ஏழைக் குழந்தைகளுக்கு அரசு உதவியுடன் தனியார் மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை!
புதன்கிழமை, நவம்பர் 21, 2007
சென்னை: வசதியற்ற குடும்பங்களைச் சேர்ந்த இதய நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு, அரசு நிதியுதவியுடன் தனியார் மருத்துவமனைகளில் இருதய அறுவை சிகிச்சை செய்யும் திட்டத்தை முதல்வர் கருணாநிதி இன்று தொடங்கி வைத்தார்.
இதன்படி இருதய அறுவை சிகிச்சையின் தன்மையைப் பொறுத்து ரூ. 10,000 முதல் ரூ. 70,000 வரை தமிழக அரசிடம் இருந்து பெற்றுக் கொண்டு தனியார் மருத்துவமனைகள் இந்த குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை செய்யும்.
இதற்கான ஒப்பந்தத்தில் 17 தனியார் மருத்துவமனைகள் முதல்வர் கருணாநிதி முன்னிலையில் இன்று கையெழுத்திட்டன.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
மக்களின் வாழ்க்கையில் தற்போதைய மாறிவரும் சூழ்நிலைகள், உணவுப் பழக்க வழக்கங்கள், நடைமுறை வாழ்க்கையில் ஏற்பட்டு வரும் மாறுதல்கள் போன்றவை காரணமாக இதய நோயினால் பாதிக்கப்படுவோர் குறிப்பாக, இளம் சிறார்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதய நோயினால் பாதிக்கப்படும் குழந்தைகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதன் காரணமாக அரசு மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சைக்காகக் குழந்தைகள் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இது முதல்வர் கருணாநிதியின் கவனத்திற்கு வந்ததைத் தொடர்ந்து ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளின் அரிய உயிர்களைக் காக்கும் பொருட்டுத் தற்போது காத்திருப்போர் பட்டியலில் உள்ள 12 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு உடனடியாக அறுவை சிகிச்சைகள் செய்வதற்காக, ஆண்டு வருவாய் ரூ. 50,000க்கு குறைவாக உள்ள குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு தனியார் மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சைகள் மேற்கொள்வதற்கான புதிய திட்டத்தை முதல்வர் அறிவித்தார்.
அதன்படி இதய அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கு ரூ. 10,000மும், சாதாரண திறந்த இதய அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கு ரூ. 30,000மும், கடினமான இதய அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கு ரூ. 70,000மும் நிதியுதவி வழங்கும் புதிய திட்டத்திற்கான ஒப்பந்தம் முதல்வர் கருணாநிதி முன்னிலையில் தலைமை செயலகத்தில் இன்று கையொழுத்தானது.
இந்த ஒப்பந்தத்தில் தமிழக அரசு சார்பில் மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் துறை இயக்குனரும், 17 தனியார் மருத்துவமனைகளின் பிரதிநிதிகளும் கையெழுத்திட்டனர்.
இந்த ஒப்பந்தத்தினைத் தொடர்ந்து அரசு மருத்துவமனைகளில் இதய அறுவை சிகிச்சைக்காகப் பதிவு செய்து கொண்டு காத்திருக்கும் 20 குழந்தைகளுக்கு உடனடியாக அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ள 10 தனியார் மருத்துவமனைகளுக்குத் தமிழக அரசின் சார்பில் அனுமதிகளை வழங்கி இத்திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார்.
இத்திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு இதய அறுவை சிகிச்சை செய்திட தமிழக அரசுடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ள 17 தனியார் மருத்துவமனைகள் விவரம் வருமாறு:
1. ராமச்சந்திரா மருத்துவமனை, போரூர்
2. அப்பல்லோ மருத்துவமனை, சென்னை
3. பிராண்ட்டியர் லைப் லைன் மருத்துவமனை, சென்னை
4. ஆர்.வே ஹெல்த்கேர் லிமிடெட், சென்னை
5. மெட்ராஸ் மெடிக்கல் மிஷன், சென்னை
6. கே.ஜெ.மருத்துவமனை, சென்னை
7. சூரியா மருத்துவமனை, சென்னை
8. மியாட் மருத்துவமனை, மனப்பாக்கம், சென்னை
9. லைப்-லைன் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, சென்னை
10. செட்டிநாடு மருத்துவமனை, கேளம்பாக்கம், காஞ்சீபுரம்
11. வடமலையான் மருத்துவமனை, மதுரை
12. அப்பல்லோ ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, மதுரை
13. மீனாட்சி மிஷன் மருத்துவமனை, மதுரை
14. பி.எஸ்.ஜி. மருத்துவமனை, கோவை
15. ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனை, கோவை
16. கே.ஜி. மருத்துவமனை, கோவை
17. ஜி. குப்புசாமிநாயுடு நினைவு மருத்துவமனை, கோவை.
நன்றிங்க
ஏழைக் குழந்தைகளை காக்கும் அரசின் இவ்வுதவிகள் முறையாக முழுதுமாக பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு போய் சேர வேண்டும் என வாழ்த்துவோம்.
No comments:
Post a Comment