Thursday, October 25, 2007

04.தமிழ் வகுப்புக்கு ஆங்கிலத்தில் தேர்வு!?

04.தமிழ் மீடியம் படிக்கலாம்; ஆனால், ஆங்கிலத்தில் தேர்வு எழுதணும்:

மும்பையில் இப்படி ஒரு விசித்திர உத்தரவு

மும்பை: பத்தாம் வகுப்பு வரை, தமிழ் "மீடியத்தில்' படிக்கலாம்; ஆனால், அந்த ஆண்டு நடக்கும் பொதுத்தேர்வில் ஆங்கிலத்தில் தான் தேர்வு எழுத வேண்டும்! முதன் முறையாக, தமிழ் "மீடியம்' படிக்க, மூன்று செகண்டரி பள்ளிகளை ஆரம்பித்துள்ள மும்பை மாநகராட்சி கல்வித்துறை தான் இப்படி ஒரு விசித்திரமான உத்தரவை போட்டுள்ளது. தமிழ் மக்கள் கணிசமாக உள்ள மாதுங்கா, தாராவி, ஆரே காலனி ஆகிய பகுதிகளில், தமிழ் "மீடியம்' பள்ளி வேண்டும் என்று பல ஆண்டாக கோரிக்கை வைக்கப்பட்டு வந்ததற்கு இப்போது தான் விடிவு வந்துள்ளது. இந்த மூன்று பள்ளிகளிலும், 350 தமிழ் மாணவர்கள், தமிழ் "மீடியம்' எடுத்து படிக்கின்றனர்.

ஆனால், பள்ளிகள் திறந்தாலும், போதிய தமிழ் ஆசிரியர்கள் இல்லாததால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். பாட புத்தகங்களும் கூட சரிவர அளிக்கப்படவில்லை. இதுகுறித்து மாநகராட்சி துணை கமிஷனர் ஷிண்டே கூறுகையில், "ஏழை தமிழ் மாணவர்களுக்காக இந்த மூன்று பள்ளிகள் ஆரம்பிக்கப்பட்டன. இங்கு ,மாணவர்கள் தமிழ் "மீடியம்' படித்து வந்தாலும், பத்தாவது தேர்வில் அவர்கள் ஆங்கிலத்தில் தான் தேர்வு எழுதுவர்.

ஏழாவது வரை, தமிழ் மீடியம் படித்தாலும், எட்டாவதில் இருந்து அவர்கள் ஆங்கிலத்துக்கு மாறலாம். இல்லையெனில், பத்தாவது வகுப்புவரை தமிழ் மீடியத்தில் இருந்து விட்டு, தேர்வில் மட்டும் ஆங்கிலத்தில் எழுதவும் செய்யலாம்' என்றார். மும்பையில் இதுவரை, ஆரம்பப்பள்ளிகளில் மட்டும் தமிழ் பயிற்றுவிக்கப்பட்டு வந்தது. இப்போது தான் முதன் முறையாக, செகண்டரி பள்ளிகள் ஆரம்பிக்கப்பட்டு, தமிழ் "மீடியம்' வசதி செய்யப்பட்டுள்ளது.

கடந்தாண்டு, ஷெரான் உயர் நிலைப்பள்ளி உட்பட இரு பள்ளிகளில், தமிழ் மாணவர்கள், ஆங்கிலத்தில் பத்தாவது வகுப்பு பொதுத்தேர்வு எழுதினர். எல்லாரும் தோல்வி அடைந்துவிட்டனர். ஆனால், மாநகராட்சியோ, இப்போது, பத்தாவது வரை தமிழில் படித்துவிட்டு, அந்தாண்டு பொதுத்தேர்வை ஆங்கிலத்தில் எழுதச் சொல்வது, தமிழ் மாணவர்களுக்கு பெரும் பாதிப்பைத் தான் ஏற்படுத்தும் என்று பெற்றோர்கள் அஞ்சுகின்றனர். "பத்தாவது வகுப்பு பொதுத்தேர்வையும் தமிழில் நடத்தும்படி கோரிக்கை வந்துள்ளது. ஆனால், அது செயல்படுத்த முடியாதது. அப்படி ஒரு திட்டத்தை மாநகராட்சி பரிசீலிக்கவில்லை' என்று மாநகராட்சி கல்வி துறை அதிகாரிகள் சிலர் கூறினர்.

நன்றிங்க, தினமலர், 25/10/2007

பாவம் மாணவர்கள்! :(

No comments: