Tuesday, November 27, 2007

ஆங்கிலம் செய்த கொலை(!?)

ஆங்கிலம் தெரியாத விரக்தியால் என்ஜினீயரிங் மாணவர் தற்கொலை
விடுதியில் தூக்குப்போட்டு பிணமாக தொங்கினார்

பூந்தமல்லி, நவ.27-

ஆங்கிலம் தெரியாததால் விரக்தி அடைந்த என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் உருக்கமாக கடிதம் எழுதி வைத்து விட்டு விடுதியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்தார்.
என்ஜினீயரிங் மாணவர்

தேனி மாவட்டம் பண்ணைபுரத்தை சேர்ந்தவர் நந்தகுமார் என்பவரின் மகன் விது(வயது 18).
இவர் சென்னையை அடுத்த குன்றத்தூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் தகவல் தொழில்நுட்ப பிரிவில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரி விடுதியில் அவர் தங்கி இருந்தார்.

ஆங்கில பாடம் புரியவில்லை

மாணவர் விது மேல்நிலைப்பள்ளி வரையில் தமிழ் வழிகல்வி கற்பிக்கப்படும் பள்ளியில் படித்தவர். பிளஸ்-2 தேர்வில் 1,023 மார்க்கு பெற்று அரசு இடஒதுக்கீட்டில் என்ஜினீயரிங் கல்லூரியில் இடம் கிடைத்து சேர்ந்துள்ளார்.

ஆனால் என்ஜினீயரிங் கல்லூரியில் பாடத்திட்டம் ஆங்கிலத்தில் இருந்ததால் அவரால் அதனை சரியாக புரிந்து கொண்டு படிக்க இயலவில்லை. சமீபத்தில் நடந்த தேர்வுகளில் 5 பாடத்தில் அவர் தோல்வி அடைந்து விட்டார். இதனால் விது சோகமே உருவாக விரக்தியில் இருந்தார்.

தற்கொலை

இதுபற்றி அவர் தந்தையிடம் கூறி இருக்கிறார். அதற்கு அவரது தந்தை, ``எப்படியாவது கஷ்டப்பட்டு படித்து முன்னேறி வா'' என்று அறிவுரை கூறியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் மாணவர் விது விடுதியில் உள்ள குளியல் அறையில் தனது லுங்கியை இரண்டாக கிழித்து அதை கயிறு போல திரித்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் குன்றத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மாணவர் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

உருக்கமான கடிதம்

மாணவர் விது தங்கியிருந்த அறையில் சோதனை நடத்திய போலீசார் கடிதம் ஒன்றை கண்டெடுத்தனர். அதில் விது எழுதியிருந்ததாவது:-

``எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை. நான் சிறு வயதில் இருந்தே தமிழ் வழிகல்வியில் படித்தேன். என்ஜினீயரிங் படிப்பில் எல்லாம் ஆங்கிலத்தில் கற்பிக்கப்படுவதால் எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஆங்கிலத்தில் படிக்க இயலாத காரணத்தால் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொள்கிறேன்.''

இவ்வாறு அவர் கடிதத்தில் எழுதி இருக்கிறார்.

இந்த சம்பவம் குறித்து குன்றத்தூர் இன்ஸ்பெக்டர் ஆல்ட்ரின் ஈஸ்டர், சப்-இன்ஸ்பெக்டர் தங்கம் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நன்றிங்க

நெஞ்சு கனக்கிறதய்யா!

மாணவ சமுதாயங்களே கல்வி என்பது வாழ்க்கைக்கு தேவையானதுதான். அதற்காக கல்விதான் வாழ்க்கை என்ற நிலை இல்லை என்பதை உணர்ந்து, பரீட்சையில் தோல்வி அடைந்தால் முனமுடைந்து தற்கொலை செய்வதை கைவிடுங்கள். எல்லா பிரச்சனைக்கும் தற்கொலைதான் தீர்வு என்பது கோழைத்தனம்.

நெஞ்சில் உறுதி வேண்டும்!

6 comments:

ரவிசங்கர் said...

இது இந்த மாதிரி நடக்கும் முதல் தற்கொலை அல்ல. ஆண்டுக்கு சிலராவது இப்படி ஆகிறார்கள். இதற்கு மாணவர்களுக்கு அறிவுரை கூறுவது அரசின் பாடத்திட்டக் கொள்கையின் தோல்வியை மூடி மறைப்பதாகும். எக்கல்வியும் தாய்மொழியில் பெறும் நாள் வரும் வரையில் இது தொடர்கதையாகத் தான் இருக்கும் :(

salaijayaraman said...

அன்புள்ள தமிழ் நெஞ்சங்களுக்கு வணக்கம். நெஞ்சு கனக்கிறது, ஆங்கிலம் திமிங்கிலமானது, அருமையான கிடைத்தற்கரிய பெரும் பேறாகிய இன்னுயிரை மொழிக்காக தியாகம் செய்தது மகாக் கொடுமை, பெரும் பங்கு அரசியல் அவலங்
களால் உண்டானதே, பெற்றோர்கள் பிள்ளைகளின் எண்ணங்களை புரிந்து செயல்படாதது மிகவும் துரதிருஷ்டமே, அறிவியல் வளர்ச்சியின் அலங்கோலமே அல்லாமல் வேறதைச் சொல்ல, அவ் அப்பாவிப் பிள்ளையின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்

முஸ்லிம் said...

ரவிசங்கர்
salaijayaraman

உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றிகள்.

மாணவர் விது தமிழ் கல்வியில் சிறந்த மதிப்பெண் பெற்றிருக்கிறார். தொடர்ந்து தமிழ் கல்வியில் அவரை ஊக்கப்படுத்தியிருக்கலாம்.

Arun said...

இந்த கட்டுரையை பார்க்கும் போது எனக்கு தோன்றுவது அது போன்ற மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டியது தன்னம்பிக்கையே.

தன்னம்பிக்கையில்லாதவர்களால் எதையும் சாதித்துவிட முடியாது. அம்மாணவர் படிப்பில் சிறந்தவராக இருந்தப் போதிலும் தன்னம்பிக்கை இன்மையே இவ்வாரான முடிவுக்குச் செல்ல காரணமாயிருந்துள்ளது.

Mahadevan said...

தமிழா விழித்து கொள்

நாம் கற்பிக்கும் அனைத்தையும் உள்வாங்கி படிப்பது, உணர்வது நம் தாய் மொழி தமிழில் தான். சீனாவில் சீன மொழியில் தான் படிக்கிறார்கள். ஈழத்தில் பொறியியல் மற்றும் மருத்துவம் தமிழில் சொல்லி கொடுக்கபடுகிறது. தொழில்நுட்பகல்லூரியில் தமிழில் படித்து இப்போது எத்தனையோ பேர் நல்ல நிலையில் உள்ளார்கள்.தமிழை வாழ வையுங்கள். ஆங்கில போதை வேண்டாம்............

முஸ்லிம் said...

மகாதேவன் உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.