Friday, November 23, 2007

டாலர் வீழ்ச்சி - ஈரோவுக்கு மாறும் திருப்பூர்.

டாலர் வீழ்ச்சி - ஈரோவுக்கு மாறும் திருப்பூர்

சனிக்கிழமை, நவம்பர் 24, 2007

திருப்பூர்: அமெரிக்க டாலரின் மதிப்பு நாளுக்கு நாள் சரிந்து வருவதால், இழப்புகளை சமாளிக்க ஈரோவில் தங்களது வியாபாரத்தை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளனர் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள்.

அமெரிக்க பொருளாதாரத்தில் சரிவு காணப்படுகிறது. இதன் காரணமாக டாலரின் மதிப்பும் குறையத் தொடங்கியுள்ளது. கடந்த 20ம் தேதி முதல் அமெரிக்க டாலரின் மதிப்பை விட இந்திய ரூபாயின் மதிப்பு 11 சதவீதம் அதிகரித்துள்ளது.

இந்திய ரூபாயின் மதிப்பு அமெரிக்க டாலருக்கு எதிராக உயர்வது இந்தியர்களுக்கு பெருமையாக இருந்தாலும் கூட, திருப்பூர் ஏற்றுமதியாளர்களுக்கு இது பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தி வருகிறது. இதன் காரணமாக, திருப்பூரில் பல நிறுவனங்கள் பெரும் இழப்பை சந்திக்க ஆரம்பித்துள்ளன. இதன் எதிரொலியாக திருப்பூரில் இதுவரை 8000 தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனராம்.

இந்தியாவின் மிகப் பெரிய பின்னலாடை ஏற்றுமதி மையங்களில் திருப்பூருக்கு தனி இடம் உண்டு. இங்கிருந்து அமெரிக்காவுக்கு மட்டும் 30 சதவீத ஏற்றுமதி நடக்கிறது. இந்த ஏற்றுமதி வியாபாரத்தில் முக்கால்வாசி அமெரிக்க டாலரில்தான் நடந்து வந்தது. தற்போது அமெரிக்க டாலரின் மதிப்பு குறைந்து வருவதால் நிலைமை மோசமாகியுள்ளது.

நிலைமை இப்படியே நீடித்தால், திருப்பூரில் உள்ள 7 லட்சம் பின்னலாடைத் தொழிலாளர்களில் அடுத்த மார்ச் மாத்திற்குள் 1 லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதைத் தவிர்க்க தற்போது திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் புதிய வழியைக் கண்டுபிடித்துள்ளனர். பெரும்பாலான ஏற்றுமதியாளர்கள் தங்களது வியாபாரத்தை டாலரிலிருந்து ஈரோவுக்கு மாற்றி விட்டனர்.

தற்போது அமெரிக்க டாலரின் மதிப்பு குறைந்திருப்பதால் அதை சமாளிக்க ஆடைகளின் விலையை உயர்த்தலாம் என்றால் அதை அமெரிக்க சந்தை ஏற்காது என்ற நிலை உள்ளது.

இந்த விவகாரத்தில் அரசு தலையிட்டு உதவ வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஆனால் அது கிடைக்கும் வரை காத்திருக்க விரும்பாத பெரும்பாலான ஏற்றுமதியாளர்கள், தங்களது வர்த்தகத்தை டாலரில் மேற்கொள்வதை விட்டு விட்டு ஈரோவுக்கு மாறியுள்ளனர்.
காரணம் இந்திய ரூபாய்க்கு எதிராக ஈரோவின் மதிப்பு 1.4 சதவீதமும், இங்கிலாந்து பவுன்ட்டின் மதிப்பு 7.1 சதவீதமும்தான் குறைந்துள்ளன.

மேலும் உள்ளூர்ச் சந்தைக்கு அனுப்பும் ஜவுளிகளின் எண்ணிக்கையையும் அவர்கள் அதிகரித்துள்ளனர். இதன் மூலம் இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளால் ஏற்பட்டுள்ள பாதிப்பை சமாளிக்க முடியும் என்பது திருப்பூர் ஏற்றுமதியாளர்களின் எண்ணம்.

கடந்த ஆண்டு திருப்பூரிலிருந்து ரூ. 11 ஆயிரம் கோடி அளவிலான ஜவுளிப் பொருட்கள் ஏற்றுமதியாகின என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றிங்க

சரிதான்...

வியாபாரிகள் எப்போதுமே வர்த்தகத்தில் கண்ணும் கருத்துமாகவே இருக்கிறார்கள்!

No comments: