04.75 வயது கணவரிடம் சிக்கி விழிபிதுங்கும் 14 வயது சிறுமி:தப்பிக்க உதவிய அண்ணனுக்கும் சிக்கல்
மால்டா: மேற்கு வங்கத்தில், 14 வயது சிறுமியை, கத்தி முனையில் மிரட்டி 75 முதியவருக்கு திருமணம் செய்து வைத்தனர். தனது அண்ணன் உதவியுடன் தப்பிவந்த அந்த சிறுமியை, அவரது பெற்றோரும், "கணவரும்' கடுமையாக துன்புறுத்தி வருகின்றனர். நியாயம் கிடைக்காமல், சிறுமியும் அவரது சகோதரரும் பீதியில் உள்ளனர்.
மேற்கு வங்க மாநிலம் மால்டாவை சேர்ந்தவர் 14 வயது சிறுமி அனாரஸ் கடூன். இவளது பெற்றோர் சையது அலி, லேட்புன் பீவி; கூலித் தொழிலாளர்கள். ஏழ்மையில் இருந்த இவர்களுக்கு துõபம் போட்டார் 75 வயது சாந்த் முகமது. அவரது பணத்துக்கு, அனாரசின் பெற்றோர் மயங்கிப்போயினர்.செப்டம்பர் 26ம் தேதி நள்ளிரவில், அனாரசை எழுப்பிய பெற்றோர், கத்தி முனையில் மிரட்டி, முதியவர் சாந்த் முகமதுக்கு, "நிக்கா' செய்து வைத்தனர். முஸ்லிம் முறைப்படி காஸி உசேன் என்பவர் இந்த திருமணத்தை செய்து வைத்தார்.திருமணமான மறுநாளே, தனது அண்ணன் மஜேதுர் ரகுமானின் உதவியுடன், சாந்த் முகமது வீட்டில் இருந்து தப்பினாள் அனாரஸ். நேராக போலீஸ் நிலையம் சென்று, புகார் மனு அளித்தாள். அதன் பிறகு நிலைமை படுமோசமானது.
பெற்றோர் ஆத்திரமடைந்தனர். மஜேதுர் ரகுமானையும் சிறுமி அனாரசையும் வீட்டை விட்டு துரத்தினர். மஜேதுர் ரகுமானின் மனைவியும் துரத்தியடிக்கப்பட்டார். புகார் மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இழுத்தடித்தனர் போலீசார். மால்டா போலீஸ் எஸ்.பி., மோண்டல் கவனத்துக்கு இது கொண்டு செல்லப்பட்டது. அவரது உத்தரவின் படி, உள்ளூர் போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர்.இதையடுத்து மால்டாவில் உள்ள உள்ளூர் கோர்ட்டில் சரண் அடைந்த சையது அலியும், லேட்புன் பீவியும் மறுநாளே ஜாமீனில் வெளிவந்துவிட்டனர். சிறுமி அனாரஸ் மீதும், அவரது அண்ணன் மஜேதுர் மீதும் போட்டி வழக்கு தொடர்ந்தனர். அனாரசின், "கணவர்' சாந்த் முகமதுவும் கோர்ட்டுக்கு போனார்.
அனாரசை அவரது அண்ணன் மஜேதுர் கடத்திச் சென்று விட்டதாக வழக்கு தொடர்ந்துள்ளார்.இந்த விஷயம் வெளியில் தெரியவந்ததும், உள்ளூர் கம்யூனிஸ்ட் தலைவர்கள், மாவட்ட அரசு செயலாளர் முதல், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஜிபன் மைத்ரா வரை கடிதம் எழுதிவிட்டனர். ஆனால், சமுதாய பிரச்னை:"இது சமுதாய பிரச்னை. எனவே, சமுதாய விழிப்புணர்வு மூலம் தான் இது போன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும்' என்று அனைவருமே கைகழுவி விட்டனர்.இப்போது, தனது தங்கை அனாரசுடன், மற்றும் மனைவியுடன் மால்டாவின் புறநகரில் உள்ள குடிசைப்பகுதியில், ஒரு சின்னஞ்சிறிய குடிசை வீட்டில் வசித்து வருகிறார் மஜேதுர்.
ஆட்டோ ரிக்ஷா ஓட்டுவது தான் மஜேதுரின் தொழில். அதில் வரும் சம்பாத்தியம், வாய்க்கும், வயிற்றுக்குமே சரியாக போகிறது. ஒரு வக்கீல் வைத்துக் கொள்ளக் கூட மஜேதுருக்கு வசதி இல்லை. பணபலம் மிக்க சாந்த் முகமதுவுடன் எப்படி போராடுவது என்ற பீதியில் உள்ளனர். அண்ணன் தங்கை இருவரும். மஜேதுரை தனிமைப்படுத்தும் வகையில், அனாரசை கடத்திச் சென்றதாக மஜேதுரின் நண்பர்கள் பலர் மீதும் வழக்கு தொடர்ந்துள்ளார் முதியவர் சாந்த் முகமது.
"என்னை திருமணம் செய்து கொண்ட சாந்த் முகமதுவின் கடைசி குழந்தை கூட என்னை விட வயதில் மூத்தவர். அவருடன் எப்படி வாழ முடியும். நிறைய பணம் வைத்துள்ள அவர், பல வகைகளிலும் எங்களுக்கு தொந்தரவு கொடுத்து வருகிறார். இதில் இருந்து எப்படி தப்பிக்கப் போகிறோம் என்பதே தெரியவில்லை,'' என்று கண்ணீர் விடுகிறார் அந்த அப்பாவிச் சிறுமி.
நன்றிங்க, தினமலர் 06/10/2007
திருமணத்திற்கு மணப் பெண்ணின் சம்மதம் மிகவும் அவசியம். மணப் பெண்ணின் சம்மதமில்லாமல் திருமணம் செய்தால் அத்திருமணம் செல்லாது.
இதையறியாத பெற்றேரும், திருமணத்தை நடத்திய காசி உசேன் என்பவரும் திருமணம் என்ற பெயரில் பலவந்தமாக ஒரு பெண்ணையடைய முயன்ற சந்து முகமதும் மூடர்கள் - குற்றவாளிகளே!
No comments:
Post a Comment