தென்காசியில் பதட்டம் தணியவில்லை!
பாதுகாப்பு பணியில் விஜயகுமார்-1500 போலீசார்!
ஆகஸ்ட் 16, 2007
தென்காசி: தென்காசியில் இரு சமூகத்தினர் மோதிக் கொண்டு 6 பேர் பலியானதையடுத்து ஏற்பட்ட பதற்றம் தணிய ஆரம்பித்துள்ளது. அங்கு இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது.
சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி விஜயகுமார் தலைமையில் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தென்காசி பஜாரில் கடந்த 14ம் தேதி இந்து முன்னணியைச் சேர்ந்தவர்களும், தமிழக முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர்களும் பயங்கர ஆயுதங்களுடன் மோதிக் கொண்டதில் இரு தரப்பிலும் தலா 3 பேர் வெட்டிக் கொல்லப்பட்டனர்.
இதனால் தென்காசி முழுவதும் கடைகள் அைடக்கப்பட்டன. அங்கு போலீஸார் குவிக்கப்பட்டனர். தென்காசி நிலவரத்தை நேரில் பார்வையிட விஜயகுமார் தென்காசி வந்தார். கொலை நடந்த பகுதிகளை பார்வையிட்டார். பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:
தென்காசியில் நடந்த சம்பவம் பழிக்கு பழியாக நடந்த கொலைகள்தான். இதில் படுகாயம் அடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அரசு மேலும் இங்கு பதட்டம் ஏற்படுவதை தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.
எனது தலைமையில் தென் மண்டல ஐ.ஜி. சஞ்சீவ் குமார், நெல்லை சரக டி.ஐ.ஜி கண்ணப்பன், எஸ்.பி ஸ்ரீதர் ஆகியோர் முகாமிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்து வருகின்றனர்.
இவர்களது கண்காணிப்பின் கீழ் 3 மாவட்ட எஸ்.பிக்கள், 16 டி.எஸ்.பிக்கள், கமாண்டோ படை உள்பட 1,500 போலீசார் குவிக்கப்பட்டு அசம்பாவிதங்கள் ஏற்படாத வண்ணம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இன்னும் 500 போலீசார் தென் மாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளனர்.
பகையை தீர்க்க 2 பிரிவினரும் மோதினர். இது மத பிரச்சனை அல்ல. இரு மத மக்களும் தங்களுக்கு இதில் சம்பந்தம் இல்லை என்று கூறியுள்ளனர். அதனை காவல் துறை ஏற்றுக் கொண்டுள்ளது. ஏற்கனவே நடந்த கொலைக்கு பழிக்கு பழியாக நடந்ததுதான் இது.
மேலும் அசம்பாவிதங்களை தடுத்திட மேலப்பாளையம், கடையநல்லூர் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வழக்கம்போல் பள்ளிகள், கடைகள் திறக்கப்படும். போக்குவரத்து நடைபெறும். குற்றவாளிகள் யாராக இருந்தாலும் கைது செய்வோம். பல தகவல்கள் கிடைத்துள்ளது. விசாரணை நடந்து வருகிறது.
கொலையில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய தனி போலீஸ் படை அமைக்கப்பட்டுள்ளது.
விரைவில் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்படுவர். தனிப் படையினர் பல குழுக்களாக பிரிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
டி.ஐ.ஜி, எஸ்.பி ஆகியோர் அமைதி ஏற்பட நடவடிக்கை எடுத்துள்ளனர். வர்த்தகர்களும் கடைகளை திறக்க தொடங்கியுள்ளனர் என்றார்.
நேற்று 2-வது நாளான சுதந்திர தினத்தன்றும் பொது மக்கள் நடமாட முடியாத நிலை ஏற்பட்டது. கிராமங்களுக்கு முற்றிலும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.
கொல்லப்பட்ட குமார் பாண்டியனின் சகோதர்கள் சேகர், சுரேஷ், செந்தில் ஆகியோரின் உடல்களை வாங்க அவரது தந்தை மறுத்து விட்டார்.
பஷீர், நாகூர் மீரான், அசன் கனி ஆகிய 3 பேர் உடலையும் த.மு.மு.க மாவட்ட தலைவர் மைதீன் சேட்கான் தலைமையில் வந்து அவரது உறவினர்கள் பெற்றுச் சென்றனர்.
பின்னர் நேற்று காலை 11 மணியளவில் தென்காசி மாவட்ட மருத்துவமனையில் குளிரூட்டப்பட்ட அறையில் வைக்கப்பட்டிருந்த குமார் பாண்டியனின் சகோதரர்கள் உடலை அவரது குடும்பத்தினர் பெற்றுக் கொண்டனர். பின்பு இலஞ்சி ரோட்டில் உள்ள சுடுகாட்டுக்கு உடல் கொண்டு செல்லப்பட்டது.
அங்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், ஆர்.டி.ஓ, தாசில்தார், மற்றும் 300 மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். குமார் பாண்டியன் தம்பி சக்தி பாண்டியன் என்பவரை ஒரு போலீஸ் வேனில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புடன் இடுகாட்டுக்கு அழைத்து வந்தனர். இப்பகுதியில் போக்குவரத்து அடியோடு நிறுத்தப்பட்டது.
அங்கு முன்னாள் மத்திய பாஜக அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உடல்களுக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் அவர் கூறுகையில்,
தென்காசியில் 6 பேர் கொலையுண்டதற்கு முழுக்க முழுக்க தமிழக அரசே காரணம். முறையான நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் அசம்பாவிதங்கள் தடுக்கப்பட்டிருக்கும். உளவுத்துறை எச்சரித்தும் அரசு மெத்தனமாக இருந்துள்ளது. இது அரசின் தவறு.
நாங்கள் தவறை சுட்டி காட்டி பேசினால் கலவரத்தை துண்டுவதாக கூறி வாய்ப்பூட்டு போட்டுவிடுகிறார்கள். தமிழகத்தில் சட்டம் ஓழுங்கு மோசமாக உள்ளத்தையே இச்சம்பவம் காட்டுகிறது. இறந்தவர்களுக்கு அரசிடம் நிதியுதவி கேட்க தயாரில்லை. அவர்களிடம் தேவையான அளவு நிதி உள்ளது என்றார்.
இவ்வழக்கில் அலாவுதீன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் செந்தில், கபிலன், சக்தி பாண்டியன், சுப்பிரமணியன், சுரேந்தர், முத்து, சேகர், மாலையப்பன், சண்முகம், மற்றொரு சேகர், ஆட்டோ ரமேஷ், பிஸ்தா மணி, செண்பகம் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதில் சக்தி பாண்டியன், இந்து முன்னணி தலைவர் ஆவார். வெட்டிக் கொல்லப்பட்ட குமார் பாண்டியனின் அண்ணன் ஆவார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் சக்தி பாண்டியனும், பிஸ்தா மணியும் நேற்று இரவு கைது செய்யப்பட்டனர்.
அதேபோல சக்தி பாண்டியன் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் ஹனிபா, அப்துல்லா, அலாவுதீன், அசன்கனி, அபு, ராஜா முகமது, செய்யதலி, மீரான் முகைதீன், நவாஸ், நாகூர் மீரான், சம்சுதீன், பசுலுதின், ஜின்னா மகன் மற்றும் தொழில் அதிபர் ரகுமான் பாட்ஷா, ஹாஜி முஸ்தபா நிறுவனங்களின் உரிமையாளர் கமால் முகைதீன் ஆகியோரையும் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சக்தி, பிஸ்தா மணி, அனிபா, அலாவுதீன் ஆகியோர் நேற்றிரவு தென்காசி ஜூடிசியல் மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். இவர்களை வரும் 30ம் தேதிவரை காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கடையநல்லூர், செங்கோட்டை, மேலப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந் நிலையில் இன்று தென்காசியில் சில கடைகள் திறக்கப்பட்டன. போக்குவரத்தும் சீராகி வருகிறது. இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது.
பலியானவர்கள் குடும்பத்திற்கு அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் பிரகாஷ் இன்று நிதி வழங்க உள்ளார்.
நன்றிங்க
என்னத்தே சொல்ல...?
No comments:
Post a Comment