Friday, October 26, 2007

03. இன்டர்நெட் பயன்படுத்துவோர் உஷார்.

03. இன்டர்நெட் பயன்படுத்துவோர் உஷார்: அடையாளம் திருடி பெரும் மோசடி

புதுடில்லி: இணையதளங்களை பயன்படுத்துவோர் தங்களின் அடையாளம் திருட்டுப் போவதால், பெரும் பொருள் இழப்புடன், மன உளைச்சலுக்கும் ஆளாக நேரிடுகிறது.

செய்யாத குற்றத்துக்கு சில சமயங்களில் அவர்களே பொறுப்பேற்க நேரிடுகிறது. வளர்ந்த நாடுகளிலும், வளரும் நாடுகளிலும், இணையதளங்களில் அடையாள திருட்டு அதிகரித்து வருகிறது. அடையாள திருட்டு மூலம் மோசடி செய்வதாக, இணையதளம் பயன்படுத்துவோரில் 37 சதவீதம் பேர் புகார் செய்துள்ளனர். இந்தியாவை பொறுத்தவரை, ஆர்குட், டக்கெட், எச்.ஐ., 5 போன்ற இணையதளங்களை சாட்டிங்குக்கு பயன்படுத்துவோர் மற்றும் இ-மெயில் பெறுவோரின் அடையாளங்கள் அதிகளவில் திருடப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

இணைய தளங்களை பயன்படுத்துவோரின் தனிப்பட்ட ரகசியங்களை அறிந்து கொண்டு, அதன் மூலம் பெரும் மோசடிகள், குற்றங்கள் நடத்தப்படுகின்றன. அடையாளங்களை திருடியோர், அதன் பிறகு அந்த இணைய தளத்தையே முடக்கிவிடும் நிலையும் ஏற்படுகிறது. இது தொடர்பாக சமீப காலமாக அதிகளவில் புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன. சமீபத்தில் மும்பையை சேர்ந்த இளைஞர் ஒருவர் இணைய தள நண்பன் மூலம் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து இது தொடர்பான விவகாரங்களில் சைபர் கிரைம் போலீசார் அதிக கவனம் செலுத்தத் துவங்கி உள்ளனர்.

ரொமான்ஸ்' செய்வதற்காக சிலர் இணையதளத்தை பயன்படுத்துகின்றனர். சாட்டிங்கின் போது, செக்ஸ் தொடர்பாக கருத்துக்களை பரிமாறிக் கொள்கின்றனர். இதனால், அவர்கள் மோசடிக்கு ஆளாக நேரிடுகிறது. அத்துடன் மன உளைச்சலுக்கும் ஆளாக நேரிடுகிறது. இது போன்ற காரியங்களுக்காக இணையதளத்தை பயன்படுத்துவோர் மனநல நிபுணரிடம் செல்வதும் அதிகரித்துள்ளது. டில்லி ஷ்ரீகங்கா ராம் மருத்துவமனையை சேர்ந்த மனநல டாக்டர் ரமா குமார், `இணைய தளத்தில் செக்ஸ் தொடர்பாக மனநலம் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஒரு நாளுக்கு 10 பேராவது இந்த பிரச்னையால், என்னிடம் ஆலோசனைக்கு வருகின்றனர்' என்கிறார்.

`இளைஞர்கள், குறிப்பாக பள்ளி மாணவ, மாணவிகள் தங்களது சொந்த விவரங்களை இணையதளத்தில் தெரிவிப்பதன் மூலம் காத்திருக்கும் அபாயத்தை அறியாதவர்களாக உள்ளனர். ஆரம்பத்தில் ஜாலிக்காக இது போன்ற தகவல்களை தெரிவித்து விட்டு, அதன் பின்னர் கடுமையான பாதிப்புக்கு ஆளாகின்றனர்' என்கிறார் ரமா குமார். இதே போல, ஏராளமான பொருள் இழப்புக்கு ஆளாவோர், தங்களை மோசடி செய்து ஏமாற்றியது யார் என்பதை கண்டுபிடிக்க தனியார் துப்பறியும் நிறுவனங்களை நாடுவதும் அதிகரித்து வருகிறது.

சைபர் மோசடியில் அடையாள திருட்டு தொடர்பாக மாதத்துக்கு 10 முதல் 20 பேர் எங்களிடம் ஆலோசனைக்கு வருகின்றனர்' என்கிறார் இந்திய டிடெக்டிவ் ஏஜன்சி என்ற தனியார் துப்பறியும் நிறுவனத்தின் தலைமை அதிகாரி சஞ்சய் சிங். அவர் மேலும் கூறியதாவது: அடையாளம் திருடப்படுவதை தடுப்பது எப்படி என்று ஆலோசனை கேட்டு ஏராளமானோர் எங்களை அணுகுகின்றனர். சமீபத்தில், ஒருவர் இணையதளத்தின் மூலம் ஏமாற்றப்பட்டார். இணையதளத்தில், தன்னை பாலிவுட் நடிகை என்று கூறிக்கொண்டு, போலியான படத்தை ஒருவர் அளித்துள்ளார். இதை உண்மை என்று நம்பினார் இணையதளத்தை பயன்படுத்தியவர். சில நாட்கள், இணையதளத்தில் சாட்டிங் செய்த பிறகு, நெருக்கமாகிவிட்டார். `எனக்கு இப்போது கடுமையான பண நெருக்கடி. எனக்கு பணம் தேவை. பணத்தை கொடுத்தால், உன்னையே திருமணம் செய்து கொள்கிறேன்' என்று ஆசை வார்த்தை காட்டியுள்ளார். இதை நம்பிய அவர், குறிப்பிட்ட வங்கிக்கணக்கில் ஏராளமான பணத்தை செலுத்தி உள்ளார்.

அதன் பிறகு, சம்பந்தப்பட்ட நபர் இணையதளத்தில் வரவே இல்லை. அந்த வங்கிக் கணக்கு யாருடையது, இதில் சட்டப்பூர்வமாக என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்று ஆலோசனை கேட்டு எங்களை அணுகினார் அந்த இளைஞர். அந்த இளைஞரிடம், இணையதளம் மூலம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது தெரிய வந்தது. இன்னொருவர், டெலிகாம் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். இணையதளம் மூலம் அவரது அடையாளம் திருடப்பட்டிருக்கிறது. அவரிடம் இல்லாத கிரெடிட் கார்டுக்கு ரூ.15 ஆயிரம் கட்டணம் வந்தது. இது குறித்து வங்கியிடம் கேட்ட போது, கிரெடிட் கார்டை அவரே கையெழுத்து போட்டு வாங்கியிருப்பதும், எல்லாம் முறைப்படி நடந்திருப்பதும் தெரியவந்தது. அவரது அடையாளத்தை பயன்படுத்தி போலி முகவரியில் கிரெடிட் கார்டு பெறப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது.

அந்த கிரெடிட் கார்டு தற்போது முடக்கப்பட்டு விட்டாலும், அந்த 15 ஆயிரம் ரூபாயை இவர் செலுத்தித்தான் ஆக வேண்டும் என்ற கட்டாய நிலை. இவ்வாறு சஞ்சய் சிங் கூறினார்.

இணையதளத்தை பயன்படுத்தும் போது, தங்களின் பிறந்த தேதி, முகவரி, கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு எண், மொபைல் போன் நம்பர், வங்கிக் கணக்கு போன்ற விவரங்களை எக்காரணம் கொண்டும் தெரிவிக்காமல் இருப்பதே நல்லது. அடையாள திருட்டு நான்கு வகைகளில் நடக்கிறது. மற்றவர்களின் தகவல்களை கொண்டு, அவரைப்போல தன்னை அடையாளம் காட்டி மோசடி செய்வது, `குளோனிங்' என்று அழைக்கப்படுகிறது.

மற்றவர்களின் வர்த்தக பெயர்களில் அல்லது வர்த்தக அடையாளங்களை கொண்டு கடன் பெறுவது போன்ற மோசடியில் ஈடுபடுவது, `பிசினஸ், கமர்ஷியல் ஐடென்டிட்டி தெப்ட்' என்று அழைக்கப்படுகிறது. இன்னொருவர் பெயரை துஷ்பிரயோகம் செய்து பணம் பெறுவது, `பைனான்சியல் தெப்ட்' என்று அழைக்கப்படுகிறது. எதாவது ஒரு கிரிமினல் குற்றத்தை செய்து விட்டு அதை இன்னொருவர் மீது சுமத்துவது, `கிரிமினல் ஐடென்டிட்டி தெப்ட்' என்று அழைக்கப்படுகிறது. கடந்த 2000ம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட தகவல் தொழில்நுட்பச் சட்டத்தில் இது போன்ற குற்றங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், இது போன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் கண்டுபிடிக்கப்பட்டால், கடுமையான தண்டனைக்கு அதில் இடம் இல்லை. அடையாள திருட்டில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனை வழங்குவது, இணையதள சேவை அளிப்போர் மூலம் அதை பயன்படுத்துவோர் பாதுகாப்பு பெறுவது, விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்றவற்றின் மூலமே இது போன்ற குற்றங்களை குறைக்க உதவும்.

அடையாள திருட்டு காரணமாக தனிப்பட்டவர் மட்டுமின்றி, இணையதள சேவை அளிப்போர் மற்றும் வங்கிகளும் பாதிக்கப்படுகின்றன. ஏராளமான முன்னணி நிறுவனங்கள், அடையாள திருட்டுக்கு ஆளாவோர் பாதிப்புக்கு, பெரும் தொகையை நஷ்ட ஈடாக தர வேண்டியுள்ளது. சில நிறுவனங்களின் அடையாளங்களும் கூட திருடப்பட்டு, அதனால், ஏராளமான இழப்புக்கு ஆளாக நேரிடுகிறது. குறிப்பாக இ-காமர்ஸ் என்று அழைக்கப்படும் எலக்டிரானிக் வர்த்தகம் தொடர்பான இணைய தளங்களில் தான் இது போன்ற அடையாள திருட்டுக்கள் மற்றும் மோசடிகள் நடக்கின்றன. ஆன்லைன் வர்த்தக சேவை இணைய தளங்கள், ஆன்லைன் ஏல விற்பனை இணைய தளங்களை குறிவைத்து, அடையாள திருட்டில் ஈடுபடுவோர் மோசடி செய்கின்றனர். இது போன்றவற்றால், கடந்த 2006ம் ஆண்டில் மட்டும் ரூ. 14 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

பெரும் தொகைக்காக அடையாள திருட்டில் ஈடுபடுவோர், மோசடிக்கு பிறகு சம்பந்தப்பட்ட இணையதளத்தையே முடக்கி விடுகின்றனர். இதனால், இணையதள சேவை அளிக்கும் நிறுவனங்களும் கடும் நிதி இழப்புக்கு ஆளாக நேரிடுகிறது.

நன்றிங்க, தினமலர். 26/10/2007

பொதுவானவை.

No comments: