Sunday, November 18, 2007

02. பிளஸ் 2 படிப்புடன் மூட்டை கட்டும் மாணவர்கள்.

02. பிளஸ் 2 படிப்புடன் மூட்டை கட்டும் மாணவர்கள் 69%: முத்துக்குமரன் கமிட்டி அறிக்கையில் `திடுக்' தகவல் -நமது சிறப்பு நிருபர்-

பிளஸ் 2 படிக்கும் மாணவர்களில் 69.45 சதவீதம் பேர் உயர்கல்வி பயிலாமல், படிப்பை பாதியிலேயே நிறுத்தி விடுவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

உயர்நிலைப் பள்ளி அளவில் இது 42.45 சதவீதமாக இருக்கிறது. தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி., பொதுத் தேர்வை சராசரியாக எட்டு லட்சம் மாணவர்களும், பிளஸ் 2 பொதுத் தேர்வை ஆறரை லட்சம் மாணவர்களும் எழுதுகின்றனர்.

இரண்டு பொதுத் தேர்வுகளுக்குப் பிறகு உயர்கல்விக்கு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை சரிந்து வருகிறது. குறிப்பாக, பிளஸ் 2 படிப்பை முடிக்கும் மாணவர்களில் பெரும்பாலானோருக்கு உயர்கல்வி படிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. இதற்கு பொருளாதார பிரச்னை முக்கியமானதாக கூறப்படுகிறது. இந்நிலையில், 2005-06ம் கல்வியாண்டு நிலவரப்படி, தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் இடை நிற்றல் (டிராப்-அவுட்) அளவு குறித்த விவரம் முத்துக்குமரன் கமிட்டி அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ஆரம்பப் பள்ளி வரையான மாணவர்களின் இடை நிற்றல் அளவு 2.74 சதவீதமாகவும், நடுநிலைப்பள்ளி அளவில் 5.22 சதவீதமாகவும் இருக்கிறது. உயர்நிலைப் பள்ளி அளவில் 42.45 சதவீதம் பேரும், மேல்நிலைப் பள்ளி அளவில் 69.45 சதவீதம் பேரும் மேல்படிப்பை தொடராமல் பாதியிலேயே நிறுத்தி விடுகின்றனர். கடந்த 1995-06ம் ஆண்டு நிலையுடன் ஒப்பிடும்போது, மாணவர்களின் இடைநிற்றல் அளவு தற்போது கணிசமாக குறைந்துள்ளது.

பத்தாண்டுகளுக்கு முன்பு ஆரம்பப் பள்ளி வரையான மாணவர்களின் இடைநிற்றல் அளவு 15.85 சதவீதமாகவும், நடுநிலைப் பள்ளி வரையான இடைநிற்றல் அளவு 32.54 சதவீதமாகவும் இருந்துள்ளது. உயர்நிலைப் பள்ளி அளவில் 63.87 சதவீத மாணவர்களும், மேல்நிலைப் பள்ளி அளவில் 81.40 சதவீதம் மாணவர்களும் படிப்பை தொடர முடியாமல் விட்டுள்ளனர். பிளஸ் 2 படிப்பிற்குப் பிறகு மாணவர்கள் படிப்பை தொடர முடியாததற்கு, தேர்வில் தோல்வி அடைவதும் ஒரு காரணமாக இருக்கிறது. அதை எல்லாம் மனதில் கொண்டு தான் பிளஸ் 2 தேர்வில் அதிகமான மாணவர்கள் தோல்வி அடையும் அறிவியல் பாடத்தில் பல்வேறு மாற்றங்களை அரசு கொண்டு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்பு அறிவியல் பாடத்தில் தேர்ச்சி பெற, எழுத்துத் தேர்வில் (தியரி) குறைந்தபட்சம் 40 மதிப்பெண்களும், செய்முறைத் தேர்வில் குறைந்தபட்சம் 30 மதிப்பெண்களும் பெற வேண்டும் என்ற நிலை இருந்தது. இதில், பெரும்பாலான மாணவர்கள் எழுத்துத் தேர்வில் நிர்ணயித்த மதிப்பெண்களை பெற முடியாமல் தோல்வி அடைந்தனர். தி.மு.க., அரசு பொறுப்பேற்ற பிறகு இந்த பிரச்னை கண்டறியப்பட்டு, மாணவர்கள் எளிதில் தேர்ச்சி பெறுவதற்கு வசதியாக எழுத்துத் தேர்வில் 30 மதிப்பெண்களும், செய்முறைத் தேர்வில் 40 மதிப்பெண்களும் எடுத்தால் தேர்ச்சி என்று மாற்றம் செய்யப்பட்டது. எனவே, வரக்கூடிய காலங்களில் தேர்ச்சி பெறக்கூடிய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதோடு, இடைநிற்றல் அளவும் மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நன்றிங்க, தினமலர் 18/11/2007

பொதுவானவை.

2 comments:

பிறைநதிபுரத்தான் said...

மாணவர்கள் எளிதில் தேர்ச்சி பெறுவதற்கு வசதியாக எழுத்துத் தேர்வில் 30 மதிப்பெண்களும், செய்முறைத் தேர்வில் 40 மதிப்பெண்களும் எடுத்தால் தேர்ச்சி என்று மாற்றம் செய்யப்பட்டது. எனவே, வரக்கூடிய காலங்களில் 'தேர்ச்சி' பெறக்கூடிய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதோடு, இடைநிற்றல் அளவும் மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.- செய்தி

அரசின் குறிக்கோள் தேர்ச்சி எண்ணிக்கையா- அல்லது தரமான கல்வியறிவுடைய மாணவர்களின் எண்ணிகையா?

முஸ்லிம் said...

பிறைநதிபுரத்தான் உங்கள் வரவுக்கு நன்றி.

தரம் கொஞ்சம் குறைந்தாலும் பரவாயில்லை. மாணவர்கள் பள்ளிக்கு வந்தால் போதும் என்று அரசு கருதுகிறது போலும்.