05. பொதுமக்கள் முன் வாலிபருக்கு நடந்த சித்ரவதை : கொடூர செயல்புரிந்த போலீசாருக்கு சர்டிபிகேட்
பாட்னா: பீகாரில், பெண்ணிடம் நகை திருட முயன்று, பொதுமக்களால் கடுமையாக தாக்கப்பட்ட வாலிபரை, மோட்டார் சைக்கிளில் கட்டி இழுத்துச்சென்று சித்ரவதை செய்த
போலீஸ் அதிகாரிகளுக்கு அம்மாநில சட்டசபை குழு நற்சான்றிதழ் அளித்துள்ளது. அவர்களை, மீண்டும் பணியமர்த்த பரிந்துரை செய்துள்ளது.
பீகார் மாநிலம், பகல்பூர் அருகில் உள்ள நாத்நகரில், கோவில் முன் ஒரு பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற முகமது அவுரங்கசிப் என்ற வாலிபரை பொதுமக்கள் அடித்து உதைத்து கடுமையாக தாக்கினர். அங்கு விரைந்த உதவி எஸ்.ஐ.,எல்.பி.சிங் மற்றும் கான்ஸ்டபிள் ராமச்சந்திர ராய் ஆகியோர் பொதுமக்களுடன் சேர்ந்து அவுரங்கசிப்பை தாக்கியதோடு, அவரை மோட்டார் சைக்கிளில் கட்டி சில அடி தூரம் இழுத்துச் சென்றனர். மயக்கமடைந்த அவுரங்கசிப்பை மாட்டுவண்டியில் போட்டு பின்பு எடுத்துச் சென்றனர்.
இதை `டிவி' சேனல்கள் படம் பிடித்து ஒளிபரப்பின. போலீசாரே அத்துமீறலில் ஈடுபட்டதற்கு நாடு முழுவதும் மனித உரிமை அடிப்படையில் கண்டனம் எழுந்தது. இதைத்தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்ட போலீசார் இருவரும் பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இச்சம்பவம் குறித்து விசாரிக்க மார்க்சிஸ்ட் கட்சியின் பாசுதேவ் பிரசாத் சிங் தலைமையில் ஐந்து பேர் கொண்ட சட்டசபை குழு அமைக்கப்பட்டது. இக்குழுவின் தலைவர் பாசுதேவ் பிரசாத் சிங், போலீசார் இருவருக்கும் நற்சான்றிதழ் வழங்குவதாக தெரிவித்தார். அவர் கூறியதாவது: அவுரங்கசிப்பை பொதுமக்களிடம் இருந்து காப்பாற்றுவதற்காகத்தான் போலீசார் இருவரும் முயற்சித்தனர். அவுரங்கசிப்பை மோட்டார் சைக்கிளில் பொதுமக்கள் தான் கட்டி உள்ளனர். தொடர்ந்து அவர் தாக்கப்படுவதை தடுப்பதற்காகத் தான் மோட்டார் சைக்கிளை அவர் ஓட்டத்துவங்கினார்.
சிறிது தூரத்துக்கு மட்டுமே அவுரங்கசிப் இழுத்துச்செல்லப்பட்டார். எனவே போலீசாருக்கு சட்டசபை குழு நற்சான்றிதழ் வழங்குகிறது. போலீசார் மீது முழுமையாக எந்த தவறும் இல்லை என்று நாங்கள் சொல்லவில்லை. அதற்காக பணியில் இருந்தே நீக்குவது என்பது மிகப்பெரிய தண்டனை. அது அவர்களுக்கு அளிக்கப்படும் மனித உரிமை மீறல். எனவே, அவர்களை எச்சரித்தோ அல்லது ஒரு சம்பள உயர்வை ரத்து செய்துவிட்டோ மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு பாசுதேவ் பிரசாத் சிங் கூறினார்.
சட்டசபை குழுவின் பரிந்துரை குறித்து வியப்பும் அதிர்ச்சியும் தெரிவித்துள்ள மத்திய ரயில்வே அமைச்சரும், பீகார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ், `சம்பவத்தை `டிவி' சேனல்கள் அப்பட்டமாக ஒளிபரப்பின. அதில் போலீசார் இருவரும் நடந்து கொண்ட கொடூரம் தெளிவாகப் படம்பிடிக்கப்பட்டுள்ளது' என்று கூறியுள்ளார்.
நன்றிங்க. தினமலர் 31/10/2007
அப்படி போடு...!
No comments:
Post a Comment