Monday, November 05, 2007

வெளிநாட்டுத் தொழிலாளர்களின் ஊதியம் உயருகிறது.

யு.ஏ.இ.: வெளிநாட்டுத் தொழிலாளர்களின் ஊதியம் உயருகிறது

செவ்வாய்க்கிழமை, நவம்பர் 6, 2007

துபாய்: ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வேலை பார்க்கும் வெளிநாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஊதிய விகிதத்தை உயர்த்துவது குறித்து விரிவான அறிக்கை வழங்குமாறு தொழிலாளர் துறையை, எமிரேட்ஸ் அமைச்சரவை கேட்டுக் கொண்டுள்ளது.

ஐக்கிய அரபி எமிரேட்ஸில் வேலை பார்த்து வரும் வெளிநாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் சமீப காலமாக ஊதிய உயர்வு கோரியும், முறையான வீட்டு வசதி கோரியும் போராட்டங்களில் ஈடுபட ஆரம்பித்துள்ளனர்.

சமீபத்திலும் கூட ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகினர். அவர்களில் சிலரை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பி வைத்துள்ளது எமிரேட்ஸ்.

இந்த நிலையில் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான ஊதியத்தை உயர்த்துவது குறித்து எமிரேட்ஸ் அரசு பரிசீலிக்க தொடங்கியுள்ளது.
ஊதிய உயர்வு குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு தொழிலாளர் நலத் துறைக்கு, எமிரேட்ஸ் அமைச்சரவை நேற்று உத்தரவிட்டது.

இதுகுறித்து தொழிலாள் துறை இணைச் செயலாளர் ஹூமைத் பின் தீமாஸ் கூறுகையில், தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டியது அவசியமாகிறது. எனவே இதில் எந்தவிதமான சட்ட மீறலும் இல்லாமல் பார்த்துக் கொள்ளப்படும்.

சில நிறுவனங்கள், தொழிலாளர்களின் சம்பளத்தை நிறுத்தி வைத்துள்ளன. இதை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. இதற்காக அந்த நிறுவனங்கள் கூறும் எந்தக் காரணத்தையும் ஏற்க முடியாது என்றார்.

இந்தியா வரவேற்பு:

தொழிலாளர்களின் ஊதியத்தை உயர்த்துவது குறித்து எமிரேட்ஸ் அரசு எடுத்துள்ள முடிவை இந்தியத் தூதரகம் வரவேற்றுள்ளது. இது மிகவும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கை என்று இந்தியத் தூதரகம் கருத்து தெரிவித்துள்ளது.

இதுகுறித்து துபாயில், இந்திய தூதர் வேணு ராஜாமணி கூறுகையில், இந்த ஆய்வின் முடிவினை அறிய நாங்கள் ஆர்வமாக உள்ளோம். எமிரேட்ஸில் வாழிட செலவுகள் அதிகரித்து விட்டன என்பதை அனைவரும் அறிவார்கள். எனவே இந்த சமயத்தில் இப்படிப்பட்ட முடிவை எமிரேட்ஸ் அரசு எடுத்திருப்பது மிகவும் வரவேற்புக்குரியது என்றார்.

ஊதிய உயர்வோடு, அனைத்துத் தொழிலாளர்களுக்கும் சம வசதிகள் கொண்ட குடியிருப்புத் திட்டம் குறித்தும் ஆய்வு செய்ய எமிரேட்ஸ் அமைச்சரவை உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் எமிரேட்ஸில் பணியாற்றும் அனைத்துப் பிரிவு தொழிலாளர்களுக்கும் சம அந்தஸ்துடன் கூடிய குடியிருப்பு வசதிகள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

எமிரேட்ஸ் அரசின் இந்த இரண்டு முக்கிய முடிவுகளால் அங்கு வேலை பார்த்து வரும் இந்தியத் தொழிலாளர்கள் உள்ளிட்ட வெளிநாட்டுத் தொழிலாளர்கள் மத்தியில் புதிய நம்பிக்கையும், மகிழ்ச்சியும் பிறந்துள்ளது.

நன்றிங்க

எப்படியோ தொழிலாளர்களுக்கு அநீதி இழைக்காமல் கிடைக்க வேண்டிய உரிமைகள் கிடைத்தால் சரி.

4 comments:

குசும்பன் said...

அரிசி ஒரு கிலோவுக்கு 1 திர்ஹாம், பால் லிட்டருக்கு 1 திர்ஹாம், வாட்டர் பாட்டில் 2 திர்ஹாம், வீட்டு வாடகை 20%, ஹோட்டல் சாப்பாடு அனைத்திலும் 1ல் இருந்து 2 திர்ஹாம், ஆப்ரா போட் சர்வீஸ் 50பில்ஸில் இருந்து 1 திர்ஹாம். இப்படி எல்லாமே ஏறி இருக்கிறது கொஞ்சம் ஓரளவுக்கு சம்பளம் வாங்குபவர்களுக்கு பிரச்சினை இல்லை சமாளிக்கலாம் ஆனால் தொழிளார்களுக்குதான் மிகுந்த பிரச்சினை.. பாவம் அவர்கள். அதுமட்டும் இன்று திர்ஹாம் எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 12 இல் இருந்து இப்பொழுது 10 வந்துவிட்டது அதுவும் ஒரு காரணம்..

முஸ்லிம் said...

குசும்பன் உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

விலைவாசியெல்லாம் தானியங்கியாக உயர்ந்து கொண்டு இருக்கிறது. ஆனால் அயல் நாட்டு தொழிலாளர்களின் ஊதியம் மட்டும் பல வருடங்களாக ஆணி அடித்த மாதிரி அசையாமல் அப்படியே இருந்து விடுவது அவல நிலைதான்.

அப்துல் குத்தூஸ் said...

// குசும்பன் said...
அரிசி ஒரு கிலோவுக்கு 1 திர்ஹாம், பால் லிட்டருக்கு 1 திர்ஹாம், வாட்டர் பாட்டில் 2 திர்ஹாம், வீட்டு வாடகை 20%, ஹோட்டல் சாப்பாடு அனைத்திலும் 1ல் இருந்து 2 திர்ஹாம், ஆப்ரா போட் சர்வீஸ் 50பில்ஸில் இருந்து 1 திர்ஹாம். இப்படி எல்லாமே ஏறி இருக்கிறது கொஞ்சம் ஓரளவுக்கு சம்பளம் வாங்குபவர்களுக்கு பிரச்சினை இல்லை சமாளிக்கலாம் ஆனால் தொழிளார்களுக்குதான் மிகுந்த பிரச்சினை.. பாவம் அவர்கள். அதுமட்டும் இன்று திர்ஹாம் எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 12 இல் இருந்து இப்பொழுது 10 வந்துவிட்டது அதுவும் ஒரு காரணம்.. //

இதே பிரச்னைதான் இங்கு சவூதி அரேபியாவிலும் :(

முஸ்லிம் said...

அப்துல் குத்தூஸ் உங்கள் வரவுக்கு நன்றி.