Thursday, August 23, 2007

ஹனீப் மீண்டும் ஆஸ்திரேலியாவில் பணிபுரியலாம்

ஹனீப் மீண்டும் ஆஸ்திரேலியாவில் பணிபுரியலாம்

மெல்போர்ன், ஆக. 23: டாக்டர் முகமது ஹனீப் ஆஸ்திரேலியாவில் பணிபுரிய விரும்பினால் மீண்டும் பதிவு செய்து கொள்ளலாம் என அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் ஸ்டீபன் ராபர்ட்சன் புதன்கிழமை தெரிவித்தார்.

ஹனீபின் விசா ரத்து செய்யப்பட்டது செல்லாது என நீதிமன்றம் அறிவித்துள்ள நிலையில், சுகாதார அமைச்சரின் கருத்து ஹனீப் மீண்டும் ஆஸ்திரேலியாவில் பணிபுரிவதற்கான வாய்ப்பை அதிகரித்திருக்கிறது.

லண்டன் தீவிரவாதச் சதிக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறி கடந்த மாதம் 2-ம் தேதி டாக்டர் ஹனீப் ஆஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டார். அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியபோதும், அவரது விசா ரத்து செய்யப்பட்டதால், அவர் 25 நாள் தனிமைச் சிறையில் இருக்க நேர்ந்தது.

அதன்பிறகு, ஹனீப் மீதான குற்றச்சாட்டை அரசு திரும்பப் பெற்றுக்கொண்டு, அவரை வலுக்கட்டாயமாக இந்தியாவுக்கு அனுப்பி வைத்தது.

இதற்கிடையே, விசா ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து ஹனீப் தொடர்ந்த வழக்கில் செவ்வாய்க்கிழமை தீர்ப்பு வழங்கப்பட்டது. ஹனீபின் விசாவை ரத்து செய்த குடியமர்வுத்துறை அமைச்சர் கெவின் ஆண்ட்ரூஸின் உத்தரவு செல்லாது என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்நிலையில், "ஹனீப் மீண்டும் ஆஸ்திரேலியாவில் பணிக்குத் திரும்பினால் மகிழ்ச்சியடைவேன். அவரை வரவேற்கத் தயாராக இருக்கிறோம்' என அமைச்சர் ஸ்டீபன் ராபர்ட்ஸ்ன் தெரிவித்துள்ளார்.

அடுத்தமாதம் இதற்காக ஆஸ்திரேலிய சுகாதாரத்துறையில் ஹனீப் பதிவு செய்து கொள்ளலாம் எனவும் ராபர்ட்ஸன் கூறியுள்ளார்.

விசாரணை விவரம் வெளியீடு:இதற்கிடையே, ஹனீபிடம் ஆஸ்திரேலிய போலீஸôர் நடத்திய விசாரணையின் விவரங்களை அவரது வழக்கறிஞர் பீட்டர் ரூசோ புதன்கிழமை வெளியிட்டார்.

ஹனீப் கேட்டுக் கொண்டதற்கு இணங்க இந்த விசாரணையில் சில குறிப்பிட்ட தகவல்களை வெளியிட்டுள்ளதாக பீட்டர் ரூசோ கூறினார்.

"தன்மீது ஆஸ்திரேலிய போலீஸôர் சுமத்திய குற்றச்சாட்டுகளும் அதற்கு தான் அளித்த விளக்கங்களும் பொதுமக்களுக்குத் தெரிய வேண்டும் என ஹனீப் விரும்பினார். அவரது பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதற்கு தொடர்ந்து நடக்கும் முயற்சிகளை முறியடிப்பதற்கு இது உதவும் என அவர் கருதுகிறார்.

தனது சகோதரருடன் இணைய அரட்டை அறை (சாட் ரூம்) வழியாக பேசியது குறித்து விசாரணை முடிவடையும் நிலையில்தான் ஹனீபிடம் கேட்கப்பட்டுள்ளது.

இணைய அரட்டையில் பேசிய தகவல்களின் மொழி மாற்றத்தை திருத்த முயன்றதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் தவறானவை என போலீஸôரே ஒப்புக் கொண்டுள்ளனர்.

இந்த இணைய அரட்டை ஜூலை 2-ம் தேதி மாலை 4.13 மணிக்குத் தொடங்கியதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் அந்த நேரத்தில் ஹனீப் மருத்துவமனையில் இருந்திருக்கிறார்.

சபீல் அகமதுவிடம் கொடுத்த சிம் கார்டு குறித்து தெரிந்து கொள்வதற்காக லண்டனில் உள்ள துப்பறியும் நிபுணர் டோனி வெப்ஸ்டரிடம் ஹனீப் 3 முறை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயற்சி செய்திருக்கிறார். அவரைத் தொடர்பு கொள்ள முடியாததால் ஜூலை 2-ம் தேதி மாலை 4.32 மணிக்கு சபீலுடன் பேசும்போது இது பற்றிக் கேட்டிருக்கிறார்.

இந்த விவகாரத்தில் தன்னுடைய நிலையை தெளிவுபடுத்த வேண்டும் என்பதால்தான இந்தத் தகவல்களையெல்லாம் போலீஸôரிடம் ஹனீப் கூறியிருக்கிறார். ஆனால் இணைய அரட்டையின் சில தகவல்களை மட்டும் வைத்துக்கொண்டு போலீஸôர் ஹனீப் மீது குற்றம்சாட்ட முற்பட்டிருக்கின்றனர்.

உண்மையில் விசாரணையில் போலீஸாருக்கு உதவவே ஹனீப் எல்லா நேரத்திலும் முயற்சி செய்திருக்கிறார். இந்த விசாரணைத் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளதால், ஹனீப் எதையும் மறைக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது' என்றார் ரூசோ.

நன்றிங்க

ஆஸ்திரேலியா அரசும், நீதிமன்றமும் எவ்வளவு துரிதமாக செயல்படுகின்றன. நம்மூரிலும் இருக்கே, ம்ஹும்...

No comments: