கு நற்செய்தி கூறப்படும்பொழுது அவனுடைய முகம் கருத்துப் போய்விடுகின்றது. மேலும் அவன் கோபம் நிரம்பியவனாகவும் ஆகிவிடுகின்றான். (அல்குர்ஆன்: 43:17)
எனவே, நீங்கள் நிராகரித்தீர்களானால், குழந்தைகளையும் நரைத்தவர்களாக்கும் அந்த நாளிலிருந்து எவ்வாறு தப்பிக்க போகிறீர்கள். (அல்குர்ஆன்: 73:17)
Jafar Safamarva உங்கள் வரவுக்கு, பதிவுக்கு பொருத்தமான அல்குர்ஆன் வசனங்களை பதிவு செய்தமைக்கும் நன்றிகள்.
Post a Comment