Saturday, October 27, 2007

தமிழகத்தில் மழை 3 பேர் பலி.

03. 48 மணி நேரத்துக்கு மழை நீடிக்கும்: இதுவரை 3 பேர் பலி

சென்னை : வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததை தொடர்ந்து பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 48 மணி நேரத்திற்கு நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. கடும் மழைக்கு இதுவரை 3 பேர் பலியாகியுள்ளனர்.

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பெய்த மழையின் அளவு விவரம்: வலங்கைமான், திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, உதகமண்டலம் ஆகிய இடங்களில் ஆறு செ.மீ., மழை பெய்துள்ளது. விருத்தாசலம், கும்பகோணம், திருவையாறு, நாகப்பட்டினம், சீர்காழி, திருத்தணி, செஞ்சி, பெரம்பலூர், புல்லாம்பாடி ஆகிய இடங்களில் ஐந்து செ.மீ., மழை பெய்துள்ளது. தஞ்சாவூர், பாபநாசம், முத்துப் பேட்டை, ராதாபுரம், முசிறி ஆகிய இடங்களில் நான்கு செ.மீ., மழையும் பொன்னேரி, காஞ்சிபுரம், மதுராந்தகம், தொழுதூர், திருக்காட் டுப்பள்ளி, வேதாரண்யம், திண்டிவனம், கள்ளக்குறிச்சி, உளுந்தூர் பேட்டை, செய்யூர், போளூர், வந்தவாசி, மேட்டுப்பாளையம், சூளூர், திருப்பூர், லால்குடி ஆகிய இடங்களில் மூன்று செ.மீ., மழையும் பெய்துள்ளது.

இரண்டு பேர் பலி: கடலூர் மாவட்டம் முழுவதும் தொடர் மழையால் 26 ஆயிரம் எக்டேர் நெற்பயிர்கள் மூழ்கியுள்ளன. மணிமுத்தாறு, வெள்ளாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. சிதம்பரம் அடுத்த கொள்ளிடம் அருகே சாலையை துண்டித்து தண்ணீரை வடிய செய்தனர். சேத்தியாதோப்பு, கும்பகோணம் சாலையில் மருவாய் அருகே 12 கி.மீ., சாலை அதிகளவு சேதமடைந்துள்ளது. குறிஞ்சிப்பாடி அருகே கல்வெட்டு பாலம் அடியில் தேங்கியிருந்த மழை நீரில் மூழ்கி சிவசங்கரன்(6) என்ற சிறுவன் இறந்தார். கடலூர் அடுத்த நாணமேடு கிராமம் சுப உப்பலவாடி கிராமத்தில் உள்ள தரைப் பாலம் அருகே குளித்த போது சுரேந்திரன் என்பவர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு இறந்தார்.

மண்சரிவில் பெண் பலி: நீலகிரி மாவட்டத்தில் அதிகபட்சமாக, கேத்தியில் 106 மி.மீ., மழை பதிவாகியது. ஊட்டியில் 50.2 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. மாவட்டத்தில் சராசரியாக 715 மி.மீ., மழை பெய்துள்ளது. நேற்று முன்தினம் இரவு ஊட்டியில் கனமழை பெய்ததால், மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. நேற்று அதிகாலை 2.00 மணியளவில் ஊட்டி அருகேயுள்ள தலையாட்டுமந்து பகுதியில் மண்சரிவு ஏற்பட்டது. இதில், வீடு தரைமட்டமானது. வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த கோவிந்தம்மாள் (38) மண்ணில் புதைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். கோவிந்தம்மாளின் இரு குழந்தைகள் நாகமணி (12), நாக சபரீசன் (9) ஆகியோர் உயிர் தப்பினர். மண் சரிவு காரணமாக, குன்னூர் - ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில்,6மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

என்.எல்.சி.,யில் நிலைமை சீராகவில்லை: தொடர் மழையால் நெய்வேலி முதல் சுரங்கம், முதல் சுரங்க விரிவாக்கம், இரண்டாவது சுரங்கம் மற்றும் விரிவாக்கம் பகுதிகளில் மழை வெள்ளம் தேங்கியுள்ளது.மழையால் நிலக்கரி முதல் அனல் மின் நிலையம் விரிவாக்கம் மற்றும் இரண்டாவது அனல் மின் நிலையம் உற்பத்தி பகுதிகளுக்கு நிலக்கரி அனுப்ப முடியவில்லை. இதனால் அனைத்து மின் உற்பத்தி நிலையங்களிலும் மின்உற்பத்தி குறைந்து வருகிறது. நேற்று ஆயிரம் மெகாவாட் மட்டுமே மின்உற்பத்தி செய்யப் பட்டது. நிலைமை சீரடைய இரண்டு அல்லது மூன்று நாட்கள் ஆகும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

வெள்ள நிவாரணம் கணக்கெடுக்க முதல்வர் உத்தரவு : தமிழகத்தில் மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை நேரில் பார்வையிடவும், சேத விவரம் குறித்து அரசுக்கு அறிக்கை சமர்பிக்கவும், 13 மாவட்டங்களுக்கு அமைச்சர்களை நியமித்து முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.

தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிக்கை: வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதை அடுத்து, கடலோர மாவட்டங்கள் உட்பட பல மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. வெள்ள நிவாரண பணிகளை அமைச்சர்கள் பார்வையிட முதல்வர் உத்தரவிட்டுள்ளார். பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் உடனடி நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டு பணிகளை விரைவுபடுத்திடவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறவும், மனித உயிர்களுக்கும், கால்நடைகளுக்கும், பயிர் வகைகளுக்கும் ஏற்பட்டுள்ள சேத விவரங்களை மதிப்பிட்டு அரசுக்கு அறிக்கை வழங்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.

தஞ்சை மாவட்டம்-கோ.சி.மணி, உபய துல்லா, விழுப்புரம் மாவட்டம்- பொன்முடி, கடலூர் மாவட்டம்- எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், கோவை மாவட்டம்-பொங்கலூர் பழனிச்சாமி, காஞ்சிபுரம் மாவட்டம்- தா.மோ.அன்பரசன், கன்னியாகுமரி மாவட்டம்- சுரேஷ்ராஜன், ராமநாதபுரம் மாவட்டம்- சுப.தங்கவேலன், ஈரோடு மாவட்டம்- ராஜா, திருநெல்வேலி மாவட்டம்- பூங்கோதை, தூத்துக்குடி மாவட்டம்- கீதா ஜீவன், திருவள்ளூர் மாவட்டம்- சாமி, திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் மதிவாணன் ஆகியோர் நேரில் பார்வையிடுவர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர்கள் இன்று முதல் பார்வையிட உள்ளனர். நிவாரணப் பணிகள் மற்றும் சேத மதிப்பு குறித்த கணக்கெடுப்பு பணிகளும் ஒருவாரம் வரை நடைபெறலாம் . அதன்பிறகு சேத மதிப்பு குறித்த அறிக்கை முதல்வரிடம் வழங்கப்படும். அதன் அடிப்படையில் வெள்ள நிவாரண தொகையை வழங்க முதல்வர் உத்தரவிடுவார்.

நன்றிங்க, தினமலர் 28/10/2007

பொதுவானவை

No comments: