Friday, October 05, 2007

இந்தியாவிலேயே மிகப்பெரிய புலி...

இந்தியாவிலேயே மிகப்பெரிய புலி களக்காடு மலையில் உள்ளது

வெள்ளிக்கிழமை, அக்டோபர் 5, 2007

திருநெல்வேலி:

இந்தியாவிலேயே மிகப்பெரிய புலி களக்காடு மலையில்தான் உள்ளது என்று டேராடூன் வன உயிரின மைய ஆராய்ச்சியாளர் கே.சங்கர் தெரிவித்தார்.

களக்காடு-முண்டந்துறை வனப்பகுதியில் புலிகள் உள்ளதா இல்லையா என்று நீண்ட நாட்களாக சர்ச்சை நிலவி வந்தது. இதற்காக வனப்பகுதியில் 40க்கும் மேற்பட்ட இடங்களில் நவீன கேமராக்கள் வைக்கப்பட்டு கண்காணித்ததில் தற்போது புலிகள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக டேராடூனில் உள்ள வன உயிரின மைய ஆராய்ச்சியாளர் கே.சங்கர் நேற்று நெல்லை வந்தார். அவர் பாளையங்கோட்டை பெருமாள்புரத்தில் உள்ள மாவட்ட வன அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்ததில் கூறியதாவது,

இந்தியா முழுவதும் புலிகள் வாழும் பகுதிகளில் கடந்த 2005ம் ஆண்டு முதல் புலிகளின் எண்ணிக்கை பற்றிய கணக்கெடுக்கும் பணியை தொடங்கினோம். இந்த கணக்கெடுப்பு பணியை 4 கட்டங்களாக பிரித்து செயல்படுத்தப்பட்டது.

இந்த அடிப்படையில் தான் தமிழ்நாட்டில் களக்காடு-முண்டன்துறை புலிகள் காப்பகத்தில் மயிலாறு, கன்னிகட்டி ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய 80 சதுர கிலோ மீட்டர் பரப்பரளவை தேர்ந்து எடுத்து கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் எங்கள் பணியை தொடங்கினோம்.

தற்போது 2ம் கட்ட பணிகள் முடிந்து 3ம் கட்ட பணியான காமிரா மூலம் கண்காணித்து புலிகளின் எண்ணிக்கையை கணக்கெடுத்து வருகிறோம். இதற்காக நாங்கள் இப்பகுதியில் தேர்ந்தெடுத்துள்ள 80 சதுர கிலோ மீட்டர் வனப்பகுதியில் 40 அதிநவீன காமிரக்களை பொருத்தி உள்ளோம். புலிகள் நடமாட்டம் அதிகம் உள்ள சில பகுதிகளில் மேலும் 22 காமிரக்களை வைத்துள்ளோம்.

இவ்வாறு தொடர்ச்சியாக படம் எடுத்ததில் களக்காடு-முண்டன்துறையில் எங்களுடைய ஆராய்ச்சி பகுதியில் 8 வயது உள்ள ஆண் புலி ஒன்று நடமாடுவது கண்டறியப்பட்டு உள்ளது. இது எங்கள் போட்டோவில் பதிவாகி உள்ளது.

இந்த புலி மிகப் பெரிய அளவில் கம்பீரமாக உள்ளது. மிகவும் ஆரோக்கியமாக, ஆஜானபாகுவாக இருக்கிறது. நான் பார்த்த வகையில் இந்தியாவில் மிகப்பெரிய புலி இதுவாகத்தான் இருக்கும்.

இது தவிர 4 சிறுத்தை புலிகளும் கண்டறியப்பட்டு உள்ளது. இதில் 3 ஆண் சிறுத்தைகளும், 1 பெண் சிறுத்தையும் உள்ளன.

ஆய்வுப்பகுதி அல்லாத இடமான திருக்குறுக்குடி ஏரியா வீரப்புலி பீட் பகுதியில் ஒரு பெண் புலி இருப்பது தெரியவந்துள்ளது. அதுவும் காமிராவில் இடம் பெற்று உள்ளது.

இந்த புலியை தவிர 6 சிறுத்தை புலிகளும் இங்கு உள்ளது. அதில் 5 ஆண் சிறுத்தைகளும், 1 பெண் சிறுத்தையும் அடங்கும்.

2005ம் ஆண்டில் களக்காடு-முண்டன்துறை புலிகள் காப்பகத்தில் 29 புலிகள் இருந்தது. தற்போது இதன் எண்ணிக்கை கூடி இருக்கிறதா என்பதை எங்களின் கணக்கெடுப்பு பணி முடிந்தபின்னர் தான் தெரியவரும்.

களக்காடு பகுதியில் இன்னும் 2 வாரங்களில் எங்கள் பணி முடிவடைந்து விடும். வருகிற டிசம்பர் மாதம் எங்களது அறிக்கையை கொடுக்க இருக்கிறோம்.

4 கட்ட பணி என்பது மிகப் பெரிய பொருட்செலவாகும். அந்த பணிக்கு களக்காடு-முண்டன்துறை பகுதி முக்கிய இடத்தை பிடிக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.

இந்தியா முழுவதும் நடைபெற்று வரும் இந்த கணக்கெடுப்பு பணிக்கு மத்திய அரசு ரூ. 4 கோடி ஒதுக்கி உள்ளது. இந்த பகுதியில் இருக்கும் மக்கள் விலங்குகளை அதிகம் நேசிக்கிறார்கள். தென்னிந்தியாவில் விலங்குகளை வேட்டையாடுவது இல்லை என்று அவர் கூறினார்.

நன்றிங்க

2005ம் ஆண்டில் இருந்த 29 புலிகளில், இப்போது 8 வயதிலொரு ஆண் புலி இருப்பதாகவும், வீரப்புலி பீட் பகுதியில் ஒரு பெண் புலியும் இருப்பதும் தெரியவந்துள்ளது என்று அறிவிக்கிறார்கள். பாக்கி புலிகள் எங்கே போச்சு? இந்த இரண்டு வருஷத்தில் அதுக போட்ட குட்டிகள் என்ன ஆச்சு?

//இந்த பகுதியில் இருக்கும் மக்கள் விலங்குகளை அதிகம் நேசிக்கிறார்கள்.//

ஆமா... பாய்ந்து கடிக்கும் வரை நேசிப்பார்கள்...!

No comments: