சென்னை நீதிபதியைத் தாக்கிய வக்கீல் கைது
வெள்ளிக்கிழமை, நவம்பர் 2, 2007
சென்னை: சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நீதிபதி முருகானந்தத்தை தாக்கிய வழக்கறிஞர்களில் தங்கத்துரை என்பவரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமறைவாகி விட்ட இன்னொரு வழக்கறிஞரைத் தேடி வருகின்றனர்.
எழும்பூர் 5வது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முருகானந்தம், திருட்டு வழக்கில் கைதான 4 பெண்களுக்கு ஜாமீன் வழங்க மறுத்ததால் ஆத்திரமடைந்த அந்த பெண்களின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் இளங்கோவன் மற்றும் தங்கத்துரை ஆகியோர் நீதிபதியை தாறுமாறாக திட்டினர்.
பின்னர் நீதிபதியின் அறைக்குச் சென்று அவரை சரமாரியாக அடித்தும், மிதித்தும், முகத்தில் எச்சிலை உமிழ்ந்தும், குடும்பத்தினர் குறித்து அசிங்கமாக பேசியும் அவமானப்படுத்தினர்.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து நீதிபதி முருகானந்தம், சென்னை எழும்பூர் தலைமை பெருநகர குற்றவியல் நீதிபதி ராமராஜிடம் புகார் கொடுத்தார். பின்னர் இருவரும் சேர்ந்து உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.ஷாவை சந்தித்து புகார் கொடுத்தனர்.
மேலும், எழும்பூர் காவல் நிலையத்தில் தங்கத்துரை, இளங்கோவன் உள்ளிட்ட 20 வக்கீல்கள் தன்னை தாக்கி அவமானப்படுத்தியதாக நீதிபதி முருகானந்தம் புகார் கொடுத்தார். இந்தப் புகாரின் பேரில் மின்னல் வேகத்தில் போலீஸார் நடவடிக்கையில் இறங்கினர்.
நேற்று இரவு தங்கத்துரையைக் கைது செய்தனர். சைதாப்பேட்டையில் கைது செய்யப்பட்ட அவரை ரகசிய இடத்திற்குக் கூட்டிச் சென்று விசாரணை நடத்தினர். பின்னர் நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை சிறையில் கொண்டு போய் அடைத்தனர்.
உயர்நீதிமன்றம் நோட்டீஸ்:
இதற்கிடையே, நீதிபதி முருகானந்தம் தாக்கப்பட்ட விவகாரத்தை தானாக முன்வந்து வழக்காக பதிவு செய்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்காக இதை எடுத்துக் கொண்டுள்ளதாக தெரிவித்த தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதி ராமசுப்பிரமணி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த வழக்கை நேற்று விசாரித்தது.
பின்னர் நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ் ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று கேட்டு இரு வக்கீல்களுக்கும் நோட்டீஸ் அனுப்புமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் வருகிற 29ம் தேதி இரு வக்கீல்களும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் கூறிய நீதிபதிகள் அன்றைய தினத்திற்கு வழக்கை ஒத்தி வைத்தனர்.
இந்த நிலையில் தலைமை நீதிபதி ஏ.பி.ஷாவை சென்னை உயர்நீதிமன்றத்தின் பல்வேறு வக்கீல்கள் சங்கத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள் நேரில் சந்தித்து பிரச்சினைக்கு சுமூக தீர்வு காண வேண்டும் என்று கோரினர்.
மன்னிப்பு கேட்ட வக்கீல்கள்:
இதற்கிடையே, நீதிபதி முருகானந்தத்தை எழும்பூர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் நேற்று ஒன்றாக சென்று சந்தித்து நடந்த செயலுக்கு வருத்தமும், மன்னிப்பும் கேட்பதாக கூறினர். மேலும் வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்றும் அவர் கோரினர்.
ஆனால் போலீஸில் புகார் கொடுக்கப்பட்டு விட்டது. போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். என்னால் ஒன்றும் செய்ய முடியாது. தலைமை நீதிபதிதான் இதில் முடிவெடுக்க முடியும் என்று நீதிபதி முருகானந்தம் கூறி விட்டார்.
நீதிபதிகள் ஆலோசனை:
இந்த நிலையில், சென்னையில் உள்ள எழும்பூர், ஜார்ஜ்டவுன், சைதாப்பேட்டை ஆகிய நீதிமன்றங்களின் நீதிபதிகள் ஒன்று கூடி ஆலோசனை நடத்தினர். இதனால் நேற்று முழுவதும் பெரும்பாலான நீதிமன்றங்களில் நீதிபதிகள் பணிக்கு வரவில்லை.
நன்றிங்க
எல்லா துறைகளிலும் அடிதடி வெட்டு குத்து அளவுக்கு போய் விட்டது. தொழிலாளி அதிகாரிகளை அடிப்பதும் அதிகாரிகள் தொழிலாளிகளை பழி வாங்கவதும், அரசியல்வாதிகள் தெர்ணடர்களை சாத்துவதும் தொண்டர்கள் அரசியல்வாதிகளை போட்டு தாக்குவதும் என எல்லா துறையிலும் அடிதடிகள் இயங்கி வருகின்றன.
நீதி துறையிலும் வாய் சண்டை மாறி அடிதடி நுழைந்திருப்பதால் பெரிசா ஒன்றும் குடி முழுகிவிடாது. நீதிபதியை வழக்குரைஞர்கள் அடித்த மாதிரி நாளை வழக்குரைஞர்களை நீதிபதிகளும் தாக்கலாம். இதெல்லாம் உள்துறை குழப்பம்.
பார்க்கலாம், இந்த வழக்காவது சீக்கிரமா முடிகியுமா? என்று.
No comments:
Post a Comment