Thursday, November 15, 2007

வரதட்சணையா! விவாகரத்தா!!

வரதட்சணையா வேண்டும்? இந்தா... மணவிலக்கு!

புதன், 14 நவம்பர் 2007

திருமணமான சில மணிநேரத்திலேயே அத்திருமணத்தை ரத்து செய்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் ஒரு முஸ்லிம் மணமகள். பீஹார் மாநிலத்தின் ராஞ்ச்சி நகரத்திலிருந்து 270 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தன்பாத் பிரதேசத்தின் பத்துரியா எனும் கிராமத்தைச் சேர்ந்த Guddi என்ற பெயருள்ள இந்த மணமகளுக்கு, இம்தியாஸ் அன்ஸாரி என்பவருடன் கடந்த சனிக்கிழமை (10-11-2007) திருமணம் நடைபெற்றது.

திருமண ஒப்பந்தம் முடிவடைந்த சில மணிநேரத்தில் மணமகனின் குடும்பத்தினர் மணமகளின் பெற்றோரை அணுகி, வரதட்சணை தருமாறு கோரியுள்ளனர். மணமகனின் சகோதரி சில எலக்ட்ரானிக் பொருள்களையும் பணத்தையும் வரதட்சணையாகக் கொடுத்தாக வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளார்.

இத்தகைய வற்புறுத்தல்களின் மூலம் அதிர்ச்சி அடைந்த மணமகள், அதன் பின் ஏற்பட்ட வாக்குவாதத்தின் முடிவில் மணமகனின் சகோதரியை ஓங்கி அறைந்த கையோடு நில்லாமல், மேற்கொண்டு என்ன செய்வது என்று குழம்பிக் கொண்டிருக்காமல் மணவிலக்கு அளிக்கும் துணிச்சலான முடிவுக்கு உடனடியாக வந்துள்ளார், மணமகளான "Guddi".

"தனது குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து வரதட்சணை கேட்டு என்னை வற்புறுத்துவதைப் பார்த்தும் வாய் பொத்தி பேசாமல் நின்றிருக்கும் இவருடன் நான் எப்படி வாழ்நாள் முழுவதும் குடும்பம் நடத்த முடியும்?" என்று கேட்கும் "Guddi" மணமகனுடன் புகுந்த வீட்டிற்குச் செல்ல மறுத்துவிட்டார்.

ஆரம்பத்தில் மணவிலக்கு அளிக்க ஒத்துழைக்காத "Guddi" யின் பெற்றோர் அவரது உறுதியான இந்த வாதத்தில் கட்டுப்பட்டு அவர்களின் ஒப்புதலைத் தெரிவித்துள்ளனர். "திருமணமான சில மணி நேரத்துக்குள் மணமகனின் பெற்றோர் வரதட்சணை கேட்டு நச்சரித்த காரணத்தினால் எனது மகளின் குறுகிய காலத் திருமணத்தையும் அதன் பின் உடனடியாக நடந்த மணவிலக்கையும் பற்றி நான் கவலைப்படவில்லை. என் மகள் ஓர் அச்சமுள்ள பெண்ணாக இருந்து, இவர்கள் குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டுச் சென்றிருந்தால் என்னென்ன கொடுமைகளைச் சந்தித்திருப்பாளோ என்று எண்ணினால் எனக்கு அச்சமே மேலிடுகிறது" என்று பத்திரிகையாளர்களிடம் கூறியுள்ளார் மணமகளின் தந்தையான ரியாஸாத்.

இஸ்லாத்தைத் தங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டு படைத்தவனுக்கு மட்டுமே அஞ்சி வாழும் ஒரு முஸ்லிம், தன்னுடையத் திருமண வேளையில் மட்டும் படைத்தவனை மறந்து, தான் மணம் புரியப்போகும் பெண்ணிடம் அதற்காகக் கைக்கூலியை கௌரவப் பிச்சையாகப் பெறுவது அவமானமானது மட்டுமல்ல, படைத்தவனின் சட்டத்திற்கு எதிராக அவனுக்கே சவால் விடுவதற்கு ஒப்பானதாகும் என்பதை அத்தகைய கைக்கூலி மாப்பிள்ளைகள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

வளர்ந்து வரும் தனது மகளை திருமணச் சந்தையில் போட்டியிட்டுக் கட்டிக்கொடுக்க இயலாத தனது வறுமையினைக் கண்டு பயந்து சிசுக்களிலேயே பெண் குழந்தைகளைக் கொன்று விடும் பெற்றோர்களின் அறிவீனச் செயல்களுக்கு இத்தகைய கௌரவப் பிச்சை பெறும் மாப்பிள்ளை மாடுகளும் ஒரு காரணமாவர் என்பதை இவர்கள் எப்பொழுதும் மனதில் இருத்திக் கொள்ள வேண்டும்.

மணம் புரிந்த அடுத்த கணத்திலேயே கௌரவப் பிச்சைக் கோரிய வீட்டுக்காரர்களின் முன் மௌனமாக நின்று அச்செயலுக்குத் துணைபோன இந்த மாப்பிள்ளை மாட்டிற்குச் சகோதரி "Guddi" கொடுத்த செருப்படி வரவேற்கத்தக்கதாகும். ஏமாளிகள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருப்பார்கள் என்ற பழமொழியை நினைவில் கொண்டு, சகோதரி "Guddi" யின் முன்னுதாரணத்தைக் கையில் எடுக்கச் சகோதரிகளும் முன் வர வேண்டும்.

இஸ்லாம் வலியுறுத்தும் பெண்களின் திருமணக் கொடைகளை வாரி வழங்குவோம்!

வரதட்சணையை எதிர்ப்போம்! கௌரவப் பிச்சைக்காரர்களை ஒழிப்போம்!

நன்றிங்க

இப்படித்தான் இருக்கணும்!

No comments: