Saturday, October 06, 2007

இடைத் தேர்தலை நோக்கி கர்நாடகம்!

ஆதரவை வாபஸ் பெற்றது பாஜக: இடைத் தேர்தலை நோக்கி கர்நாடகம்!

சனிக்கிழமை, அக்டோபர் 6, 2007

டெல்லி:

கர்நாடகத்தில் குமாரசாமி அரசுக்குக் கொடுத்து வந்த ஆதரவை பாஜக இன்று திரும்பப் பெற்றது. ஆட்சியை பாஜகவிடம் ஒப்படைப்பதற்குப் பதில், மக்களை சந்திப்போம் என்று தேவெ கெளட கூறியுள்ளார். இதையடுத்து கர்நாடகத்தில் இடைத் தேர்தல் வரக் கூடிய வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.

கர்நாடகத்தில் ஆளுக்கு 20 மாதங்கள் என்ற ஒப்பந்தத்தின் பேரில் மதச்சார்பற்ற ஜனதாதளமும், பாஜகவும் கூட்டணி ஆட்சியை அமைத்தன. ஆனால் ஒப்பந்தப்படி சில தினங்களுக்கு முன்பு பாஜகவிடம் ஆட்சியை மதச்சார்பற்ற ஜனதாதளம் ஒப்படைத்திருக்க வேண்டும்.

ஆனால் ஆட்சியை பாஜகவிடம் ஒப்படைக்க முதல்வர் குமாரசாமியும், மதச்சார்பற்ற ஜனதாதள தலைவர் தேவெ கெளடாவும் மறுத்து வந்தனர். மேலும் பாஜக மீது சரமாரியாக புகார்கள் கூறி வந்தனர். புதிய நிபந்தனைகளையும் விதித்தனர்.

இந்த நிலையில் நேற்று இரவு பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்கை, டெல்லியில் தேவெ கெளடா சந்தித்துப் பேசினார். இந்தப் பேச்சில் எந்த உடன்பாடும் இல்லை. இதையடுத்து மதச்சார்பற்ற ஜனதாதளம் மற்றும் பாஜக இடையிலான கூட்டணி உடைவது உறுதியானது.

இந்த நிலையில் பாஜகவின் நாடாளுமன்றக் கட்சிக் கூட்டம் இன்று காலை நடந்தது. இக்கூட்டத்தில் நேற்று கெளடாவுடன் நடந்த பேச்சுவார்த்தை குறித்து ராஜ்நாத் சிங் விவரித்தார்.

கூட்டத்திற்குப் பின்னர் வெங்கையா நாயுடு செய்தியாளர்களைச் சந்தித்தார். அவர் கூறுகையில், இந்தியாவில் எந்த அரசியல் கட்சியும் இதுவரை செய்யாத மிகப் பெரிய, மிக மோசமான துரோகத்தை மதச்சார்பற்ற ஜனதாதளம் செய்து விட்டது. மக்கள் மதச்சார்பற்ற ஜனதாதளத்தை மன்னிக்கவே மாட்டார்கள். தக்க பதிலடி கொடுப்பார்கள்.

குமாரசாமி அரசுக்கு பாஜக கொடுத்து வரும் ஆதரவை திரும்பப் பெற கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது என்றார் வெங்கையா நாயுடு.

பஜாக தனது ஆதரவைத் திரும்பப் பெற்றுள்ளதால், குமாரசாமி அரசு கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆட்சி தப்புவதும், கவிழ்வதும் தற்போது காங்கிரஸ் கட்சியின் கையில்தான் உள்ளது.

துணை முதல்வரும், பாஜக சட்டசபைக் கட்சித் தலைவருமான பி.எஸ்.எடியூரப்பா மற்றும் கர்நாடக பாஜக தலைவர் சதானந்த கெளடா ஆகியோர் ஆளுநரைச் சந்தித்து ஆதரவு வாபஸ் கடிதத்தை வழங்குமாறு கட்சி மேலிடத்தால் பணிக்கப்பட்டுள்ளனர்.

மக்களை சந்திப்போம் - கெளடா

இதற்கிடையே, மக்களை சந்தித்து அவர்களின் தீர்ப்பை கோரப் போவதாக முன்னாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதாதள தலைவருமான தேவெ கெளடா கூறியுள்ளார்.

டெல்லியில் நடந்த மதச்சார்பற்ற ஜனதாதள அரசியல் விவகாரக் குழுக் கூட்டத்திற்குப் பின்னர் கெளடா செய்தியாளர்களிடம் பேசுகையில், தற்போதைய சூழ்நிலையில், நாங்கள் மக்களை சந்திக்கவே விரும்புகிறோம். காங்கிரஸுடனோ அல்லது பாஜகவுடனோ உறவு வைக்கப் போவதில்லை.

மதச்சார்பற்ற ஜனதாதளம் பதவி வெறி பிடித்து அலையவில்லை. இந்தக் குற்றச்சாட்டுத் தவறானது.

மதச்சார்பற்ர ஜனதாதள அரசுக்கு எதிராக பாஜக தொடர்ந்து பல அவதூறுகளை சுமத்தி வந்தது. முதல்வர் மீதும், அவரது குடும்பத்தினர் மீதும் தொடர்ந்து அவதூறான புகார்களைக் கூறி வந்தது. பாஜக அமைச்சர் ஒருவர் கொலை முயற்சி புகாரும் கொடுத்தது இதில் உச்சகட்டமானது.

முதல்வருக்குக் கிடைத்து வந்த மக்கள் செல்வாக்கை பாஜகவினரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இது உள்ளாட்சித் தேர்தலிலும் பிரதிபலித்ததை பாஜகவால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்றார் கெளடா.

காங்கிரஸ் மெளனம்:

இதற்கிடையே, கர்நாடக அரசியல் சூழ்நிலை குறித்து காங்கிரஸ் கட்சி தலைவர்கள் இன்று கூடி ஆலோசித்தனர். பின்னர் சட்டசபை காங்கிரஸ் தலைவர் தரம்சிங் செய்தியாளர்களிடம் பேசுகையில், பாஜக முறைப்படி தனது ஆதரவை வாபஸ் பெற வேண்டும். அதன் பின்னர்தான் காங்கிரஸ் தனது நடவடிக்கைகளை முடிவு செய்யும்.

கர்நாடக மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் ஓரிரு தினங்களில் பெங்களூர் வரவுள்ளார். அதன் பின்னர் கட்சி எம்.எல்.ஏக்களிடம் கருத்து கேட்கப்படும். இறுதி முடிவை கட்சி மேலிடம் எடுக்கும்.

எம்.எல்.ஏக்கள் யாரும் வெளியூர்களுக்குப் போக வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மாநில ஆளுநர் ராமேஷ்வர் தாக்கூரையும் கட்சித் தலைவர்கள் சந்தித்துப் பேசியுள்ளனர் என்றார்.

குமாரசாமி அரசுக்கு கொடுத்து வந்த ஆதரவை பாஜக வாபஸ் பெற்றுள்ள நிலையில், வருகிற 18ம் தேதி சட்டசபையைக் கூட்டியிருப்பது செல்லாது, சட்டவிரோதமானது என்றும் காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. இதைத் தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் அது ஆளுநரை கோரியுள்ளது.

நன்றிங்க

பதவி ஆசை யாரை விட்டது.

இந்த அரசியல்வாதிகளுக்கு நாட்டைப் பற்றி எந்த கவலையும் இல்லை. இடைத் தேர்தல் என்றால் சும்மாவா நடக்கும், அதற்கான செலவுகள், தேர்தல் பிரச்சார தொந்தரவுகள், மக்களின் நேர விரயம்.

என்னதான் இருந்தாலும் ஒப்பந்தத்தை மீறியது கொளடா கட்சி செய்த அநியாயம்!

No comments: