Thursday, October 11, 2007

அஜ்மீர் தர்ஹாவில் குண்டுவெடிப்பு

அஜ்மீர் தர்ஹாவில் குண்டுவெடிப்பு - 3 பேர் பலி

வெள்ளிக்கிழமை, அக்டோபர் 12, 2007

அஜ்மீர்:

ராஜஸ்தான் மாநிலம் ஆஜ்மீரில் உள்ள புகழ் பெற்ற சுஃபி வழிபாட்டுத் தலமான காஜா மொய்னுதீன் சிஷ்டி தர்ஹா வளாகத்தில் சக்தி வாய்ந்த குண்டுவெடித்ததில் 3 பேர் பலியானார்ள். 17 பேர் படுகாயமடைந்தனர். இதனால் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

ரம்ஜான் மாதம் என்பதால் ஆஜ்மீர் தர்ஹாவில் தற்போது கூட்டம் நிரம்பி வழிகிறது. குறிப்பாக மாலை நேரத்தில் நோண்பு முடிந்து, இப்தார் தரும் வேளையில் கூட்டம் அதிக அளவில் இருக்கிறது.

அதேபோல நேற்று மாலையும் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் நோண்பு முடித்து இப்தாருக்குத் தயாராகிக் கொண்டிருந்தனர். அப்போது இரவு 7.16 மணியளவில் தர்ஹா வளாகத்தில் பலத்த சப்தத்துடன் ஒரு குண்டு வெடித்தது. பள்ளிக்கூட பையில் இருந்த டிபன் பாக்சில் அந்த குண்டு வைக்கப்பட்டிருந்தது.

இதில் நோண்பு முடித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்கள் அலறி அடித்து ஓடினர். சாப்பிட்டுக் கொண்டிருந்த தட்டுக்களை தூக்கி வீசி விட்டு அனைவரும் உயிர் தப்பிக்க ஓடினர். அந்த இடமே பெரும் கூட்ட நெரிசலில் சிக்கியது.

இந்த குண்டுவெடிப்பில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அவரது பெயர் முகம்மது சோயீப் (45). மும்பையைச் சேர்ந்தவர். தர்ஹாவில் வழிபாடு செய்ய அவர் வந்திருந்தார் என்பது தெரிய வந்தது. மேலும் இருவரும் இதில் உயிரிழந்தனர்.

குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 17 பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தர்ஹாவின் முக்கிய வழிபாட்டுப் பகுதிக்கு வெகு அருகே குண்டுவெடித்ததால் பக்தர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இது ஒரு திட்டமிட்ட தீவிரவாதச் செயல் என போலீஸார் தெரிவித்துள்ளனர். தர்ஹா வளாகத்தில் உள்ள ஒரு வேப்ப மரத்திற்குக் கீழே வைக்கப்பட்டிருந்த பள்ளிக்கூட பையில்தான் குண்டு இருந்ததாகவும், போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த இடம் முக்கிய வழிபாட்டுத் தலமான சுஃபி துறவி காஜா மொய்னுதீனின் சமாதிக்கு வெகு அருகே உள்ளது. ஆனால் குண்டுவெடிப்பில் சமாதிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

அரசியல் கட்சிகள் கண்டனம்:

ஆஜ்மீர் தர்ஹாவில் நடந்த குண்டுவெடிப்பை பல்வேறு அரசியல் கட்சிகளும் கண்டித்துள்ளன.

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மோகன் பிரகாஷ் கூறுகையில், இது மிகவும் சோகமானது, துரதிர்ஷ்டவசமானது. இது மனிதகுலத்திற்கு எதிரான குற்றச் செயலாகும் என்றார்.

ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் எம்.பி. சச்சின் பைலட் கூறுகையில், அனைத்து சமூகத்தினரும் அமைதி காக்க வேண்டும். இந்தியாவின் ஒற்றுமையை, ராஜஸ்தான் மாநிலத்தின் ஒற்றுமையை சீர்குலைக்க நடந்த சதி இது. இதை அனைவரும் ஒற்றுமையாக இருந்து தோல்வி அடையச் செய்ய வேண்டும் என்றார்.

மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சைபுதீன் ஜோஸ் கூறுகையில், புனிதமான ரமலான் மாதத்தில் இதுபோல நடத்தப்பட்டிருப்பதை அனைவரும் கண்டிக்க வேண்டும். இதுபோன்ற குற்றச் செயலில் ஈடுபட்டவர்கள் சட்டத்தின் முன்பு நிறுத்தப்பட்டு கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்றார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் ஆளுங்கட்சியாக உள்ள பாஜக துணைத் தலைவர் முக்தார் அப்பாஸ் நக்வி கூறுகையில், இது கோழைத்தனமான தாக்குதல். மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு தீவிரவாதிகளுக்கு எதிராக மிகவும் மென்மையாக நடந்து கொள்வதால்தான் இதுபோன்ற தாக்குதல்களில் ஈடுபட தீவிரவாதிகள் துணிகிறார்கள். ஆஜ்மீர் தர்ஹா சம்பவம் இன்னும் ஒரு தீவிரவாத செயலுக்கு வித்திட்டுள்ளது என்றார்.

நன்றிங்க

பொதுவானவை

No comments: